Wednesday, June 20, 2012

நிச்சயம், ஒரு மில்லி மீட்டர்.



அன்புடன் ஒரு நிமிடம் - 9



யுத்தம். காலையிலேயே அம்மாவுக்கும் மகனுக்கும். பார்த்துக் கொண்டுதான் இருந்தார் வாசு. ஆனால் எதுவும் கேட்பதாயில்லை அவர். அவனும் ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டு புறப்பட்டுப் போனான் காலேஜுக்கு.

மாலையில் அவனை அழைத்துக் கொண்டு மாலுக்குப் போனார். வழக்கமாகப் போவதுதான். வாரம் ஒரு முறை. அன்றைக்குப் பார்த்துத்தானா அந்த முறை வர வேண்டும்? அப்பா நிச்சயம் கேட்கப் போகிறார் என்று பயந்து கொண்டே வந்தான்.

கேட்டால் எப்படி சொல்ல வேண்டும், அம்மா தரப்பில் நியாயம் எப்படி அணுவளவும் இல்லை என்று விளக்க வேண்டும் என்று மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டே நடந்தான். அப்பா மடக்கி மடக்கி என்னவெல்லாம் கேட்பார், அதற்கு எப்படியெல்லாம் சரியான பதில் கொடுக்கலாம்... அவன் நடந்துகொண்டதன் அடிப்படைக் காரணங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் அப்பா சற்று வருத்ததோடு இருப்பார், அவர் அப்படி இருக்கத் தேவையில்லை என்று காட்ட வேண்டும்.

ஆனால் நடந்தது என்ன? வழக்கத்துக்கு அரை சதவிகிதம் கூட உற்சாகம் குறையாமல் காணப்பட்டார் அப்பா.

சைண்டிஃபிக் கால்குலேட்டர் கேட்டிருந்தியே, அதை முதல்ல முடிச்சிடுவோம், என்று எலெக்ட்ரானிக் ஷாப்புக்குள் நுழைந்தார். பொருத்தமான ஒன்றை சௌகரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பல முறை உள்ளே போய்வந்தார் செல்ஸ்மேன். ஆனால் அந்த கேப்பில் கூட வாசு வாயைத் திறக்கவில்லை. அவனுக்கு சந்தோஷமான ஏமாற்றம்.

அப்பாடா! இவர் அதை மறந்துவிட்டார் போல. அப்படியே விட்டுட்டாரென்றால் நல்லது. 

அதுவே தொடர்ந்தது அடுத்த ஸ்டாலிலும், அதற்கு அடுத்த ஸ்டாலிலும். பர்சேஸ் முடிந்ததும் வழக்கம்போல நுழை வாயிலை ஒட்டியிருந்த மக்டொனால்டுக்குள் வந்து அமர்ந்தார்கள்.

, இப்ப ஆற அமர விசாரிக்கலாம்னு தான் இதுவரை கேட்காமல் இருந்திருக்கிறார் போல. இப்ப எப்படியும் கேட்டு விடுவார்...

ஆனால் மனுஷன் இங்கேயும் அதுபற்றி வாயைத் திறக்கவே இல்லையே? ஆனால் அதற்குமேல் அவனால் பொறுக்க முடியவில்லை. அவனுக்குள் ஒரு உந்துதல். தன் தரப்பை சொல்லியே ஆக வேண்டும். அவர் கேட்டாலும் கேட்காவிட்டாலும்!

அப்பா காலையில நான் ஏன் அம்மாகிட்ட அப்படி சொன்னேன்னா... என்று ஆரம்பித்து அவன் பாயிண்டுகளைக் கொட்டித் தீர்த்துவிட்டான்.

அமைதியாகக் கேட்டார் வாசு. நீ ஏன் அப்படி செய்தேன்னு நான் கேட்கவே இல்லையே?

இருந்தாலும் நீங்களும் சண்டையை பார்த்தீங்கல்லியா?. அதான்...

யெஸ். பார்த்தபிறகு, இதே பாயிண்டுகளை அங்கே நீ சொன்னதையும் நான் கேட்ட பிறகு, எதற்கு இன்னொரு முறை விளக்கம்?

விழித்தான்.

நான் சொல்லட்டுமா எது உன்னை சொல்ல வைத்ததுன்னு? என்றார், Its  the uncertainty you feel about in your being right. உன் செயலின் மேல் உனக்கிருக்கிற நம்பிக்கைக் குறைவுதான் உன்னை பேச வைத்தது அதைப் பற்றி.  அதில் உனக்கு முழு நிச்சயம் இருந்திருந்தால் நீ அதைப் பற்றி, அதுவும் அதை நான் பார்த்த பிறகு, கவலைப் பட்டிருக்கவே மாட்டாய்.

 “ஆமா, தலையை ஆட்டினான் வெட்கத்துடன்.

இதில் வெட்கப்பட எதுவுமில்லைடா. In fact, இது தேவையான ஒன்று. தெளிவை நோக்கி நம்மை இட்டுச் செல்வது. ஒரு மில்லிமீட்டர் கூட ஐயமின்றி நம் செயலை நாம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக நம்புவதுதான் தவறு. நான் விட்டாலும் என்னோடு பேசி உன் நியாயத்தை நிச்சயம் செய்துகொள்ள நினைக்கிறியே அதுதான் முக்கியமும் உனக்கே பயன் தருவதும்!

<<<>>>


9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

// ஒரு மில்லிமீட்டர் கூட ஐயமின்றி நம் செயலை நாம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக நம்புவதுதான் தவறு. //

சுயமுன்னேற்றத்திற்கு மிகவும் உதவும் நல்லதொரு விஷயம்.

பாராட்டுக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//உன் செயலின் மேல் உனக்கிருக்கிற நம்பிக்கைக் குறைவுதான் உன்னை பேச வைத்தது அதைப் பற்றி.//

க்ளாஸ் ஜனா சார்.

மனோ சாமிநாதன் said...

அருமை! தந்தைக்கும் மகனுக்குமிடையே உள்ள‌ நுட்பமான சினேகிதத்தை மிக அழகாக விவரித்திருக்கிறீர்கள்!

வெங்கட் நாகராஜ் said...

மிக மிக அருமை....

ரிஷபன் said...

தெளிவை நோக்கி நம்மை இட்டுச் செல்வது. ஒரு மில்லிமீட்டர் கூட ஐயமின்றி நம் செயலை நாம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக நம்புவதுதான் தவறு. நான் விட்டாலும் என்னோடு பேசி உன் நியாயத்தை நிச்சயம் செய்துகொள்ள நினைக்கிறியே அதுதான் முக்கியமும் உனக்கே பயன் தருவதும்!”

வாசிப்பவரும் தெளிவை நோக்கி நகரும்படி எழுதுவதுதான் உங்கள் பலம்.

ப.கந்தசாமி said...

நல்ல சிந்தனை.

Yaathoramani.blogspot.com said...

தெளிவைத் தரும் அருமையான சிந்தனை
பகிர்வுக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 3

Seeni said...

ini varuven thodarnthu!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!