விசாலத்தால் தன் கணவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பத்து வருஷத்துக்கு முன் வியாபாரத்தில் நஷ்டமேற்பட்டதால் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் உதவி கேட்டு வந்த தன் தம்பிக்கு தயவு தாட்சண்யமில்லாமல் மறுத்து விட்டார். இன்று அவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க தன்னை அழைக்கிறார்.
''என்ன திடீர் கரிசனம்?'' வெகுண்டு கேட்டாள்.
''வந்து பாரேன்.''
பார்த்த பிறகு... ''என்னங்க இப்படி ஒரு லட்ச ரூபாயைத் தூக்கிக் கொடுத்து இதை வெச்சு எல்லாத்தையும் சரி பண்ணிக்கோ, எனக்குத் திருப்பித் தர வேண்டாம்னுட்டீங்க?''
ஒரு குழந்தையை பார்ப்பது போல் அவளைப் பார்த்தார். ''பார் விசாலம், அப்ப அவன் அனுபவமில்லாமல் வியாபாரத்திலே சறுக்கின நேரம். அப்ப என்ன உதவி யார் பண்ணினாலும் மேலும் மேலும் சறுக்கத்தான் செய்வான். தானா எழுந்திருக்கப் பழக முடியாது. எல்லா உதவியையும் வாங்கிட்டான். எல்லா சொத்தையும் இழந்திட்டான். இப்ப அவனிடம் அனுபவம் தவிர எதுவுமில்லை. இதுதான் அவனுக்கு உதவி செய்ய வேண்டிய நேரம். அதான் அந்த ஐயாயிரம் ரூபாயை இப்ப கொடுத்தேன்.''
''எங்கே, ஒரு லட்சமில்லே தூக்கிக் கொடுத்தீங்க?''
''அதே தான் இது. என்ன முழிக்கிறே? அன்னிக்கு அவனுக்குக் கொடுக்காத அந்த ஐயாயிரத்துக்கு எக்ஸ்டென்ஷன்லே ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கிப் போட்டேன். அந்த ஏரியா இப்ப டெவெலப் ஆகிட்டதால் அந்த கிரவுண்டைத்தான் ஒரு லட்ச ரூபாவுக்குப் போன வாரம் வித்தேன். அதைத்தான் அவனுக்குக் கொடுத்தோம்.''
விசாலம் பேசத் தெரியாமல் தவித்தாள்.
(குமுதம் 14-12-2005 இதழில் வெளியானது)
12 comments:
காலம் எல்லாவற்றுக்கும் ஒரு மதிப்பு வைத்திருக்கிறது..
குமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்! அருமை.
பெரியவர்கள் எதைச் செய்தாலும் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதை உணர்த்தி இருக்கு இக்கதை.
எதிர்பாரா முடிவு எப்படி கொடுப்பது என்பதற்கு உங்கள் கதை எங்களுக்கு அனுபவம்.
ஒருபக்கத்திலும் நல்ல கருத்தைச் சொல்ல முடியும்.
:)
கதை அருமை.
இந்த கதை நான் மலையாளத்தில் மொழிபெயர்த்து எனது வலைப்பதிவில் போட்டிருக்கிறேன். முன்னதாக அனுமதி பெறாததில் மன்னிக்கவும்.
இப்படிக்கு ,
அன்புடன்,
கே.பி.சுகுமாரன்
எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் உண்டுன்னு இப்ப புரிஞ்சது. குமுதத்தில் வெளிவந்ததுக்கு வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு. குமுதத்தில் வந்திருக்கா!!! பாராட்டுக்கள்
அருமையாய் இருக்கிறது... வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள். அருமையான கதை. எதை எப்போது செய்ய வேண்டும் என உணர்த்திய கதை.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!