அன்புடன் ஒரு நிமிடம் - 34
பயணங்கள் வீணாவதில்லை...
வீட்டுக்கு வந்திருந்த தங்கை ரேணுகாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார் சாத்வீகன். முகத்தில் கவலை ரேகைகள். நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் அவள். “உங்க மருமகன் அடிக்கடி ஒரு பொண்ணைப் பார்த்து பேசிக்கிட்டு இருக்கிறான். அவளைத்தான் கல்யாணம் செய்து கொள்வான்போல இருக்கு... என்ன பண்றதுன்னே...”
“பேஷா பண்ணி வெச்சுடுவோம். ஒரு பெரிய வேலை முடிஞ்சது.”
“இல்லீங்கண்ணா, அது ரொம்ப வசதியான குடும்பத்தில செல்லமா வளர்ந்த பொண்ணுன்னு தெரியுது. ரவிக்கு இருபத்தெட்டாகியும் இன்னும் சொல்லிக்கிற மாதிரி ஒரு வேலையில செட்டில் ஆகலே. நாம எங்கே, அவங்க எங்கே? நடை உடை பாவனைன்னு பார்த்தா அவளும் கொஞ்சம் சௌகரியத்தை விரும்பற பொண்ணு மாதிரி தெரியுது.”
“அட்வைஸ் ஏதும் பண்ணிடலியே நீ அவனுக்கு?” என்றார் பதற்றமாக.
“இல்லே, இல்லே. அப்புறம் இன்னும் அதிகமாயிடும்! உங்க தங்கை நான். எனக்கு தெரியாதா?”
“சரி, நான் பார்க்கிறேன்...” என்றவர் ரவியைப் பற்றி எதுவும் கேட்காமல் அவனுடன் படித்த பழகிய நண்பர்களைப் பற்றி ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்.
அடுத்த வாரம் அவனை போனில் அழைத்தவர், “ரவி, எனக்கொரு ட்ரிப் கோவை, சேலம், சென்னைன்னு போகவேண்டியிருக்கு. கொஞ்சம் துணைக்கு வாயேன். பழைய பாக்கி எல்லாம் வசூல் பண்ண வேண்டியிருக்கு. முன்னால ஒரு புத்தக வியாபாரம் பண்ணினேனில்லையா?”
“ஓ, வர்றேன் மாமா!”
கோவையில் இறங்கியதும் ஹோட்டலில் ரூம் போட்டார். “சரி, ரவி, பக்கத்திலதான் கடைகள். போயிட்டு மத்தியானம் வந்திடறேன். நீ இங்கே உன் பிரண்ட்ஸ் யாரும் இருந்தா போய்ப் பார்த்துவிட்டு மத்தியானம் ரூமுக்கு வந்துரு. நைட் சேலத்துக்கு புறப்படறோம்.”
அவன் யோசித்தான்.
“யாருமே பிரண்ட்ஸ் இல்லியா இங்கே?”
“ஆ, சுரேஷ்னு ஒருத்தன்... இங்கே தான் ராம் நகர்ல இருக்கான்....”
“யாரு அந்த ராமசாமி மகனா? அவரு இங்கே தான் இருக்கிறாரா?”
“இல்லே, கல்யாணத்துக்கப்புறம் அவன் இங்கே தனிக் குடித்தனம்...”
“ஓ அவனுக்கு கல்யாணம் ஆயிட்டுதா?.. சரி, சாப்பிட வந்துரு.”
நண்பகல் அவன் வர நேரமாயிற்று.
சேலத்தில் அவர் சொல்ல காத்திருக்க வில்லை. அவர் அந்தப் பக்கம் புறப்பட்டாரோ இல்லையோ, இவன் இந்தப் பக்கம் தன் நண்பனைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பி விட்டான்.
சென்னையிலும். இவர், ‘நான் வர கொஞ்சம் நேரமாகும், நீ வந்து அறையிலேயே இரு,” என்றபோது“நானும் தாம்பரத்தில என் பழைய நண்பனைப் பார்க்கணும்...” என்று பதில் வந்தது.
“பரவாயில்லே, எப்ப வேணா வா. பத்தரைக்கு தானே டிரெய்ன்?”
அடுத்த மாதம் தங்கை வந்தபோது கேட்டார். “என்ன உன் மகன் ஏதோ லவ் அது இதுன்னு... இன்னும் அப்படியேதான் சொல்லிட்டிருக்கானா?”
“அதென்னமோ தெரியலே... இப்ப அந்தப் பேச்சையே காணோம்! குறிப்பா சொன்னால், உங்களோட ஒரு ட்ரிப் போய் வந்ததிலேருந்து! ஆமா, அங்கே என்ன நடந்தது?”
“விசேஷமா ஒண்ணும் நடக்கலியே? அங்கே இப்ப வசிக்கிற இவனோட பழைய நண்பர்களைத்தான் போய் பார்த்துட்டு வந்தான். எல்லாம் லவ் மேரேஜ் பண்ணினவங்க. எப்படி எதிர்ப்புக்களை சமாளிச்சு வெற்றி கண்டு இப்ப சந்தோஷமா குடித்தனம் பண்ணிக்கொண்டு இருக்கிறாங்கன்னு பார்த்துட்டு வந்திருப்பான்.”
“அப்படீன்னா அவன் முன்னைவிட தன் காதல் விஷயத்தில் வேகமா இல்லே இருக்கணும்?”
“அதானே? ஒரு வேளை அவன் நினைச்ச மாதிரி அவங்க இல்லையோ என்னவோ?” என்றார் அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு.
('அமுதம்' பெப்ருவரி 2013 இதழில் வெளியானது.)
<<<<>>>>
(படம்- நன்றி: கூகிள்)
16 comments:
ithuthan vazhkkaiyin ethartham..ikkaraikku akkarai pachai..nallathoru sirukathai..nanri nanba..
வித்தியாசமானகதை.
மாமா சரியாகத்தான் பாடம் புகட்டி இருக்கிறார்.:)
ப்யணம் தந்த படிப்பினை அருமை.
மாடியிலிருந்து விழுந்தால் அடிபடும் என
விழுந்தா பார்க்கணும்
விழுந்தவனைப்பார்த்தால் போறாதா என
ஒரு வசனம் ஒரு சினிமாவில் வரும்
அதுபோலத்தான் இதுவும்
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
tha.ma 1
அட்வைஸ் ஏதும் பண்ணிடலியே நீ அவனுக்கு?” என்றார் பதற்றமாக.// உண்மைதான் நிறையப்பேர் விரும்புவதில்லை. கதை விறுவிறுப்பாய் நகர்கிறது
நேரடி அனுபவங்களே
போதிமரமாக தெளிவாக்கியிருக்கும்..!
பயணத்தில் நல்ல முடிவு கிடைத்துவிட்டது.
மாமா நல்லபடியாக உணர்த்திவிட்டார்.
படிப்பினை கூட இயல்பாய் தெளிவாய் புரிந்து கொள்ளும்படி வித்தியாசமான போக்கில் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்..!
த.ம-4
பயணம் போய் பாடம் கத்துக்கிட்ட ரவி. அருமை சார்.
அறிவுரைகளை விட அனுபவப் பாடமே பலனளிக்கும் என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
தியரி-யை விட ப்ராக்டிகல் நல்ல எஃபக்டிவ் என்று புரிய வைச்சுட்டீங்க! :) நல்லா இருக்குங்க!
கதை யைமிக இயலபாக சொலகிறீரகளா
அனுபவமே சிறந்த ஆசான்
என்பதை அழகுற
சொல்லியுள்ளீர்கள்
ஆயிரம் அறிவுரைகள் கற்றுத் தரவேண்டிய ஒரு பாடத்தை ஒரு வாழ்க்கை அனுபவம் சத்தமில்லாமல் கற்றுத்தந்துவிடுகிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் பிள்ளைகளின் போக்கிலேயே போய் வாழ்க்கையின் சிக்கல்களைப் புரியவைத்த அருமையான கதை. பாராட்டுகள் ஜனா சார்.
அருமையானப் பதிவு .வாழ்த்துக்கள்
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!