அன்புடன் ஒரு நிமிடம் - 20.
காத்திருந்த காட்சி...
வாசலில் வந்து இறங்கியவரைப்
பார்த்ததுமே அபிஜித்துக்கு வரப்போகும் காட்சியின்
டிரைலர் மனதில் தோன்றிவிட்டது. அப்பாஜி மாமா! சாத்வீகனின் நண்பர்.
ஆஹா! தாத்தா இப்போது பொங்கி
வெடிக்கப் போகிறார்! இப்ப நாம இங்கே இருக்கணுமா வேண்டாமா? அவர் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளப்
போவதைப் பார்க்கவேண்டுமா?
இளக்காரம் கலந்த சிரிப்பை
வாய்க்குள் புதைத்தபடியே, “வாங்க மாமா!” என்று அழைத்துப் போனான் உள்ளே.
முன் கதை என்ன? சும்மா இருந்த சாத்வீகனிடம் இந்த அப்பாஜி
ஒரு நாள் வந்து “இத்தனை ஆற்றலை மடியில் கட்டிக்கொண்டு
வீட்டுப் படியில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களே?
அப்படி என்ன உங்களுக்கு வயதாகி விட்டது? அவனவன் எழுபதிலும்
எண்பதிலும் என்னென்ன சாகசங்கள் பண்ணுகிறான்? அருமையான ஐடியா
ஒண்ணு சொல்றேன். உங்களை மாதிரி ஒரு ஜீனியஸ் தான் அதை செய்ய முடியும். நீங்க செய்தா
லாபம் அள்ளிக் கொண்டு வரும்.” என்று தொடங்கி வீட்டிலேயே ஒரே
ஒரு உதவியாளரை வைத்து செய்ய முடிகிற ஒரு பிஸினஸ் ஏஜென்சி பற்றி சிலாகித்து
சொன்னார்.
சாத்வீகன் அதை எடுத்து
செய்ததில், போட்ட முதல் ரெண்டு லட்சம் நஷ்டம், மேற்கொண்டு ஒன்றரை கடன், அந்த உதவியாளர்
ஏற்படுத்திய பிரசினைகள் என்று அவர் பட்ட பாடு சொல்லி முடியாது. ஒரு வழியாக அதற்கு
மங்களம் பாடி மீள்வதற்குள் உன்னைப்பிடி என்னைப்பிடி என்றாகிவிட்டது.
ஐடியா கொடுத்த கையோடு டெல்லி
சென்ற அப்பாஜி ஐந்து வருடத்துக்குப் பின் இப்போதுதான் இங்கே வருகிறார். காரசாரமாக
அரங்கேறப் போகும் காட்சி இரண்டைக் காண தயாரானான். ஜகப்பிரசித்தி பெற்றதல்லவா
சாத்வீகனின் சொல்லாடல்?
ஆயிற்று. அரை மணி நேரம், முக்கால் மணி என்று நேரம் ஓடியது. சாத்வீகன் அதைப் பற்றி வாயையே
திறக்கவில்லை. ஒன்றுமே நடவாதது போல ஒடிக்கொண்டிருந்தது அவர்கள் சம்பாஷணை. முன்பு
அவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது போல சிரிப்பும் களிப்புமாக....
ஒரு வேளை அவராகக் கேட்கட்டும்
என்று காத்திருக்கிறரோ?
சற்று நேரத்தில்... “எப்படி நான் கொடுத்த ஐடியா? பிஸினஸ் நல்லாப் போகுதா?” என்று வந்தவரே தொடக்க
வசனத்தையும் பேசி காட்சியை துவக்கி வைத்தார்.
அனல் இருக்கட்டும், ஒரு பெருமூச்சு கூட வெளிப்படவில்லை
இவரிடமிருந்து!
“ஓ அதுவா? நாலு
வருஷம் நடத்தினேனே! தாங்க்யூ!” என்று சொன்னாரே பார்க்கலாம்!
சப்பென்று ஆகிவிட்டது
இவனுக்கு.
அவர் அகன்றதும் இவரிடம்
கேட்டான். “என்ன தாத்தா இது! சும்மா இருந்த
உங்களை எதுவோ பண்ண சொல்லி இத்தனை பாதிப்பை ஏற்படுத்தியிருக்காரு, அவர்கிட்ட எதையும் சொல்லாம தாங்க்ஸ் வேறே சொல்றீங்களே!” என்று அலுத்துக் கொண்டான்.
உதட்டிலிருந்த புன்னகை
மறையாமல் அவனைப் பார்த்து சொன்னார் சாத்வீகன்: “அவர் ஒரு ஐடியா கொடுத்தார். அதை
ஏற்று நாம செயல்பட்டோம். அது நல்லா வரவில்லை. அவரிடம் ஏன் அதை சொல்லி அவரை
சங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டும்?”
யோசித்தான். புரிந்தது. தாத்தா எத்தனை பெருந்தன்மையாக நடந்து
கொண்டிருக்கிறார்!
“நீங்க ஒரு ஜெண்டில்மேன் தாத்தா!” என்றான்.
“ஜெண்டில்மேன்?
அதெல்லாம் கிடையாது. மேன்! அவ்வளவுதான்!”
(அமுதம் செப்டெம்பர் 2012 இதழில் எழுதியது)
<<<<>>>>
13 comments:
அருமையான தாத்தா...
ஆம். ஏதோ நடந்தது நடந்து விட்டது. அதை மீண்டும் கிளறுவதால் என்ன பெரிய நன்மை ஏற்பட்டு விடப்போகிறது?
நட்பை இழக்க விரும்பாத தாத்தாவை எனக்கும் பிடித்துப்போய் விட்டது.
”புத்திக்கொள்முதல்” என்று இதைத்தான் சொல்வார்களோ?
நல்லதொரு படைப்பு. பாராட்டுக்கள்.
என்ன தான் ஒருத்தர் ஐடியா கொடுத்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நடந்த நம்மிடமும் தவறு இருக்கிறது என்பதை தாத்தா புரிந்து கொண்டதால்தான் அப்படி சாத்வீகமாக நடந்து கொன்டிருக்கிறார்!
அருமையான கதை!
லாபம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் நாம்தான் அதற்கு பொறுப்பு என்று எத்தனை பேருக்குத் தோன்றும்.. தாத்தாவைப் போல..
!சாத்வீகமான பதிவு !!
தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...
தாத்தாவுக்கு நஷ்டம் பெரிதாக தெரியவில்லை போலும். ரொம்பநாள் கழித்து தொலைவில் இருந்து வந்தவரை நோகடிக்க விரும்பவில்லை.
எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
நல்ல பகிர்வு....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இது போன்ற அருமையான படைப்புகளுக்காக காத்திருக்கிறோம் நாங்களும்.
Nalla Padaippu.
Arpudhamana padaippu.
அருமையான படைப்பு. இனி பேசி என்ன ஆகப் போகிறது என்று விட்டு விட்டார். நல்ல தாத்தா...
அன்பின் ஜனா - கதை அருமை - எந்த ஆலோசனை கூறினாலும் அதனைச் செயல்படுத்துபவர் கையில் தான் இருக்கிறது வெற்றியும் தோலவியும். அதற்காக கூறுபவரைக் குற்றம் சொல்லக் கூடாது. நல்லதொரு கதை - அமுதம் இதழில் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
so nice chittappa.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!