அன்புள்ள சுந்தர்,
நீ சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு சென்றிருப்பதாக பழநி சொல்லித் தெரிந்து கொண்டேன். வெகு விரைவிலேயே மிகப் பெரிய டைரக்டராக வருவேன் என்று நீ சபதம் செய்திருப்பதாகவும் அவன் சொன்னான்.
வகுப்பை கட் அடித்துவிட்டு நீ எழுதும் கவிதைகளைப் பார்க்க நேர்ந்த போதே உனக்குள் ஒரு கவிஞன் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
'வானில் பறக்கும் மேகத்துக்குத் தெரியுமா, அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மயிலின் ஏக்கம்?' என்ற உன் கவிதையை நான் எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்து மகிழ்ந்திருக்கிறேன் தெரியுமா?
பொதுத் தேர்வைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் ராத்திரியெல்லாம் கண் விழித்து ஒரு நாடகம் எழுதினாயே, நினைவிருக்கிறதா? அதைப் படித்த போதே உனக்குள் ஒரு கதாசிரியனும் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டேன்.
ஒரு பணக்காரப் பெண் ஏழை வாலிபனைக் காதலித்து அந்தக் காதலுக்காக தன்னுடைய எல்லா சுகங்களையும் இழந்து, கடைசியில் அவனையே கல்யாணமும் செய்து கொள்கிறாள் என்ற அந்தக் கதை சினிமாவாக எடுக்கப்பட்டால் தமிழ்த் திரையுலகை ஒரு புதிய பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது.
உன் அக்காவின் கல்யாணம், அம்மாவின் தீராத நோய், குடும்பத்தின் பொருளாதார நலிவு என்கிற மாதிரி சின்ன சின்னப் பிரசினைகளைப் பற்றியெல்லாம் அனாவசியமாக நீ அலட்டிக்கொள்ளாதே! அதை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். அதைவிட அவருக்கு வேறென்ன வேலை? நீ உன் பி.இ. படிப்புக்கான வேலையில் சேர்ந்துவிட்டாயானால் உனக்கான ஆஸ்கர் பரிசை நீ வாங்குவது எப்போது?
இப்படியெல்லாம் எழுதி உன்னை உற்சாகப் படுத்த வேண்டும் என்று எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி செய்ய முடியவில்லையே! காரணம் நான்...
உன் அன்புள்ள,
அப்பா.
(13-02-2005 விகடனில் பிரசுரமானது. )
17 comments:
மனதை நெகிழவைத்த கதை. உங்களுக்கு எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
ரேகா ராகவன்.
சிலிர்க்க வைத்தது ஜனா! மிக அருமையான கதை!!!
நீ உன் பி.இ. படிப்புக்கான வேலையில் சேர்ந்துவிட்டாயானால் உனக்கான ஆஸ்கர் பரிசை நீ வாங்குவது எப்போது?
...... நச்னு இருக்குது. அருமையான கடிதம். வாழ்த்துக்கள்!!!
HAPPY DEEPAVALI!!!
எனக்கு இந்த கதையில் முழு உடன்பாடு உண்டு..
நல்லா எழுதியிருக்கிங்க. ஒரு பக்கத்துல அடக்கப்பட்ட ஆல விதை!
நல்லா இருக்கு ஜனா..
அன்பான அப்பா. அருமை சார்
அருமையான அப்பா. நல்ல கதை சார்.
nalla oru kadidham as same as kavidhai...
லெட்டர் மிக உருக்கம்... குறிப்பாக அந்த கடைசி வரியில் வரும் :
//உன் அன்புள்ள,
அப்பா.//
பிரமாதம்... சிறிய கதையில் கூட அசத்த முடியும் என்பதற்கு உங்களின் கதைகள் ஒரு உதாரணம்...
வலையுலக தோழமைகள், அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
உண்மைலேயே கல்க்கல்ங்க ..
அதிலும் கடைசி வரிகள் உண்மைலேயே உருக்கமா இருக்குங்க ..
உங்களால் மட்டுமே முடியும்.. இப்படி ஒரு பைனல் டச் கொடுத்து அசத்த!
அருமையான கதை.
இரண்டாம் பத்தியிலேயே sarcastic story என நினைத்தால், கடைசியில் உருக வைத்து விட்டீர்களே.
கடிதம் எப்படியோ தொடங்கி, வளைந்து கடைசியில் ஒரு அப்பாவின் கண்ணீர் 'திராவகமாய்'
கடைசி வரி ரியலி ‘ நச் ‘
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/
நன்றி ராகவன்!, நன்றி சிவா!, நன்றி சித்ரா!, நன்றி பிரசன்னா!, நன்றி நிலாமகள்!, நன்றி Balaji சரவணா!, நன்றி வானம்பாடிகள்!, நன்றி வெங்கட் நாகராஜ்!, நன்றி Dosai!, நன்றி R.Gopi! நன்றி செல்வக்குமார்! நன்றி ரிஷபன்! நன்றி சுகந்தன், நன்றி Vasan! நன்றி ஆர். ராமமூர்த்தி!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!