Monday, October 17, 2011

பசித்தாலும்...


''என்னங்க, அந்த பி.இ.பையனையே பேசி முடிச்சிடலாம். நம்ம பொண்ணுக்குப் பொருத்தமா இருக்கான்.''
''எனக்கு மட்டும் என்ன ஆசை இல்லாமலா கௌரி? ஆனா அவங்க ரொம்பக் கேட்கிறாங்களே? பேசாம இந்த எம்.சி.ஏ.வையே பார்ப்போம். நமக்குத் தகுந்த இடம்.''
''அதில்லேங்க, நம்ம பையன் சேகர்தான் இப்ப சினிமாவில பிரபலமாகி நாலஞ்சு படத்தில நடிச்சிட்டு இருக்கானே, இப்ப அவனைப் போய்ப் பார்த்து தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு லட்சம் தான்னு கேட்டால் தரமாட்டேன்னா சொல்லப் போறான்?''
''சரிதான், படிப்பைப் பாதியில விட்டிட்டு குடும்பப் பொறுப்பில்லாம ஓடிப் போனான். என்னான்னு கேட்கலே இதுவரை.  இப்பபோனால் எப்படிப் பேசுவானோ?''
''அதெல்லாம் நம்ம பையன் அப்படி ஒண்ணும் சொல்லமாட்டான். உங்களைப் பார்த்தா போதும், உருகிடுவான்.''
ரை நம்பிக்கையோடு மாநகரம் வந்திறங்கியவர் கண்ணில் அந்த போஸ்டர். மகன் எழுதி இயக்கி நடித்த படம் ரிலீசாகியிருந்தது.
 பார்த்துவிட்டுப் போனால் ரசித்த காட்சிகளை அவனிடம் சொல்லலாம். சந்தோஷப் படுவான்.
உள்ளே நுழைந்தார். தொடங்கி விட்டிருந்தது. திரையில் சேகர். ஆவேசமாகப் பேசினான்.
''...எந்த மூஞ்சியை வெச்சிட்டு என் முன்னே வந்து நிற்கிறே? அன்னிக்குக் கேவலம் நாற்பது ரூபாய்க்கு  உன்னை எப்படியெல்லாம் கெஞ்சினேன்? கொஞ்சமாவது இரக்கப்பட்டியா? கண்டபடி திட்டினே. வீட்டை விட்டு ஓடினேன். பட்டணத்துக்கு வந்து தெருத்தெருவா அலைஞ்சு... இன்னிக்கு நல்லா இருக்கேன்னா அது என் சொந்தத் திறமை! இப்ப அதில குளிர் காய வந்திருக்கியா?''
இவருக்கு சேகர் ஒரு நாள் தன் அபிமான நடிகருக்கு கட் அவுட் வைக்க நாற்பது ரூபாய் கேட்டதும் தான் மறுத்ததும் நினைவில் ஓடிற்று. நம்மைத்தான் சொல்கிறானா? இருக்காது. இது வெறும் கதை தானே? அதற்கு மேல் படம் பார்க்க முடியவில்லை. வெளியே வந்தார்.
விசாரித்து மகனின் வீட்டுக்குள் நுழைந்தபோது...
''நான்தான் சேகரோட அப்பா,'' என்றதும் வேலையாள் பிரமாதமாக உபசரித்தான். ''இதோ வந்திருவாருங்க.குளிச்சிட்டிருக்கார்.''
டீப்பாயில் கிடந்த பேப்பரில் டைரக்டர் சேகரின் பேட்டி வெளியாகியிருந்தது.  ஆவலுடன் எடுத்துப் படித்தார்.
நிருபர்: உங்க படத்தில், வசனம் எல்லாம் தத்ரூபமா இருக்கே, காரணம்?
சேகர்: அதுவா? அனுபவம்தான். நான்  எல்லாவற்றையும்  என் அனுபவத்தில் இருந்துதான் எடுக்கிறேன்.
பேப்பரை மடித்து வைத்தார்.
''வாங்கப்பா, என்ன விஷயம்?'' தலையைத் துவட்டியபடியே வந்தான் சேகர். ''டேய், அப்பாவுக்குக் காபி கொடுத்தியா?''
''ஒண்ணுமில்லேப்பா, உன் தங்கச்சிக்கு கல்யாணம் பேசியிருக்கோம். பையன் எம்.சி.ஏ.  எங்களுக்குத் தகுந்த இடம். உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.''
கொஞ்சமும் தயக்கமின்றிப் பேசிய வார்த்தைகளில் அவரை அறியாமலேயே ஒரு பெருமிதம் சேர்ந்திருந்ததது!


13 comments:

Rekha raghavan said...

/கொஞ்சமும் தயக்கமின்றிப் பேசிய வார்த்தைகளில் அவரை அறியாமலேயே ஒரு பெருமிதம் சேர்ந்திருந்ததது! //

இந்த அருமையான கதையை எழுதிய உங்களுக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

நன்றாக இருக்கிறது சார் உங்கள் கதை...

குறையொன்றுமில்லை. said...

கதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

கதை நன்றாக இருக்கிறது.

இடைவெளிகள் said...

கதை நெஞ்சை தொட்டு நிற்கிறது. அருமையான கதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//''ஒண்ணுமில்லேப்பா, உன் தங்கச்சிக்கு கல்யாணம் பேசியிருக்கோம். பையன் எம்.சி.ஏ. எங்களுக்குத் தகுந்த இடம். உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.''

கொஞ்சமும் தயக்கமின்றிப் பேசிய வார்த்தைகளில் அவரை அறியாமலேயே ஒரு பெருமிதம் சேர்ந்திருந்ததது!//

தலைப்பு அருமை. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது தான். அந்த அப்பா மிக நல்ல கதாபாத்திரம். பகிர்வுக்கு நன்றிகள்.

Suganthan said...

தனக்கு சரி எனத் தெரிவதை மகனிடம் வலியுறுத்துவது கடமை; மகள் கல்யாணத்திற்காக மகனிடம் பணம் கேட்பது உரிமை - அல்லவா?

ஸ்வர்ணரேக்கா said...

நல்ல கதை.. தலைப்பு அருமை..

மனோ சாமிநாதன் said...

தலைப்பும் கதையும் மிக சிற‌ப்பாக இருக்கிறது!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

யாராக இருந்தால் என்ன? ஏதாவது கேட்கும் போது கூச்சம் வரத் தான் செய்கிறது...கதை சூப்பர்..

ரிஷபன் said...

தலைப்புக்கேற்ற அருமையான கதை.

ஷைலஜா said...

ஜனா டச் கதையில் பரிணமிக்கிறது! பாராட்டுக்கள்! தீபாவளிவாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

தலைப்புகேற்ற அருமையான முடிவு
அருமையான கதை
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!