Friday, July 28, 2023

ஏ ஒன் திரைப்படங்கள்...


ஹாலிவுட்டுக்கு எம்.ஜி.எம் என்றால் நமக்கு ஏ.வி.எம். (மற்ற தூண்கள் ஜெமினியும் மாடர்னும் பட்சிராஜாவும் விஜயா வாகினியும்…)

ஏ ஒன் திரை ஓவியங்களைத் தந்த ஏ.வி.எம் ஸ்தாபகர்…
ஏ.வி.மெய்யப்பன்… இன்று பிறந்த நாள்!
திரையில் ‘ஏ.வி.எம்’ என்று ஒளிர்ந்ததும் ஒலித்ததும் நிமிர்ந்து உட்காருவோம் நம்பிக்கையுடன். ஒருநாளும் பொய்த்ததில்லை.
சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்று அவர் இளவயதிலேயே ஆரம்பித்த இசைத்தட்டுக் கம்பெனி வெற்றிகரமாக சுழன்று ஏ.வி.எம் ஸ்டூடியோவாக வந்து நின்றது. ‘அல்லி அர்ஜுனா’.. ‘ரத்னாவளி’... எடுத்த முதல் இரு படங்களும் தோல்வி அடைந்தபோதும் எடுத்து வைத்த அடியை நிறுத்தாமல் தொடுத்தார் தன் கணைகளை.
மராத்தி படத்தை தமிழில் ‘நந்தகுமார்’ என்று தயாரித்து பதின்ம வயது டி.ஆர்.மகாலிங்கத்தை அறிமுகப்படுத்தினார். அந்தக் காலத்திலேயே ஸ்டூடியோ இல்லாமல் வாடகைக்கு இடம் எடுத்து அவுட்டோரில் படமாக்கியிருக்கிறார்.
சினிமாவை கரைத்துக் குடித்தவரின் ஊர் காரைக்குடி. இரண்டாம் உலகப்போரின் போது அங்கேயே ஒரு ஸ்டூடியோவை தொடங்கினார். பம்மல் சம்பந்த முதலியார், பாவலர் பாலசுந்தரம் நாடகங்களை எல்லாம் படமாக்கினார். வேதாள உலகம், சபாபதி, பராசக்தி....
‘பராசக்தி’ தந்தவரின் ஆரம்ப ஸ்தாபன பெயர் பிரகதி. பிரகதியின் ‘ஸ்ரீவள்ளி’ நினைவிருக்கிறதா? “காயாத கானகத்தே.. 'நின்று உலாவும்' நற்காரிகையே…” டி.ஆர். மகாலிங்கம் குமாரி ருக்மணியை வலம் வர, நகர்வதே தெரியாமல் டிராலி காமிரா நளினமாக ஊர்ந்து அவர்களை வலம் இடம் வர… ‘ஸ்ரீ வள்ளி’ 'வென்று உலாவியது' தமிழ்நாட்டை. (டிராலியை எப்படி அழகாக உபயோகிப்பது என்று தெரிஞ்சுக்கலாம்!) முதல் முதலாகப் பின்னணிப் பாடல் இடம் பெற ஆரம்பித்தது அதில்தான்.
ப. நீலகண்டன் எழுதி எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்திக்கொண்டிருந்த நாடகத்தை (‘நாம் இருவர்’) படமாக தயாரித்து இயக்கினார். அந்த முதல் பிரமாண்ட வெற்றிப் படம் 150 படங்களுக்கு மேல் தயாரித்தவரை நிலைநிறுத்தியது. பெரும்பாலும் குடும்ப படங்களே... அவர்களே புகழ் பெற்ற குடும்பம் ஆச்சே?
எதை எப்போது எப்படி எடுக்க வேண்டும் என்று தெரிந்தவர். ‘Ladki’ என்று தான் இந்தியில் எடுத்ததை 'பெண்' என்று தமிழில்…. ‘வாழ்க்கை’ என்று தமிழில் எடுத்ததை ‘Bahar’ என்று இந்தியில்… ‘ஆதர்ச சதி’ என்று கன்னடத்தில் எடுத்ததை ‘நாக தேவதை’ என்று தமிழில்... ‘செல்லப்பிள்ளை’ என்று தமிழில் எடுத்ததை ‘வாதினா’ என்று தெலுங்கில்...
ஏவிஎம்மின் ‘வாழ்க்கை’தான் வைஜயந்தி மாலாவின் திரை வாழ்க்கையை தொடங்க வைத்தது. இந்தியிலும் அவரே நடித்து ஹிட்டாக, ஸ்டார் ஆனார்.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்…” இது அப்போதே இவரது ‘பெண்’ (1954) படத்தில் வந்த பாட்டு.
பாடல்களுக்கு பெயர்போன படங்களைத் தந்து கொண்டிருந்தவர், துணிந்து பாடல் இல்லாத படத்தை தந்தார் அந்த நாளிலேயே: ‘அந்த நாள்.’ அகிரா குரோசோவாவின் ‘ரேஷமானு'க்கு ஈடாக. முதல் ஷாட்டிலிருந்து கடைசி ஷாட் வரை ரசிக்க வைத்த, பல ஷாட்களில் பிரமிக்க வைத்த படம்!
இந்திக்கு கொண்டு போன ‘நானும் ஒரு பெண்’, ‘அன்னை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘குழந்தையும் தெய்வமும்’... எல்லாம் இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தன என்றால், ‘Chori Chori’ ‘Chaya’ ‘‘Bhai Bhai’ ‘Jaise Ko Taisa’ என்று நேரடி இந்திப் படங்களும் தரத் தவறவில்லை. சிறந்த குழந்தைகள் படம் என்று நேஷனல் அவார்டு வாங்கிய ‘Hum Panchhi Ek Dal Ke’ ஏவிஎம் தந்த காவியம் என்றால் ‘பாவ மன்னிப்பு’ ஏவிஎம் தந்த ஓவியம்...
அவர்களின் Magnum opus என்றதும் கண் முன்பே வரும் ‘அன்பே வா’... வசூல் ரிகார்டுகளைப் புரட்டிப் போட்ட ‘முரட்டுக்காளை’...
தனியே ஞாபகப் படுத்த வேண்டியதில்லை: ‘உயர்ந்த மனிதன்’, ‘பார்த்தால் பசி தீரும்’....
டீஸண்ட் சினிமா என்று ஒரு பிரிவை ஒதுக்கினோமானால் தரமான படங்களை தவறாமல் தந்து கொண்டிருந்த இவரின் அநேக படங்கள் அதன் கீழ் வந்துவிடும்.

><<>><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!