Tuesday, August 6, 2013

சந்தோஷ வியப்பு...





அன்புடன் ஒரு நிமிடம் – 40

 

முகமே சொல்லிற்று முன்கதைச் சுருக்கத்தை. மூன்று நாளாகியும் சரியாக பேசவில்லை ஜனனி. சென்னைக்குப் போய் வந்த நாளிலிருந்தே!  வாசுவுக்கு வேலை ஓடவில்லை. என்னவோ அவர் செய்தது பிடிக்கவில்லை. கேட்டுவிட வேண்டியதுதான்.

கேட்டார்.

பின்னே என்ன நீங்க? ஒவ்வொரு தடவை சென்னைக்கு போகும்போதும் நான் படிச்சு படிச்சு சொல்லி அனுப்பறேன். அப்புறமும் இப்படிப் பண்ணிவிட்டு வந்தா எப்படி? அவன் என்ன நினைப்பான்?”

இதுக்கு நீ சொல்லாமலே இருந்திருக்கலாம்.

புரியலியா? எதுதான் உங்களுக்கு உடனே புரிஞ்சது? மாசத்தில ஒரு தடவையாவது உங்க வேலையா சென்னைக்குப் போறீங்க. ஒவ்வொரு தடவையும் அங்கே உங்க சின்னத் தம்பி முருகேஷ் வீட்டில தங்கறீங்க. அவன் வீடு தொலைவா அம்பத்தூர்ல இருக்கு. ரெண்டே ரூம்ல சின்ன வீடு. அவங்களே அஞ்சு பேர். ராத்திரி தூங்க சோபாவிலதான் சரியணும். வெந்நீர் போட ஒரு ஹீட்டர்? வேர்வையைப் போக்க ஒரு கூலர்? நேரம் போக்க ஒரு டிவி? ஒண்ணும் கிடையாது. வேலைக்குப் போய்வந்தா அவன் ட்யூஷன், இலக்கிய கூட்டம்னு றெக்கை கட்டி பறந்துட்டே இருப்பான், நின்னு பேச நேரமில்லாம. அவன் மனைவி எம்பிராய்டரி, கைவினைப்பொருள் செய்யறதுன்னு சதா ஓடிட்டிருப்பாள். ஒரு சின்ன பைக்தான் வெச்சிருக்கான். உங்களை அங்கே இங்கே அழைச்சிட்டுப் போகிறதுக்கு வசதி அறவே இல்லை.

உண்மைதான்!

உங்களுக்கே தெரியுதில்லே? அதே சமயம் உங்க பெரிய தம்பி ப்ரேம் பக்கத்தில நுங்கம்பாக்கத்தில இருக்கிறான். விஸ்தாரமான பெரிய வீடு. நீங்க போனால் தங்க ஏசி ரூம்.  ஹீட்டர். எல்.இ.டி டிவி.. ரெண்டு கார். அவனும் எப்பவும் பிரீயா தான் இருப்பான், அரட்டைக்கு அரட்டை. இல்லே அவனே எங்கே வேணா அழைச்சிட்டு போவான். இத்தனை வசதி இருந்தும் நீங்க அங்கே தங்கலேன்னா எப்படி?”

அதான் அங்கே தங்கலே! என்றவரை வியப்புடன் பார்த்தாள்.

புரியலியே?”

எதுதான் உனக்கு உடனே புரிஞ்சது?” சிரித்தார்.  முருகேஷ் வீட்டில வசதி கம்மிதான். ஆனா அந்த வட்டத்துக்குள்ளே அவங்க இயங்கறதைப் பார்த்தா சந்தோஷமான வியப்பா இருக்கும். அவனும் அவளும் பிள்ளைகளும் எப்பவும் சுறுசுறுப்பா ஓடியாடி விஷயங்களைச் செய்கிறதைப் பார்க்கிறபோது உடனே அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும். நாமும் அதுபோல இருக்கத் தோணும்.. ஊருக்கு வந்ததும் அப்படி இருப்பேன். ப்ரேம் வீட்டில எல்லா வசதியும் இருக்குதுதான். ஆனா அங்கே நாம சும்மாதான் இருக்கணும். எல்லாமே கேட்டதும் கைக்கு வந்துரும்.. பணத்தையும் சரி, நேரத்தையும் சரி அவங்க வீணடிக்கிறதைப் பார்த்தால் கவலையான வியப்பா இருக்கும். அது என்னையும் பாதித்து விடலாம் இல்லையா? அதான் நான் அதை தவிர்த்து விடறேன்.
பதிலில்லை.

“…இருந்தாலும் இப்ப நீ சொல்றதை யோசிக்கிறப்ப... அவன் தப்பா நினைச்சுக்குவானோ? இனிமேல் அங்கேயே போய்த் தங்கிடறேன்.

வேணாங்க, உங்க வழக்கத்தை மாற்றவேண்டாம். கேட்டால் நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்.

('அமுதம்' ஏப்ரல் 2013 இதழில் வெளியானது.)

<<>> 
 (படம்- நன்றி: கூகிள்)

14 comments:

வெங்கட் நாகராஜ் said...

எங்களுக்கும் ஒரு பாடம்.....

வாசு செய்தது தான் சரியென்று எனக்கும் பட்டது.....

இராஜராஜேஸ்வரி said...

சந்தோஷ வியப்பு...தான் கதையைப் படித்ததும் ..!

கீதமஞ்சரி said...

ஜனனிக்கு கணவனின் உடல்நலம் பற்றிய அக்கறை அவ்வாறு நினைக்கத்தூண்டுகிறது. அது தவறில்லை. வாசுவின் செய்கையிலும் எந்தத் தவறும் இல்லை என்றாலும், பாசத்தில் குறை வைக்காத தம்பி என்றால் பெரியதம்பி வீட்டுக்கும் இங்கே போவதில் பத்துக்கு ஒருமுறையாவது அங்கே போய்வரலாம். நல்ல கதை. பாராட்டுகள் ஜனா சார்.

ராஜி said...

வாசு சரியாதான் செஞ்சிருக்கார்

வை.கோபாலகிருஷ்ணன் said...

சந்தோஷ வியப்பு தரும் சிறுகதைக்குப் பாராட்டுக்கள்.

ADHI VENKAT said...

சின்ன தம்பி வீட்டில் தங்கியது தான் சரி...

இம்முறை சாத்வீகன் தாத்தாவை காணவில்லையே...

ரிஷபன் said...

பணத்தையும் சரி, நேரத்தையும் சரி அவங்க வீணடிக்கிறதைப் பார்த்தால் கவலையான வியப்பா இருக்கும். அது என்னையும் பாதித்து விடலாம் இல்லையா? அதான் நான் அதை தவிர்த்து விடறேன்.”

சரியான முடிவு !

கோமதி அரசு said...

பணத்தையும் சரி, நேரத்தையும் சரி அவங்க வீணடிக்கிறதைப் பார்த்தால் கவலையான வியப்பா இருக்கும். அது என்னையும் பாதித்து விடலாம் இல்லையா? அதான் நான் அதை தவிர்த்து விடறேன்.//


சரியான முடிவு.
அருமையான கதை.

இராஜராஜேஸ்வரி said...

வழக்கத்தை மாற்றவேண்டாம்...!

சந்தோஷ வியப்பு ..!

புதுவை சந்திரஹரி said...

அருமையாக உள்ளது . அமுதம் இதழிலும் படித்தேன் .

பணி தொடர வாழ்த்துக்கள் . புதுவை சந்திரஹரி .

தி.தமிழ் இளங்கோ said...

சென்னையிலே சின்னதம்பி, பெரியதம்பி. இருவருக்கும் இடையில் இரு வேறு பொருளாதார நிலை. ஒரு சின்ன உரையாடல் மூலமாக எதார்த்தம் எது என்பதை காட்டி இருக்கிறீர்கள்.

கே. பி. ஜனா... said...


நம்மை சுற்றியுள்ள சூழல்கள்படி மனது செயல்படும் அழகான இரண்டு உதாரணங்கள் மூலம் சொல்லி விட்டீர்கள். வசதியானவர்களாக இருந்தாலும் அன்பானவர்களாக இருந்தால் அந்த வீட்டிற்கும் செல்லலாம்.
நல்ல சிறுகதை. நன்றி!
- உஷா அன்பரசு

புதுவை சந்திரஹரி said...

நல்ல கவிதைகளின் மொழிபெயர்ப்பு . அனைவருக்கும்

மகிழ்ச்சியூட்டும் - புதுவை சந்திரஹரி

ராமலக்ஷ்மி said...

/அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும். நாமும் அதுபோல இருக்கத் தோணும்.. /

உண்மைதான். நல்ல முடிவு.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!