Thursday, March 31, 2016

உதவுகிற வேலை...


அன்புடன் ஒரு நிமிடம் - 101

 பாதி தூரம் சென்றபின் அன்றைக்கு ஆபீஸ் இல்லையென்று அறிந்ததும் வீடு திரும்பிய சித்ரா அந்தக் காட்சியை எதிர்பார்க்கவில்லை. 
அத்தனை பாத்திரங்களையும் சுற்றிப் பரப்பி வைத்து கழுவிக் கொண்டிருந்தான் தியாகு. 
"என்னங்க நீங்க செய்யறீங்க இதெல்லாம்.... கமலாம்மா எங்கே?”
”அவ இன்னிக்கு லீவாம். சொல்லிட்டுப் போயிட்டா. சரி, கொஞ்சம் பாத்திரம் தானேன்னு நானே...’
அவனுக்கு ஆபீஸ் பத்து மணிக்குத்தான். சித்ராவுக்கு ஏழரைக்கே கிளம்ப வேண்டும். வேலைக்கு வரும் கமலாம்மா எட்டு மணிக்கு வந்து வீடு பெருக்கி பாத்திரம் தேய்த்துவிட்டுப் போவாள். 
”அதான் ஞாயிறு அவளுக்கு லீவு தர்றோமே... சரி, விடுங்க. நான் பார்த்துக்கறேன் மீதியை. நேரமாச்சு உங்களுக்கு!” என்று சொன்னாளே தவிர மனசில் ஏதோ நெருடிற்று. இவர் ஏதோ சமாளிக்கிற மாதிரி இருக்கே... 
அதே தெருவில் கடைசி வீட்டிலிருந்த தோழி பத்மாவின் காதில் விஷயத்தைப் போட, அடுத்த பத்தாவது நாளே தெரிந்துவிட்டது. அந்தப் பத்து நாளுமே கமலம்மா வருவதில்லை என்று. இவனோ தினமும் அவள் வந்துவிட்டுப் போனதாக... வீடு நீட் ஆக இருந்தது. பாத்திரங்கள் சுத்தமாக...
”என்னங்க இது? அவ வர்றதேயில்லையாமே?” நேரடியாகவே கேட்டாள்.
”கண்டு பிடிச்சிட்டியா? முடிஞ்ச பின்னாடி உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சிருந்தேன்,” என்றான் தியாகு. முகத்தில் கலவரம் இல்லை. ”விஷயம் இதுதான். கமலாம்மாவின் மகன் சேகருக்கு ஆக்ஸிடெண்ட்ல தலையில அடி.  ரெண்டு மாசம் தினமும் கிட்டேயிருந்து கவனிக்கணும்.  சிகிச்சைக்கும் செலவாகுதுங்கிறதால வேலையை விடவும் யோசனை.  அவளுக்கு எப்படி  உதவலாம்னு யோசிச்சேன்.  அதனால இப்படி சொன்னேன். மாசாமாசம் நம்ம வீட்டுக்கு வர்ற நேரத்தில் உன் மகனை கிட்ட இருந்து கவனிச்சுக்க, இந்த ரெண்டு மாசமும் உன் வேலையை நான் செய்துக்கறேன்னு சொன்னேன். தயங்கினா. ஆனா எனக்கு அதில ஒரு திருப்தின்னு வற்புறுத்தி...”
ஆச்சரியத்தை மீறி அவன் மீது ஒரு பெருமை தோன்றிற்று.
('அமுதம்’ ஜனவரி 2015 இதழில் வெளியானது)

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மனம் வாழ்க....

Mahi said...

அருமையான வேலை..தியாகுவுக்கு பாராட்டுக்கள்!

Kasthuri Rengan said...


மனிதம் தவழும் கதை
நடைமுறைச் சாத்தியம் இருக்கோ இல்லையோ
பீல் குட்

ஹாட்ஸ் ஆப்
வெங்கட் அவர்களின் மூலம் வந்தேன்

தம +

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கதை மிக மிக அருமை!! வாழ்த்துகள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!