Monday, April 4, 2011

பாடாத பாடல்கள் - 2






பாடல் காட்சி வெறும் பாடல் காட்சியாக மட்டுமில்லாது திரைக் கதையின் ஓர் அங்கமாக இருந்தால் எத்தனை ருசிகரமாக இருக்கும்! இதோ இப்ப பாட்டு வரும்னு சொல்றமாதிரி இல்லாமல் off beat ஆக, பொருத்தமாகவும் புதுமையாகவும் வந்த பாடல்கள் சிலவற்றை பதிவிட்டிருந்தேன். இதோ அதன் தொடர்ச்சி.
7 . சொல்ல வேண்டியதே இல்லை. அற்புதமாகத்தானே இருக்கும் அந்தக் காட்சி? 'நூறு பாடல் தொடர்ந்து பாட வேண்டும் அம்பிகாபதி. ஆனால் ஒரு முறை கூட எதிரில் மாடத்திலிருக்கும் தன் காதலி அமராவதி(பானுமதி)யின் முகத்தைப் பார்க்கக் கூடாது..' இந்த நிபந்தனைக்கு உட்பட்டு சிவாஜி ாடுவார். எங்கே அவர் தோற்று விடுவரோ என்ற பதைபதைப்புடன் நம்மைப் பார்த்து ரசிக்க வைக்கும் அந்தப் பாடல் ''சிந்தனை செய் மனமே..'' மறைந்த மேதை ஜி. ராமநாதன் இசையில் அமைந்த மறையாத பாடல் அம்பிகாபதி படத்தில் வருவது. கடைசியில் அவர் தோற்று விடுவதால் தான் கதை நாட்டில் காவியமானது, பாடல் நம் மனதில் ஓவியமானது.
8. 'பட்டணம் தான் போகப் போறேண்டி பொம்பளே..பணம் காசு பார்க்கப் போறேண்டி, நல்ல கட்டாணி முத்தே நீயும் வாடி பெண்டாட்டி தாயே...' என்று கணவன் அழைக்க 'டவுனு பக்கம் போகாதீங்க.. மாமா டவுனாகிப் போயிடுவீங்க,' என்று அவள் தடுக்க அந்தத் தெருக் கூத்து பாடல் 'காலம் மாறிப் போச்சு' (1957)படத்தில் வரும். பட்டணத்தில் என்னென்ன சொகுசான சௌகரியங்கள் என்று அவன் அடுக்க அதில் என்னென்ன இக்கட்டும் இடரும் என்று அவள் சொடுக்க பாட்டிலேயே அவன் திருந்தும் சுவையான பாடல்.
9.உலவும் தென்றல் காற்றினிலே... ராஜ குமாரியை குறி வைத்து ஏமாந்து மந்திரி குமாரியை மணந்த வில்லன் அவளை ஓடத்தில் உலா அழைத்துப் போகும் பாடல். ஒவ்வொரு வரியும் அர்த்தம் உள்ளதாக இருக்கும் இந்தப் பாடலில். 'தெளிந்த நீரைப் போலத் தூய காதல் கொண்டோம் நாம்...' என்றவள் தொடங்க, 'களங்கம் அதிலும் காணுவாய், கவனம் வைத்தே பார்.'. என்று அவன் கோடி காட்ட அந்த அப்பாவி மடந்தை அதையும் அவன் குறும்பாக எடுத்துக் கொண்டு 'குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?' என்று பாடுவாள். ஜி. ராமனாதனின் மிக மனம் தொடும் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு நிகர் இதுவரை வரவில்ை.
10. ஆயுதம் இழந்து நிற்கும் ராவணனைப் பார்த்து ராமன் 'இன்று போய் நாளை வாராய்...' என்று சொல்வான் அல்லவா? சம்பூர்ண ராமாயணம் படத்தில் அந்தக் காட்சியைத் தொடர்ந்து வரும் காட்சி இருக்கிறதே இப்போது நினைத்தாலும் மனதில் உருக்கம் இழையோடும். ஆம், அரண்மனைக்கு வந்ததும் ராவணன் அந்த தன் அவல நிலையை நினைத்து வீணை இசைத்து மனம் வாடிப் பாடும் பாடல் கே. வி. மகாதேவன் இசையில் மிளிரும். ''இன்று போய் நாளை வாராய்.. என எனை ஒரு மனிதனும் புகலுவதோ...மண் மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை ஏன் கொடுத்தாய் இறைவா...''
11. 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்.. அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்...' இந்தப் பக்கம் சிவாஜி குனிந்து தரையில் அமர்ந்து தன் காதலியின் அப்பா முன் மரியாதையாக பாட அந்தப் பக்கம் சோபாவில் அமர்ந்திருக்கும் எம். ஆர். ராதா உற்சாகமாகி உடன் ஸ்வரம் பாட, 'மாமா!' 'மாப்ளே!' என்று ஒருவரை ஒருவர் நெருங்க ஏற்கெனவே சிவாஜியைக் கொலை செய்ய வந்த வில்லனின் முகமும் வருங்கால மாமாவின் முகமும் ஒன்று போலிருக்கும் என்பதறிந்த நாம் அவர்கள் முகம் பார்த்து பதறப் போகும் வினாடியை எதிர்பார்த்து விலா நோக சிரித்து ரசிக்கும் அந்த சுவையான கர்நாடக சங்கீத காமெடிப் பாடல்...
12. மேற்கொண்டு ஒரு வார்த்தை சொல்ல வேண்டாம். சிவாஜி நடித்த முதல் மரியாதை. என்றாலே போதும், அந்த அற்புதமான காட்சிப் பாடல், இளைய ராஜாவின் 'பூங்காற்று' எல்லார் மனதிலும் திரும்பும்!

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிந்தனை செய் மனமே... ஆஹா நம் சிந்தனையையும் கவரும் அற்புதமானதொரு பாடல்தான்.

பட்டணம்தான் போகப்போறேண்டி ...
நாட்டு எலியும் நகரத்து எலியும் கதை போல, பலவற்றை உணர்த்தும் அருமையான பாடலே!

உலவும் தென்றல் காற்றினிலே.
பாடல் மட்டும் கேட்டுள்ளேன். படம் பார்க்காததால் வரிகளை, மிகச்சரியாக ரசிக்க முடியவில்லை.

''இன்று போய் நாளை வாராய்.. என எனை ஒரு மனிதனும் புகலுவதோ...மண் மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை ஏன் கொடுத்தாய் இறைவா...''

மாவீரன் ராவணனே கலங்கிப்போய் பாடும் அருமையான பாடல் தான்.

'மாமா!' 'மாப்ளே!' இது எங்கள் எல்லோருக்குமே, குறிப்பாக என் மனைவிக்கு மிகவும் பிடித்தமான பாடல். அருமையாக இருக்கும்.
வீடியோ & ஆடியோ பதிவு செய்து மீண்டும் மீண்டும் போட்டுக்கேட்டுள்ளோம் ஒரு காலத்தில்

'பூங்காற்று' எல்லார் மனதிலும் திரும்பும்!
திரும்பிவிட்டது என்பது தானே உண்மை

தொகுத்தளித்தமைக்கு என் நன்றிகள், பாராட்டுக்கள்.

Chitra said...

நல்ல பகிர்வு. நீங்கள் குறிப்பிட்ட பாடல்களை நான் கேட்டதில்லை. ஆனால் நீங்கள் அறிமுகப்படுத்தி இருக்கும் விதமே நன்றாக இருக்கிறது. :-)

R.Gopi said...

சூப்பர் செலக்‌ஷன்....

நிறைய பாடல்கள் கேட்டிருக்கிறேன்...

குறிப்பாய் அம்பிகாபதி - சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே..சிவகாமி மகனை, ஷன்முகனை...

இந்த பாடலையும் சேர்த்து அம்பிகாபதியில் வரும் அனைத்து பாடல்களிலும் ஜி.ராமநாதன் இசை சாம்ராஜ்யமே நடத்தி இருப்பார்...

ADHI VENKAT said...

எல்லா பாடல்களுமே அருமையான பாடல்கள். நல்ல தொகுப்பு சார்.

வெங்கட் நாகராஜ் said...

இங்கே குறிப்பிட்ட எல்லா பாடல்களையும் ரசித்திருக்கிறேன். இருப்பினும் உலவும் தென்றல் காற்றினிலே மிகவும் ரசித்த பாடல். பாடல்கள் பற்றிய உங்கள் குறிப்புகள் அழகு...

RVS said...

எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள். நீங்கள் அறிமுகப்படுத்திய விதம் அட்டகாசம். ;-)

குறையொன்றுமில்லை. said...

எல்லாபாடல்களுமே காலத்தால் அழியாத பாடல்கள்தான்.மிகவும் பிடித்தபாடலும்கூட நன்றி

Rekha raghavan said...

அனைத்து பாடல்களுமே அர்த்தம் பொதிந்தவை. அதை உங்களின் விவரிப்புடன் படித்தபோது அவற்றை மீண்டும் தேடிப் பிடித்து கேட்க வைத்தது. நல்ல பதிவு.

தக்குடு said...

நல்ல ரசிச்சாதான் அந்த பாட்டை பத்தி இவ்ளோ அழகா எழுத முடியும். நீங்க சொன்ன பாடல்கள் எல்லாமே நான் கேட்டு இருக்கேன் சார்!.:)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அந்த சிந்தனை செய் மனமே..அருமை! யாராவது ராகம் நன்றாகப் பாடத் தெரிந்தவர்கள், இந்த சிந்தனை செய் மனமேவில் பல்லவி..அப்படியேப் போய், கல்யாணி ராக வர்ண சிட்டஸ்வரம்..அப்புறம் ’அந்தருட்கருள் ஞான தேசிகனை’ ஆலாபனை,
அப்புறம் அந்த ராக சரணம் என்று அமர்க்கள ப் படுத்தலாம்..அவ்வளவு விஷயம் இருக்கு அதுல!!!

goma said...

அருமைஅயான தொகுப்பு.அனைத்து பாடல்களுமே எனக்கும் பிடித்தமானவையாக இருக்கின்றன.
அதில் ‘இன்று போய் நாளை வாராய்..பாடல் அற்புதம்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!