என்னுடைய கவலைகள்
என்னவென்று கேட்காதீர் தயவு செய்து.
என்னுடைய கவலைகள்
எனக்கே உரியவை.
உமக்கவை புரியாது ஒரு நாளும்.
என் கவலைகளை நான்
நேசிக்கிறேன்.
அவை இல்லாமல் என்னால்
ஒரு நாளைக்கூட ஓட்ட முடியவில்லை.
சில கவலைகளுடன் நான்
பழகிப்பழகி
கடைசியில் அவை இல்லாமல்
நிம்மதியாக உறங்க முடியவில்லை.
என் மனதில் அறை எடுத்துத் தங்கும்
சில கவலைகள்
வெகு நாள் சிநேகத்தில்
வாடகை பாக்கிகூட வைத்திருக்கின்றன.
எவ்வளவோ நான் முயன்றாலும்
சில கவலைகள் என்னை மறந்து
அல்லது நான் அவற்றை மறந்து
காணாமல் போய்விடுகின்றன.
ஆனாலும் என் கவலைகளை நான்
நேசிக்கிறேன்.
அவை இல்லாமல் வாழ என்னால் முடியாது...
9 comments:
கவலைகளை நேசிக்கிறேன்..
நிஜம்தான்.. அந்த சுகம் அனுபவிச்சாதான் புரியும்.. இதையே காமெடியா கூட எழுதலாம்.. கவிதையா சொன்ன விதம் என் கவலையை மறக்கடிச்சு விட்டுருச்சு..
கவலைகள் இன்றி மனிதன் இல்லை. கவிதை கவலையை விடவில்லை என்பது என் கவலை. வாழ்த்துக்கள்
//என் மனதில் அறை எடுத்துத் தங்கும்
சில கவலைகள்
வெகு நாள் சிநேகத்தில்
வாடகை பாக்கிகூட வைத்திருக்கின்றன.//
நல்ல கவிதை. சில கவலைகள் வாடகை பாக்கி மட்டும் அல்ல, காலியே செய்யமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன!
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
என் அம்மா கவலைப் பட ஒன்றும் இல்லையே என்று கவலைப் படுவார்கள். இதைப் படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்து விட்டது!
அன்பு ஜனா,
கவலை கவிதை அற்புதம் .
மிகவும் ரசித்தேன் .
கவலையில் இரண்டு சொற்கள் உள்ளன
ஒன்று - வலை - ஒன்று - கலை
வலையில் விழாமல் இருப்பது கலை .
- புதுவை சந்திரஹரி
என்னங்க இது.. தூக்கத்தைப் பற்றி இரண்டு பதிவுகள்... :) ...
கவலைகளையும் நேசிக்க சொல்லும் கவிதை.....
நிஜம்தான்,அனுபவித்தவர்களுக்கே புரியும் சுகங்கள்
மௌன ராகங்கள்..
- பகவத் குமார்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கணினியில் உட்கார்ந்து (அமெரிக்காவில்) வாசித்த முதல் படைப்பு உங்கள் கவிதையே என்பதிலும், அதிலும் மிக அருமையான கவிதையை வாசித்ததிலும் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
ரேகா ராகவன்.
நன்றி ரிஷபன், சரவணன், வெங்கட் நாகராஜ், ராம மூர்த்தி, பின்னோக்கி, குமார், ராகவன்!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!