அன்புடன் ஒரு நிமிடம்-4
குப்பையிலும் மலரும் பூக்கள்...
''ஏன் தாத்தா, குப்பைச்செடிக்கு ஏதாச்சும் விசேஷம் உண்டா?'' கேட்டான் அபிஜித். ''கிடையாது தானே?''
எட்டவே எட்டாத விஷயம் தன் ஐ.க்யூவுக்கு என்றால் அவன் ஓடி வருவது தாத்தாவிடம் தான்.
''சரி, நீ விஷயத்துக்கு வா,'' என்றார் சாத்வீகன். ''என்ன சந்தேகம் இப்போ?''.
''நேத்து முழுக்க தலையைப் பிய்ச்சுக்கிட்டேன்...'' என்று ஆரம்பித்தான் அபிஜித். ''அப்பா அம்மாவோட நம்ம ஏகாம்பர மாமா வீட்டுக்கு போயிருந்தப்ப தான்... அப்பா இருக்காரே அவரு திடீர்னு பேச்சுக்கு நடுவில அம்மாவிடம், 'வர்ற வழியில பார்த்தியா, குப்பை மேல செடி செடியா வளர்ந்து கிடந்ததே?'ன்னு கேட்டார். நார்மலா வீட்டில வெச்சு இப்படியெல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாம அவரு பேசறதே கிடையாது.''
''அப்படியா?''
''ஆமாங்கிறேன். எனக்கு புரியலே. என்ன தாத்தா இது? இந்த அப்பா என்ன இப்படியெல்லாம் பெனாத்த ஆரம்பிச்சிட்டாரு?''
''யோசிச்சுப்பாரு, புலம்பினாரா என்ன?''
யோசிக்கையில் அப்படி இல்லை என்று தோன்றிற்று
''கொஞ்சம் விலாவாரியா சொல்லு. அப்ப என்ன பேசிட்டிருந்தாங்க?''
''அப்பா புது வீடு கட்டினப்போ வேலை முடியாம, வெளியில வாங்கின கடனைப் பத்தி பேசிட்டிருந்தாங்க எல்லாரும். அது தப்புன்னு மாமா லெக்சர் விட்டிட்டு இருந்தாங்க. அம்மா அப்ப ஏதோ ஒரு பாயிண்டை வேகமா சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்பத்தான் இவரு, 'வர்ற வழியில பாத்தியா, குப்பை மேல செடி செடியா வளர்ந்து கிடந்ததே, பார்க்க அழகா இருந்ததில்லையா?'ன்னு...''
''அப்புறம்?''
''அம்மா ஒரு நிமிடம் முழிச்சாங்க. அப்புறம், ஆமா ஆமான்னு பதில் சொன்னாங்க. அப்பா மாமாகிட்டே ஏதோ பேச ஆரம்பிச்சிட்டாங்க. அம்மாவும் தொடர்ந்து மாமாவிடம் விட்ட இடத்திலேயிருந்து பேசினாள். நான் தான் தலையைப் பிய்ச்சுக் கிட்டேன்!''
ஒரு நிமிடம்தான் யோசனை செய்தார் தாத்தா. ''டே உங்கப்பா விவரமான ஆளு தான். ஒரே வார்த்தையில் எக்கச்சக்கமான சூழ் நிலையை சரி பண்ணிட்டாரே? வீடு கட்ட கடன் வாங்கினதை மாமா விமரிசிக்கிறார். அது அவர் ஐடியா. நம்மைக் குத்தம் சொல்ற மாதிரி அதில் வார்த்தைகள் விழுந்தாலும் அவருக்குள்ள அக்கறையில பேசறார், அவரோட ஐடியாக்களை சொல்றார். அதிலுள்ள நல்லதை எடுத்திட்டு மற்றதை விட்டுடனும். அதை உபயோகிச்சு நாம மேம்பட முடியுமான்னு பார்க்கணும்.இதான் அப்பாவோட மெசேஜ் அம்மாவுக்கு. அழகா கொடுத்திட்டார். அவளும் புரிஞ்சிட்டு பேச்சை தகுந்தாற்போல மாத்திக்கிட்டா. ஐடியல் தம்பதிதான்.''
''என்ன தாத்தா இது? அதுக்கு குப்பைச்செடின்னு சொன்னால்?''
''குப்பையில வளர்ற செடி என்ன பண்ணுது? அதிலுள்ள நல்ல சத்தை மட்டும் எடுத்து, தான் அழகாக வளருது. இல்லையா?'' என்று சிரித்தார் அழகாக.
<<<<>>>>
10 comments:
குப்பை மூலமே நல்ல கருத்துக்களை தெளிவாக விளக்கிய சாத்வீகனுக்கு "கருத்து வீரர்" என்ற பட்டமே கொடுக்கலாம்!
நல்லதும் கெட்டதும் கலந்திருக்கும்போது நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்வில் எல்லாமே வெற்றி தான் என்பதை அழகாய்ச் சொன்ன பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி.
கடன் வாங்கி வீடு கட்டுவதை, கவலையுடன் பெரியவர் நாசூக்காக தெரிவித்துள்ளார் போலத் தெரிகிறது.
குப்பையில் வளர்ந்தாலும் செடிகள் நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டு, வளர்ந்து அழகாகக் காட்சியளிப்பது அருமையே.
நல்ல பகிர்வு.
அருமையான சிந்தனை. அழகுப் படைப்பு. வாழ்த்துக்கள்.
நல்ல சாதுர்யம். நல்ல புரிதலும் கூட.
/ நல்லதை எடுத்திட்டு மற்றதை விட்டுடனும்./
இதை நாசூக்காகத் தெரிவித்த அப்பாவும் சட்டெனப் புரிந்து கொண்ட அம்மாவும் அவர்களைக் கொண்டாடும் தாத்தாவும்..
பேரன் நல்லா வருவான். நல்ல கதை.
நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும், பெரியவர்கள் பேசுவதில் .என்று கதை மூலம் புரிகிறது.
புரிந்து கொண்ட பேரன் நாளை புரிந்து நடந்து கொள்வான்.
தாத்தாவிற்கு வாழ்த்துக்கள்.
நல்லதும் கெட்டதும் கலந்திருக்கும்போது நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்வில் எல்லாமே வெற்றி தான் என்பதை அழகாய்ச் சொன்ன பகிர்வு.
நல்லா இருக்கு வாழ்த்துகள்.
அருமையான கதை. அப்பா கையாண்ட விதத்தை அம்மா புரிந்து கொண்டதும், தாத்தா அதை விளக்கி பேரனிடம் சொன்னதும் அருமை. பேரனும் சரியாக கவனித்து இருக்கிறான்.
இதுல பூதான் இருக்கு. குப்பையே காணுமே.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!