Wednesday, January 27, 2010

அந்த ரகசியம்...

திகாலை ஐந்து மணி. வாகீஸ்வரன் எழுந்து கொண்டார். மேஜையடியில் அமர்ந்தார். நேற்று விட்ட இடத்திலிருந்து கதையை எழுத ஆரம்பித்தார்.

வாசலில் கோலமிட்டு வந்தாள் மனைவி. ''மளிகை சாமான் தீரப்போகுது. இந்த வாரம் வாங்கணும். பாக்கி முன்னூறு ரூபாய் தரணும்.''

திக்கென்றது. ''ம், சரி...'' தொடர்ந்து எழுதலானார்.

பத்து மணி. போஸ்ட்மேன் வீசிய கடிதத்தைப் படித்தாள் மனைவி.

''யாரு?''

''உங்க ஒன்றுவிட்ட ஒண்ணுவிட்ட தங்கச்சி மகன் ரகு பத்தித்தான். வேலை கிடைக்கலே, சீட்டு நடத்திப் பிழைக்கிறேன்னு உதவச் சொன்னவனை நம்பி கஷ்டப்பட்டு பணம் கட்டினீங்களே, அவன்தான்.. ஊரைவிட்டு ஓடிட்டானாம்...''

ரெண்டாயிரம் ரூபாய்! தலை சுற்றியது.

கதை தொடர்ந்தது.

பன்னிரண்டு மணி. தரகர் கந்தப்பன் எட்டிப் பார்த்தார்.

''மதுரைப் பக்கம் ஒரு வரன் வந்ததே உங்க பொண்ணுக்கு? அவங்களை நேத்து சித்திரைத் திருவிழாவில சந்திச்சு பேசினேன். வேறே தகைஞ்சுட்டதாம்.''

''அப்படியா? ம்,சரி...'' எழுத்து தொடர்ந்தது.

பிற்பகல் மணி மூன்று. நண்பர் மாதவன்.

''...அந்தப் பையன் சிவா ரொம்ப ஏழைன்னு வேலை வாங்கிக் கொடுத்தீங்களே. அவன் எல்லார்கிட்டேயும் உம்மைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லிட்டிருக்கான்...''

அவனா? மனசு வலித்தது. தொடர்ந்து எழுதி முடித்தார் கதையை.

ந்தக் கதை வெளியான மறு நாள்...பரபரப்பாக அவர் வீட்டில் நுழைந்த வாசகர் அன்புராஜ் அவர் கையைப் பிடித்துக் குலுக்கித் தன் பாராட்டைத் தெரிவித்தார்.

''ரொம்பப் பிரமாதமாக இருந்திச்சு சார் கதை! காரக்டர்ஸ் மனசில எழும் வேதனைகளை, வலிகளை எப்படி சார் உங்களால இப்படி நுணுக்கமா தத்ரூபமா எழுத முடியுது?''

எப்படி என்பதை அவர் சொல்லவில்லை. ''ஏதோ வருது.''

7 comments:

CS. Mohan Kumar said...

வலியுடன் கூடிய எழுத்து எப்போதும் சிறப்பாகவே உள்ளது. கதை சொல்வதும் இதுவே என நினைக்கிறேன். நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்

Venkat Nagaraj said...

கதை மிகவும் அருமையா வந்திருக்கு. வலிகளே வார்த்தையாகும் போது தாக்கம் அதிகமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

பின்னோக்கி said...

உண்மைதான். சில காலத்தை கடந்து நிற்கும் படைப்புக்கள் அனுபவங்களிலிருந்து வந்தவையே.

creativemani said...

Very Nice!!!

Rekha raghavan said...

அருமையான கதை. வலியை இவ்வளவு அழுத்தமாக பதிவு செய்திருப்பது கதைக்கு மேலும் ஆழம் கூட்டுகிறது.

ரேகா ராகவன்.

ரிஷபன் said...

அவருக்கும் எனக்கும் அதான் வித்தியாசம்.. இப்படி தொடர்ந்து ‘வலிச்சா’ எழுதாம தூக்கி போட்டுருவேன்.. அவர் எழுதி பாராட்டு வாங்கறார்..’வலி’மையான கதை

Suganthan said...

கதையைக் கதை எனப் பாராமல், K B ஜனாவின் அனுபவம் எனப் பார்க்கும் ரிஷபன் சாரின் பார்வையில் எனக்கு உடன்பாடில்லை. மிக நல்ல கதை என்பதில் கருத்து மாறுபாடில்லை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!