Friday, June 17, 2011

அமைதி.. சிலிர்ப்பு..

அமைதி 
வேறெதுவும் வேண்டாம் போல் 
தோன்றுகிற மாலை 
வெறுமே என் உள்ளத்தை 
வைத்திருக்கும் வேளை
தானெதுவும் சொல்லாது 
தழுவுமொரு அமைதி 
எதையோ என்னிடம் 
வேண்டி நிற்கிறது.


சிலிர்ப்பு 


சிதறிக் கிடக்கும்
சம்பங்கி மலர்கள்
ஒன்றின் மேல் கூட 
பட்டு விடாமல்
சைக்கிளை ஓட்டிச்
சென்றதில் நேர்ந்த
தடுமாற்றம்
அதில் வென்றதும்
சிலிர்க்க வைத்தது.

Monday, June 6, 2011

இணைந்து நின்று...


''என்ன  வசந்த்?'' என்று நோக்கினார் திருவேங்கடம். எம்.டி. ''சொல்லு.''
''இசட் கம்பெனிக்கு நாம் அனுப்பின என்ட்ரியை நிராகரிச்சிட்டாங்க.''
''ஓஹோ? இம்ப்ரூவ் பண்ணித் தரச் சொல்றாங்களா?''
''வரதன் அட் கம்பெனியோட கான்செப்டை தேர்ந்தெடுத்துட்டாங்க.''
''அட, நிஜமாவா?'' முகத்தில் ஆச்சரியம் காட்டினார்.
''ஆமா சார், எத்தனை பாடுபட்டுத் தயாரிச்சு அனுப்பினது?''
''ஆமாமா,'' என்றார் திரு உணர்ச்சியை முகத்தில் கொட்டியபடி, ''எனக்குத் தெரியாதா என்ன? காபி ரைட்டர் வினித் முதலில் ஒரு டிசைன் போட்டுக் கொடுத்தான். அது சரியில்லே, வேறே போட்டுட்டு வான்னு அனுப்பினே.  அப்புறம் வரிசையா அவன் கொடுத்த மூணுமே போதுமான  திருப்தி தரலே உனக்கு. அப்பால கதிர்வேலைப் போடச்  சொன்னே. அந்த நாலுமே தேறலே. பிறகு ரங்கா போட்டுத் தந்த மூன்றில் கடைசியா ஒன்றை ஓகே செய்வதற்குள் எத்தனை சிரமம் எடுத்துக் கொண்டாய் நீ?''
''அப்படியிருந்தும் அந்த ஆட்கள் -- நேத்து முளைச்ச விளம்பர கம்பெனி -- ஆர்டரைக் கவ்விட்டுப் போயிட்டாங்களே சார்?''
''அது எப்படின்னு ஆச்சரியப்படறே இல்லே?''
''ரொம்ப பாஸ்! ஏதோ லக் தான்.''
''இதுலே ஆச்சரியப்பட ஏதுமில்லே வசந்த். அவர்களோட வொர்கிங் பாட்டர்ன் எப்படின்னு விசாரித்தேன். சீஃபிலிருந்து காபி ரைட்டர் வரை எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து ஒவ்வொரு கான்செப்டாக டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு அம்சமா விருத்தி செய்து எல்லாருடைய பெஸ்டும்  வர்ற மாதிரி ஒரு அட்  தயாரிக்கிறாங்க. உங்களை மாதிரி தனித்தனியா உட்கார்ந்து ஒவ்வொன்றிலும் விமரிசனப் பார்வையை ஓட விடாமல் டீம் வொர்க் செய்யறாங்க. அதான் நம்மை தோற்கடிச்சிட்டாங்க. இனிமேலாவது...?''
''புரிகிறது சார்,'' என்றான் வசந்த்.