Wednesday, November 5, 2025

நேர்த்தி என்பது...


'எதைத் திரும்பத் திரும்பச் செய்கிறோமோ அதுவே நாம். ஆகவே நேர்த்தி என்பது ஒரு செயல் அல்ல, ஒரு பழக்கமே.'
இந்த பிரசித்தி பெற்ற அருமையான மேற்கோளுக்குச் சொந்தக்காரர்...
Will Durant. இன்று பிறந்த நாள்.
தத்துவ வாதியும் வரலாற்றாசிரியருமான இவர் முதலில் எழுதியது 'The Story of Philosophy'. பல்வேறு கூறுகளாக பரந்து காணப்படும் வரலாற்று ஆக்கங்களை பார்த்தவர் முழுமையான ஒரு உலக வரலாற்றை எழுதக் கொண்ட ஆவலின் விளைவாக எழுந்ததுதான் உலகப் புகழ் பெற்ற 'The Story of Civilization' என்ற மாபெரும் வரலாற்று ஓவியம். 40 லட்சம் வார்த்தைகளாலான 11 வால்யும்களில் ஐந்தை எழுதியது மனைவியுடன் சேர்ந்து.
12 -வது தொகுதிக்கான குறிப்புகளையும் விட்டுச் சென்றிருந்தவர்கள் பதின்மூன்றாவது தொகுதிக்கு வைத்திருந்த பெயர் 'The Age of Einstein'.
ஆதர்ச தம்பதி. ட்யூரண்ட் நோயுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் மனைவி ஏரியல் சாப்பிடாமலிருந்து மரணமடைய எப்படியோ அதை அறிந்து கொண்ட கணவர் இரண்டே வாரத்தில் தானும் …
சொன்ன இன்னும் சில…
'சரித்திரம் என்பது பெரும்பாலும் ஊகம்; மீதி பாரபட்சம்.'
'விஞ்ஞானம் அறிவைத் தருகிறது, ஆனால் வேதாந்தம்தான் விவேகத்தைத் தரமுடியும்.'
'60 வருடத்துக்கு முன்பு எனக்கு எல்லாமே தெரிந்திருந்தது. இப்போது எனக்கு எதுவும் தெரியவில்லை. நம் அறியாமையை கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து கண்டுபிடிப்பதே கல்வி என்பது.'
'பெரும்பாலானவர்களின் பிரச்சினை என்னவென்றால் மூளையை வைத்து சிந்திக்காமல் தங்கள் நம்பிக்கைகளையோ பயங்களையோ ஆசைகளையோ வைத்து சிந்திப்பது தான்.'
'ஒரு முதியவர் தன் வயதான மனைவியின் மீது வைத்திருக்கும் காதலுக்கு இளம் வயதில் நாம் கொண்டிருக்கும் காதல் மிக மேலோட்டமானது.'

‘விஞ்ஞானம் என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவு. விவேகம் என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்வு.’
'இளவயதில் நான் சுதந்திரத்தை வலியுறுத்தினேன். இப்போது நான் ஒழுங்கை வலியுறுத்துகிறேன். சுதந்திரம் என்பது ஒழுங்கின் விளைவு என்ற பெரிய கண்டுபிடிப்பை நான் செய்திருக்கிறேன்.'
'சரித்திரம் கற்றுக் கொடுக்கும் பாடங்களில் ஒன்று: பல நேரங்களில் எதுவும் செய்யாமல் இருப்பது உத்தமம். எதுவும் பேசாமல் இருப்பது எப்போதுமே உத்தமம்.'
'விவேகத்தைவிட ஆனந்தத்தையே விரும்புகிறது உலகம், விவேகமாக!'

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!