Thursday, October 6, 2011

வாழ்த்து

குநாதன் தீர்மானமாகச் சொன்னார், ''என்னால் அந்தக் கல்யாணத்துக்கு வரமுடியாது!''
சௌம்யா இடிந்து போனாள். இத்தனை எடுத்துச் சொல்லியும் இவர் நிர்த்தாட்சண்யமாக மறுக்கிறாரே!
அவளுடைய மாமா மகனுக்குக் கல்யாணம்.  மாமாவுக்கும் இவருக்கும் ஆகாது.  பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தி இருக்கிறார்.  தங்கள் பாட்டுக்கு ஒதுங்கியிருந்தபோதும் திமிர் என்று வர்ணிப்பார். அவர் பிள்ளைகளும் இவரை வயதுக்குக் கூட மதிப்பதில்லை.
''இத பாருங்க, கல்யாணம் காட்சின்னு வரும்போது  அவங்க நம்மை மதிச்சாலும் மதிக்காவிட்டாலும் நாம போய் தலையைக் காட்டிட்டு மணமக்களை வாழ்த்திட்டு வந்திடணுங்க.''
''ஐயோ சௌம்யா, அவங்க நம்மை மதிக்கலைங்கிற காரணத்தால நான் அங்கே வரத் தயங்கலே...''
''அப்புறம் என்ன யோசனை?''
''சௌமீ, நாம போறது எதுக்கு? மணமக்களை வாழ்த்தறதுக்குத்தானே? அந்த வாழ்த்து உதட்டிலேருந்து  வந்தா போதாது. மனசார நம்ம உள்ளத்திலேருந்து வரணும். நம்ம மனசிலே அவங்க பேரில் கோபமும் வருத்தமும் இருக்கும்போது எப்படி அது வரும்? அப்புறம் நாம போறதிலே என்ன அர்த்தம்? யாருக்கு என்ன பிரயோசனம்?''
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அவரது அம்மா   சொன்னாள், ''இத பாரு ரகு, நீ சொல்றது சரிதான். உன் மனசில்விசனம் இருக்கும்.  வார்த்தைகள் வெளி உதட்டிலேயிருந்துதான் வரும். ஆனால் இது வெளியில் யாருக்காவது தெரியப்போகிறதா? இல்லையே? அவங்க கோணத்திலேயிருந்து பாரு. நீங்க சிரிச்சபடியே அங்கே வர்றீங்க. எல்லா நிகழ்ச்சியிலேயும் கலந்துக்கறீங்க. கைகுலுக்கி வாழ்த்தறீங்க. அதைக் கேட்டு அவங்க மனசு சந்தோஷம் அடையுது. பார்க்கிறவங்களும் சந்தோஷப்படறாங்க. அத்தனை பேரையுமே சந்தோஷப்படுத்த நம்மால முடியுதுன்னா அப்புறம் பிரயோசனமில்லைன்னு ஏன் நினைக்கிறே? யார் கண்டது? ஒரு வேளை அந்த சந்தோஷ சூழ்நிலையில் உன் மனசிலேயும் ஒரு மன்னிப்பு உண்டாகி  மனசார அந்த வாழ்த்தை வாழ்த்திடலாமில்லையா?''
அதுவும் சரிதானே? புறப்பட்டார் ரகுநாதன்.


11 comments:

பத்மநாபன் said...

அம்மாவின் அறிவுரை அருமை ... அவர்கள் வழியிலே போய் அவர்களை வழிக்கு கொண்டு வருவது ...

ரேகா ராகவன் said...

மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதில் உள்ள இன்பம் வேறெதிலும் கிடைக்காது என்பதை உணர்த்திய கதை. அருமை.

ரிஷபன் said...

எனக்கும் இந்த குழப்பம் வரும். இந்தக் கதையில் சொல்வது போல அந்தச் சூழல் நம் மனநிலையை மாற்றிவிடும் வாய்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.
நல்ல மனோ தத்துவம்

வெங்கட் நாகராஜ் said...

அம்மா சொன்னது சரியான சொல்... நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. நல்ல கதை.

பத்மநாபன் said...

அம்மாவின் அறிவுரை அருமை ... அவர்கள் வழியிலே போய் அவர்களை வழிக்கு கொண்டு வருவது ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு வேளை அந்த சந்தோஷ சூழ்நிலையில் உன் மனசிலேயும் ஒரு மன்னிப்பு உண்டாகி மனசார அந்த வாழ்த்தை வாழ்த்திடலாமில்லையா?''//

அந்த அம்மா சொன்ன வார்த்தைகள் அருமை தான்.
நல்லதொரு நீதிக்கதை. வெறுப்புகளை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்துப் போவதே சிறந்தது.

Lakshmi said...

நல்ல கதை அம்மாவின் வார்த்தைகள் அனுபவத்தின் வெளிப்பாடு சுகம்.

அப்பாதுரை said...

ரசித்தேன். காட்சி கோணத்தைப் பொருத்தமையும் என்பது சரியே

தக்குடு said...

இதுக்கு தான் வீட்ல ஒரு வயசான அம்மா இருக்கனும்ங்கர்து!!! :))

Suganthan said...

அதுவும் சரிதான்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!