Friday, December 7, 2012

அவர் பங்கு...


அன்புடன் ஒரு நிமிடம் - 22

அவர் பங்கு...

முகத்தில் அசுவாரசியம் தெரிய உள்ளே நுழைந்த அந்த இளைஞனைப் பார்த்தான் அபிஜித். தாத்தா இருக்காரா? என்னைப் பார்க்கணும்னு சொன்னாரு. 

அழைத்துப் போனான். இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. ஓ, அப்பாவோட ஃபிரண்ட் நீலகண்டனோட மகன் சம்பத் இல்லே இவன்? தாத்தா எதற்காக இவனை தேடியிருப்பார்?

ஆவல் பிடரியைப் பிடித்துத் தள்ள அறைக்கு வெளியே தயங்கினான்.

அடடே, வா வா! உற்சாகமாக வரவேற்றார் சாத்வீகன். பார்த்து எத்தனை நாளாச்சு! நல்ல வளர்ந்துட்டே. இந்த பிங்க் கலர் ஷர்ட் உனக்கு நல்ல மாட்சிங்கா இருக்கு.

அவரது பிரியமான வரவேற்பில் இவன் முகத்திலிருந்த எரிச்சல் கொஞ்சம் அகன்ற மாதிரி இருந்தது. ஏதோ கேட்கணுமே என்று, “லாப் டாப்பில் என்ன பார்த்துட்டிருக்கீங்க தாத்தா?” என்றான் சம்பத்.

நீதானே என் பொன் வசந்தம் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனைத்தான்... அற்புதமான மெலடிகளை என்ன அழகா மெருகு ஏற்றி பொருத்தமான வாத்தியங்களில குழைச்சுக் கொடுத்திருக்காரு இளைய ராஜா!

ஓர் ஆர்வம் எழுந்து  அவனும் அதைக் கவனிக்க இவர் தொடர்ந்து அந்தப் பாடல்களின் இசைக்கோர்வைகளின் விசேஷங்களை பற்றி அவனுடன் கொஞ்ச நேரம் பேசினார்.

அப்புறம் நான் என் ஏன் உன்னை வர சொன்னேன்னா.. என்று ஆரம்பித்தார்.

ஒண்ணுமில்லே என் ஸ்டுடண்ட் ஒருத்தர் மகன், பேரு வருண், உன் வயசு தான் இருக்கும்.  அவனுக்கு ஒரு ஐடியா கொடுத்தேன். ஆனா அந்தப் பையனுக்கு அது வொர்க் ஆகுமான்னு சந்தேகம். உன்னை மாதிரி சாப்ட்வேர் துறையில தான் வேலை அவனுக்கு. அதான் உன்கிட்டே அதைப் பத்தி கொஞ்சம் கேட்டுப் பார்த்துட்டு அவனிடம் மறுபடி பேசலாமேன்னு... ஒரு அரை மணி நேரம் ஆகும் பரவாயில்லையா உனக்கு? ஏதும் அர்ஜண்ட் வேலை?”

பரவாயில்லே, சொல்லுங்க.

அவர் சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஆன் லைன் படிப்பைப் பற்றி... இப்போது டெஸ்டிங் எஞ்சினீயராக இருக்கும் அந்தப் பையன் வருண் தான் வாங்கற சம்பளத்தில ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து அந்த கோர்சில் சேர்ந்து படிப்பதன் மூலம் ஐந்து வருடங்களில் தன் கரீயரில் எத்தனை உயரத்துக்குப் போக முடியும் என்று விலாவாரியாக விவரித்தார்.

சம்பத் சில குறுக்குக் கேள்விகள் கேட்டான். கொஞ்சம் யோசித்தான். அவனுக்கு அது நல்ல ஒரு வழி என்றே பட்டது. அப்படியே சொன்னான்.

அப்பாடா! என்றார் அவர். இனி தைரியமா அவனிடம் இதைப் பத்திப் பேசலாம்! தாங்க்ஸ்ப்பா! என்றவர் மறக்காமல் கேட்டார், “உன்னை ரொம்ப போரடிச்சிட்டேனோ?”

அதெல்லாம் ஒண்ணுமில்லே தாத்தா! இண்டரஸ்டிங்காதான் இருந்திச்சு. ஆமா, அந்த இன்ஸ்டிட்யூஷனோட வெப்சைட் அட்ரஸ் என்ன சொன்னீங்க?”

ஒரு நிமிஷம்,” என்று தேடி எடுத்துக் கொடுத்தார். அதான் ஆல்ரைட்னு  சொல்லிட்டியே? இன்னும் ஏதாவது சந்தேகமா? பார்க்கணுமா?”

நோ தாத்தா, அதெல்லாம் ஒண்ணும் சந்தேகம் இல்லை. இன் ஃபேக்ட் எனக்கே அதில சேரலாம் போல இருக்கு,” என்றபடி அகன்றான்.

பார்த்துக் கொண்டிருந்த அபிஜித்துக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என்ன தாத்தா, போன வாரம் கூட நான் ஒரு ஆன்லைன் கோர்ஸ் பத்தி உங்ககிட்டே பேசினப்ப, ஆன்லைன் படிப்புக்களைப் பத்தி எல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னீங்க. இப்ப இவன்கிட்ட பிட்டுப்பிட்டு வைக்கறீங்க?”

எனக்கென்னடா தெரியும் இந்தப் படிப்புக்களைப் பத்தி? இப்ப வந்திட்டுப் போனானே சம்பத், அவனோட அப்பா சொன்னது இந்த ஐடியா!

ஓ அப்படீன்னா இது உங்களோட ஐடியா இல்லியா?”

என்னோடதும் சேர்த்தி தான். இதை அவன் காதில் நுழைச்சது தான் என்னோட ஐடியா!

இவனுக்கு புரிந்தது.

<<<>>>>
('அமுதம்' அக்டோபர் 2012 இதழில் வெளியானது)

8 comments:

மனோ சாமிநாதன் said...

எப்போதுமே நம் கையில் வந்து விழும் பொக்கிஷத்தின் அருமை நமக்குப் புரிவதில்லை. அதை யாராவது அருமையாக ஆராதிக்கும்போது தான் அதன் சிறப்பு புரிகிறது. இந்த விஷயத்தை மிக அருமையாக மிகச் சிறிய கதையின் மூலம் தெரிவித்திருக்கும் உங்களுக்கு மனமார்ந்த‌ பாராட்டுக்கள்!!

cheena (சீனா) said...

அன்பின் ஜனா - நல்லாவே இருக்கு- அமுதத்தில் வெளீயானது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
இத்தனை நாசூக்காக பிரச்சனைகளை
அணுகுபவர்களுக்கு நிச்சயம் தோல்வி என்பது ஏது ?
மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொருவரின் பிரச்சனைகளைத் தீர்க்க இப்படி சாத்வீகன் போன்றவர் கிடைத்தால் நன்றாக இருக்கும்....

சிறப்பான பகிர்வு.

த.ம. 2

ரிஷபன் said...

வயாசானால் முடங்கிப் போகும் மனிதரிடையே இப்படி வித்தியாசமாய் யோசிக்கும் தாத்தா பாராட்டுக்குரியவர்.

ADHI VENKAT said...

சாத்வீகன் தாத்தா சூப்பர். பெயருக்கேற்றாற் போல் யோசித்து அருமையா கையாண்டுள்ளார்...

Ranjani Narayanan said...

தாத்தாவின் ஐடியா சூப்பராக இருக்கிறதே!
அமுதம் இதழில் வந்ததற்குப் பாராட்டுக்கள்!
என் ப்ளாக்ஸ்பாட் தளம்:
http://thiruvarangaththilirunthu.blogspot.in/

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!