Sunday, May 27, 2012

யாரோ அவர்கள்?அன்புடன் ஒரு நிமிடம் – 7 யாரோ அவர்கள்?

''முன்னேறுவது யார்? வெகு சிலரே. நிறைய பேர் தழுவுவது தோல்வியையே. அந்த கொஞ்சம் பேர் எந்த வகையினர் என்று கொஞ்சம் சொல்லுங்க  தாத்தா,'' கேட்டான் அபிஜித்.

''நீ  என்ன நினைக்கிறே, அதை முதலில் சொல்லேன் பார்க்கலாம்." 

''தங்கள் நம்பிக்கைகள், இலக்குகளை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாதவர்கள். Those who never change them, happen what!. அவங்க தான் முன்னேறுகிறவங்க  இந்த அவனியில்.''

 ''அதெப்படி?'' சிரித்தார். ''அவர்கள் வாழ்கிற அந்த மொத்த வருடங்களில்  எத்தனையோ விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதற்கேற்ப தங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளாமல் அத்தனை காலமும்  இருப்பது எப்படி சரியாகும்? முன்னேற்றம் என்பது தொழில் அல்லது வேலையில், குடும்ப வாழ்வில், ஆரோக்கியத்தில் என்று பல தளத்தில் நிகழ வேண்டியது. அதுதான் வாழ்வு மொத்தத்துக்குமான முன்னேற்றம்.''

''அப்படீன்னா தங்கள் நம்பிக்கைகளையும்  இலக்குகளையும்   அவ்வப்போது மாற்றிக் கொள்கிறவர்கள்? Those who change them as often as they can?”

''நோ. அவர்களும் பல வேளைகளில் தோற்றுப் போகிறார்களே? முன்னேற அவர்களால் எப்படி முழுதும் சாத்தியப்படும்? எதிலுமே பிடிப்பின்றி முழு நம்பிக்கையின்றி அடிக்கடி தங்கள் நினைப்பை மாற்றிக் கொள்கிறவர்கள் எத்தனை சதவீதம்  முன்னேற வாய்ப்பு இருக்கும்? அப்படி அடிக்கடி மாறுகிறவர்கள்.. they are no better in succeeding, either!”

''அப்படீன்னா யார்தாம் ஜெயிக்கிறவங்கன்னு சொல்றீங்க?''

''சொல்றேன். சரி இன்னும் யார் மீதி இருக்கிறாங்க? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?''

''மாறுவதா வேண்டாமா என்று மனம் குமைகிறவர்கள். மாறத் தயங்குபவர்கள். மாறணும்னு தெரியுது, ஆனா முடியலே என்கிறவர்கள். எப்படியும் மாறணும் என தீர்மானித்து ஆனால் அதற்கான எந்த உறுதியான நடவடிக்கைகளிலும் இறங்காதவர்கள். இவர்களால் தானே உலகம் நிரம்பிக் கிடக்கிறது? இவர்கள் தானே மெஜாரிட்டி?''

''ஆம். அவர்களாலும் எப்போதும் வெல்ல முடியாது என்பது உனக்குத் தெரிந்ததே.''

''ஸோ, வெல்கிற வகையினர் என்று...யாரைத்தான்  சொல்வீர்கள்?''

''எந்த வகையினருமே இல்லை. வெற்றி என்பதே அதை அடைகிற காலம் சார்ந்தது. காலம் சார்ந்த ஒன்றுக்கு எப்படி எக்காலத்துக்கும் பொருந்தும் definition இருக்க முடியும்?'' 

''அதாவது?''

''சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான காரியத்தை செய்தால் அது வெற்றியடைகிறது. கவனி. அது, அவன் அல்ல. இதை வைத்து எப்படி மனிதர்களை அடையாள படுத்துவது? வகை பிரிப்பது?''

''அப்படியானால் வெற்றி பெற நாம் செய்ய வேண்டியது என்று எதைச் சொல்வீர்களாம்?''

"ஒரு விஷயத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது. ரெண்டு எப்போதும் முயன்று கொண்டே இருப்பது.''


('அமுதம்' - மே 2012 )

<<<<>>> 


Wednesday, May 23, 2012

அறிவான் அவன்...அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான்
ஆண்டவன் என்மேல்
அதில் சந்தேகமேயில்லை
எத்தனையோ நான் வேண்டினாலும்
அவன் தடை சொல்வதில்லை.
ஏனெனில் என்னைவிட அவனுக்கு
நன்றாகத் தெரிந்திருக்கிறது
எவ்வெப்போது எனக்கு
என்னென்ன வேண்டியது என்பது.
உணவோ பட்டினியோ
செல்வமோ செழிப்பின்மையோ
சாதனையோ சோதனையோ
சற்றைப் பொழுதுக்கு வேதனையோ
அததை அந்தந்த சமயங்களில்
அளிக்கத் தவறுவதே இல்லை
அவன்...

Tuesday, May 15, 2012

ரசனைக் குளியல்...அன்புடன் ஒரு நிமிடம் – 6   

ரசனைக் குளியல்


லை கலைந்திருந்தது. தளர்வாகவும் சோர்வாகவும் காணப்பட்டான் கட்டிலில் சாய்ந்திருந்த கிஷோர். உள்ளே நுழைந்த ராகவ் முகத்தில் கேள்விக்குறி.

"அட உடம்பு சரியில்லையா என்ன, நான் நாளைக்கு வர்றேன்.." என்று கிளம்ப எத்தனித்தார்.

''ஆமா. ஆபீசில் டென்ஷன். வீட்டிலும் கொஞ்சம் பிரசினை. தலையெல்லாம் சூடா இருக்கு. ஒரு குளியல் போட்டுப் பார்க்கலாமான்னு யோசனை. அல்லது ஒரு ரெண்டு மணி நேரம் தூங்கலாம். ஆனா தூக்கம் வராது. அப்படியே கண்ணை மூடி படுத்திருந்தால் கொஞ்சம் பெட்டர் ஆகும்.''

"இதுக்கு முந்தி இப்படி பண்ணியிருக்கியா?''

''பண்ணியிருக்கேன். குறைஞ்சதில்லை தான். ஆனா அதைத் தவிர வேறென்ன பண்ண முடியும்?''

                ராகவ் உட்கார்ந்தார். ''அதான் ஒண்ணும் வொர்க் அவுட் ஆகாதுன்னு சொல்றே இல்லே? அப்புறம் எதுக்கு படுத்து பாயைப் பிறாண்டிக்கொண்டு? அட, வந்த விஷயத்தை மறந்துட்டேனே, உனக்கு அகதா கிறிஸ்டி நாவல் ரொம்பப் பிடிக்கும்னு சொல்லுவியே? ஒரு நல்ல புக் கிடைச்சது. எண்ட்லெஸ் நைட். இப்ப சும்மா படுக்கிறதுக்கு பதில் இதைப் படியேன்.''

''இப்பவேவா?''

''நாளைக்கு இதைத் திருப்பிக் கொடுக்கணும். படிச்சுரு உடனே.'' என்றவர் கிளம்பிப் போய்விட்டார்.

சரியாக மூன்று மணி நேரம் கழித்து போன் பண்ணினார். 

''ஏண்டா கிஷோர், தலையெல்லாம் சூடா இருக்குன்னியே, இப்ப எப்படி இருக்கு?

''அதுவா? நானே உங்களுக்கு போன் பண்ணணும்னு இருந்தேன்... நீங்க கொடுத்த அந்த சுவாரசியமான புத்தகத்தை இப்பதான் படிச்சு முடிச்சேன். இப்ப ஐ ஃபீல் குட் மாமா...சூடா இருந்த மைண்ட் இப்ப கூலாயிடுச்சி.''

''அதனால தான் அந்த புத்தகத்தைக் கொடுத்தேன். இந்த மாதிரி பிரசினை ஏற்படும்போது, தலையெல்லாம் எரிச்சலா உணரும்போது அலட்டாதே. பிடித்த ஒரு புத்தகத்தை பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சுட்டா மனசெங்கும் இனிமையான எண்ணங்கள் உண்டாகிறதில்லையா, அது நம் மனத்தைக் கூல் பண்ணிடும். எரிச்சலோ தலைவலியோ விலகிப் போயிடலாம். பிடிச்சதைப் படிக்கிற பிரயோஜனம் வேறே.''

கூலாகப் புன்னகைத்தான் கிஷோர்.

<<<<>>>>

('அமுதம்' - மே 2012)

Saturday, May 12, 2012

அதற்குள்...
பேச வேண்டிய ஒன்றிரண்டு
முக்கியமான போன் கால்களை
பேசிமுடித்து விடலாம்.
ஓடிச்சென்று குக்கரில்
ஒரு டம்ளர் அரிசியை
போட்டு வைத்து விடலாம்.
பையன் தன்னுடைய அறையில் 
படிக்கிறானா தூங்குகிறானா, 
எட்டிப் பார்த்து விடலாம்.
சர்க்கரையோ காபியோ
சட்டென்று பக்கத்து கடையில்
வாங்கி வந்து விடலாம்.
'சிறிய இடைவேளை'யே
வாழ்க நீ!

<<<>>

Wednesday, May 9, 2012

இதற்காகத்தானா?
 (இது என்னுடைய 101 -வது பதிவு!)

அன்புடன் ஒரு நிமிடம் - 5

இதற்காகத்தானா?

ண்பன் தியாகு வீட்டில் இருந்தான் வினோத். ஒரே பிராஜக்டில் தற்போது இருவரும் அதைப் பற்றித்தான் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். உள்ளே தியாகுவின் மனைவி சித்ரா காபி தயாரித்துக் கொண்டிருந்தாள். மகன் ரவீன் விளையாடிக் கொண்டு…

“...எப்படியும் அந்த டேட்டாவை நாளைக்குள்ளே வாங்கிடணும்... சொல்லிக் கொண்டிருந்தான் தியாகு. பலத்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். ரவீன்தான் தன் கையிலிருந்த கார் பொம்மையை தூக்கி எறிந்தது. எழுந்து சென்ற தியாகு அவனை ஒரு அதட்டல் போட்டுவிட்டு வந்து உட்கார்ந்தான். ”இவன் இப்படித்தான் திடீர்னு எதையாவது தூக்கி எறிவான்.”

பேச்சு தொடர்ந்தது. கொஞ்ச நேரம் பேசுவதற்குள் ரவீன் அழ ஆரம்பித்தான். காலில் எதையோ போட்டு விட்டான் போல. ஓவென்று அழுகை. எழுந்து சென்ற தியாகு அவனை லேசாய்க் கடிந்துவிட்டு, எடுத்து வந்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான். விளையாட ஒரு புது பொம்மையையும் கொடுத்தான். பார்த்துக் கொண்டிருந்த வினோத், “பாருடா அவன் ஏன் அழறான்னா...” என்று தொடங்கவும் அவன் செல் அலறியது. “என்னங்க, தண்ணீர் வரலை குழாயில...” என்றவள் யமுனா, அவன் மனைவி. “வந்து பார்க்கிறேன், என்றான்.

அவர்கள் பிராஜெக்டைப் பேச ஆரம்பித்தார்கள். கொஞ்ச நேரத்தில், விளையாடிக் கொண்டிருந்த ரவீன் இவன் சட்டையைப் பிடித்து பின்னாலிருந்து இழுக்க இவனால் தொடர்ந்து பேச முடியாது போயிற்று. கோபம் தலைக்கு மேல் எறிற்று. “சித்ரா, வந்து இவனைக் கொஞ்சம் உள்ளே எடுத்துட்டுப் போயேன், என்று குரல் கொடுத்தான். “என்னமோ தெரியலே, ரெஸ்ட்லெஸா இருக்கான்.’’

வினோத் சொன்னான், “உனக்கு ஒண்ணு தெரியுமா? : ரவீன் ஏன் இப்படிப் பண்றான்னான்னு யோசிச்சியா? எல்லாமே காரணத்தோடுதான்! உன் கவனத்தை தன்பால் ஈர்க்கத்தான் அப்படியெல்லாம் செய்யறான். ஏன்னா நீ அவனைக் கவனிக்காம என்கிட்ட பேசிட்டிருக்கே, அவன் அம்மா காப்பி போட போயிட்டா. அதான் இப்படி எல்லாம் பண்ணி உங்களை அவங்கிட்ட இழுக்கிறான்!” என்று அதை விளக்கினதும் கேட்டுக் கொண்டிருந்த தம்பதிகள் முகத்தில் பிரகாசம். “அட சரியாச் சொல்லிட்டே!” என்ற தியாகு மனைவியிடம், “காபி எல்லாம் அப்புறம் போடலாம். நாங்க பேசி முடிக்கிற வரை ரவீனை நீ பார்த்துக்க!” என்று அவளிடம் பையனை ஒப்படைத்தான்.


நண்பர்கள் பிராஜெக்ட் விஷயம் தொடரலாயினர். அப்போது மறுபடி செல்லில் யமுனா அழைத்தாள். ”என்னங்க,  அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் ஆயுத பூஜை கொண்டாடறதைப் பற்றிப் பேச வந்திருக்கிறாங்க. உடனே வாங்க!”

“ரைட். அப்புறம் பேசலாண்டா!” புறப்பட்டான் வினோத்..

“பாவம் முக்கியமான விஷயம் டிஸ்கஸ் பண்ணணும்னு வந்து உட்கார்ந்தார். பாதியில போகும்படி ஆகிவிட்டதே? என்று வருந்தினாள் உள்ளிருந்து வந்த சித்ரா, “என்ன பிரசினையாம்?

சொன்னான். ஒரு நிமிடம் யோசித்தாள் சித்ரா, “இதை அவங்களே சமாளிச்சிருக்கலாமே!”

அவள் தோளில் சாய்ந்திருந்த ரவீனைப் பார்த்தான் தியாகு. “எல்லாமே காரணத்தோடுதான்!” என்றான்.


('அமுதம்' ஏப்ரல் 2012 )


<<<<>>>>

Sunday, May 6, 2012

எறும்புக்கு வந்த மவுசு!


அந்த சின்ன எறும்பினால்
இந்தக் கனத்த பனித்துளியை 

முன்னால் தள்ளிச் செல்லவும்
கீழே கொண்டு வரவும் 

தலை கீழாக நகர்த்தவும்

மேலே உயர்த்திச் செல்லவும் முடிகிறது
கைவசம் ஒரு மௌஸ் இருப்பதால்!Tuesday, May 1, 2012

அளவோடு...
நான் அறைக்குள் நுழைந்தபோது நண்பன் கதிரேசன் தன் கம்பெனியின் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு இன்டர்வியூ நடத்திக் கொண்டிருந்தான்.

முதலில் நுழைந்த ஆனந்தி, ஒவ்வொரு கேள்விக்கும் விலா வாரியாக பதிலைச் சொன்னாள்.

அவள் சென்றதும்... உதட்டைப் பிதுக்கினான், ப்ச்!

என்னடா பதில் எல்லாம் சரியாத்தானே சொன்னாள்?”

சரிதான். ஆனால் ரொம்பப் பேசாறாள். இவ்வளவு வளவளன்னு பேசறவங்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது.

அடுத்தாற்போல வந்த ராணி முதலில் வந்தவளுக்கு நேர் எதிர்.  நறுக்கென்று ரெண்டு வார்த்தையில் பதில் தந்தாள்.

ரொம்ப அளந்து பேசறாள் வார்த்தையை. சரிப்பட்டு வரமாட்டாள்.

அதுவும் பிடிக்கலே, இதுவும் பிடிக்கலே. சும்மா காலம் கடத்தறானா?

அடுத்து வந்த அகல்யாவைத் தேர்ந்தெடுத்து விட்டான்.

புருவங்களை உயர்த்திய என்னிடம் சொன்னான். இவங்க பார்க்கப் போறது ரிசப்ஷனிஸ்ட் வேலை. தேவையான இடத்தில் விளக்கவும் தேவையான இடத்தில் வாயை மூடிக்கொள்ளவும் தெரியணும். அதான் ரெண்டிலும் அளவோடு இருந்த இந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தேன்!

(குமுதம் 13- 06- 2007 இதழில் வெளியானது.)