Thursday, November 13, 2025

ஈடிலா சுசீலா…



இசையின் இனிமையையும் தமிழின் இனிமையையும் ஒரு சேர ரசிக்கக் கொடுத்த பாடகர்கள் ஒரு சிலரில் முக்கியமானவர். தெளிவுக்குப் பெயர் சுசீலா.
‘“உன்னைக் கண் தேடுதே…” என்ற பாடல் முதலில் பிரபலமாயிற்று, உங்கள் பாடலைக் காது தேடுதே என்றானோம் நாம்.
பின்னர் “தண்ணிலவு தேனை” வாரி இறைத்தது. “அமுதை நிலவு பொழி”ந்தது. “காற்றுக்குள்ளே திருவிழா..” நடந்தது… அவரைக் “கேட்டாலே பசி தீர்ந்தது..”
“மழை பொழிந்து கொண்டே இருக்கும்…” பொழிந்துகொண்டே. என்ற வார்த்தையை அவர் பாடுகையில் எத்தனை அழகாக மழையின் இனிமையை குரலில் வரிக்கிறார்! ('குடும்பத் தலைவன்')
“ஒரே கேள்வி...ஒரே கேள்வி…” ('பனித்திரை') சரணத்தில் “ஏன் எடுத்து செல்லவா?” என்ற வார்த்தைகளை பாடும்போது அந்த செல்லக் குரல் இனிமை!
“காற்றோடு பூ உரசும்..” மென்னொலியை நினைத்துப் பார்த்ததுண்டா? சுசீலாவின் அந்தப் பாடலில் காதோடு இனிமை உரசும். “தனிமையிலே இனிமை காண முடியுமா?” ஏன் முடியாது இவர் பாடல்கள் அருகிருந்தால்?
மனைவியின் குரலாக ஒலிப்பதும் (“தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்…”) காதலியின் குரலாக ஒலிப்பதும் (“என்ன என்ன வார்த்தைகளோ…’’) கன்னியின் குரலாக ஒலிப்பதும் (“சரவண பொய்கையில் நீராடி…”) என்னவொரு த்ரீ இன் ஒன்!
“மன்னவன் வந்தானடி..” யின் உத்வேகமும் கம்பீரமும் என்ன ஒரு இன்கலவை!
எடுப்புக்கு ஒரு பாடல் “தேடினேன் வந்தது..” என்றால் ஒயிலுக்கு ஒரு பாடல் “யாருக்கு மாப்பிள்ளை யாரோ..” என்றால் துடிப்புக்கு ஒரு பாடல் “ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்..”
ஹாண்டிங் மெலடியையும் (“நெஞ்சம் மறப்பதில்லை…”) ஹாண்டில் செய்யும் அந்தக் குரல். டான்ஸிங் நம்பரையும் பௌன்ஸிங் செய்யும்.(“பாவை பாவைதான்… ஆசை ஆசைதான்…“ - எங்க மாமா)
அந்த 120 வாத்தியங்களையும் தாண்டி மனதில் தேங்கி நிற்கும் “கண்கள் எங்கே.. நெஞ்சமும் அங்கே..” அந்தக் குரலின் முழு வீச்சைக் கண்டுகொள்ள!
“நாளை இந்த வேளை..” மட்டுமா? எந்த நாளும் எந்த வேளையும் அவர் பாடல் கேட்பது தனி சந்தோஷம்தான்.
ஏறி அமர்ந்து விட்டோமானால் “உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…” என்று அந்தக் குரல் செலுத்தும் இசைப் படகை! அப்புறம் அது ‘செல்லாத திசையும் திசையல்ல!’
“மானாட்டம், தங்க மயிலாட்டம்…” என்று அவர் குரலாடும் சதுராட்டம் கண்டோம். “உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை வந்தது இங்கே வா.. வா…” எனும்போது “பொன்னெழில் பூத்ததை”க் கண்டோம்..
“என்னென்னவோ நான் நினைத்தேன், நினைத்தேன், சொல்ல வார்த்தையில்லையே…” நிறைவேறாத ஆசைகளின் ஏக்கம் ததும்ப ‘அதே கண்களி'ல் ஒலிப்பதும் அதே குரல்தான்!
‘நம்மை எங்கெங்கோ கொண்டு செல்லும்’ இது “இன்று வந்த இந்த மயக்கமா…?” இல்லை. “ஆலயமணியின் ஓசை…”யிலிருந்தே தொடர்ந்ததாச்சே!
“சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து..” சங்கீதத்தின் நல்ல ராகம் எடுத்து மனதைத் தடவி கொண்டோடும் இவர் பாட்டு.
“அன்பே அன்பே .. அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா..” எனும்போது “மாது மட்டுமா மயங்குகிறாள்”? (பாசமலர்)
“ஆயிரம் பாடல்கள் வருவதுண்டு.. ஆனால் இதுதான் முதல் பாடல்..” எனும்படி அமைந்து விடுகிறது, ‘கற்பகம்’ படத்தின் “அத்தைமடி மெத்தையடி…”யை இவர் பாடும்போது.
“கண்டேன் கண்டது நல்ல வழி…” என்று ‘ஒருத்தி ஒருவனைப் பாடுவதை நினைத்துவிட்டால்’ இசைக்கு குரல் கூட்டும் இனிமை விளங்கிவிடும்.
“ஆசை கொஞ்சம், நாணம் கொஞ்சம்.. பின்னிப் பார்க்கும்” நாயகியின் நிலையை தன் குரலில் பின்னும் அழகே அழகு… “முத்துக்களோ கண்கள்…” கேட்டதும் தந்துவிட்டோம் நம்மை!
“முத்தான முத்தல்லவோ…” ஒவ்வொன்றும்?
ரெண்டுமே ஒரே உணர்வு என்றாலும் “லவ் பர்ட்ஸ்…” அறுபதுகளுக்கும் “டார்லிங்.. டார்லிங்…” எழுபதுகளுக்கும் குரல் என்னமாய்ப் பொருந்துகிறது!
“பார்த்த ஞாபகம் இல்லையோ?” கணீர்க் குரலில் என்றால் கண்ணீர் வரவழைக்கும் குரலில் “காவேரி ஓரம்…”
ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ற பெண் குரல் ஏது வேறு என்று கேட்கவைக்கும் அந்த வரிகள்… “அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்…” என நிலைமையை சீராகத் தெரிவிக்கிற குரல் சட்டென்று இறங்கி, “அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்…” என்று குழைவதும் “ஆசை நெஞ்சைச் சொல்லப் போனால் அச்சம் அச்சம்..” என்று மீண்டெழுந்து, “அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்!” என்று அலுத்துக் கொள்வது ஆளைக் கொல்வது!
“உன்னை நான்..”இன் நானுடன் “சந்தித்தேன்..” இன் தேனைக் கோர்ப்பதைக் கவனியுங்கள். ஒரு பாடலில் பாடகரின் பங்களிப்பை, ஈடுபாட்டை, அர்ப்பணிப்பை ஒரே நொடியில் புரிந்துகொள்ள முடியும்.
“என் மன்னவன்.. உன் காதலன்.. எனைப் பார்த்ததும்.. ஓராயிரம்.. கதை சொல்கிறான்…” இரு ராகப் பிரவாகத்தில் அவர் சஞ்சரித்து வார்த்தைகளைச் சொடுக்கும்போது “அம்மம்மா… இன்னும் கேட்கத் தூண்டுமோ?”
“விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே…” ஆகி விடுகிறோம் “முல்லை மலர் மேலே…” என்று பாடுகையில்.
“மன்னவனே அழலாமா…” வின் உருக்கத்துக்கும் “உங்கள் அழகென்ன, அறிவென்ன, மனமென்ன, குணமென்ன, கோபம் வரலாமா…” வின் எள்ளலுக்கும் இடையே எத்தனை அகலம்!
எத்தனையோ தாலாட்டுப் பாடல்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் அவற்றுக்கெல்லாம் சிகர இனிமை சிந்தும் அந்தப் பாடல்.. தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தபோது அவர் பாடிவிட்டார். அவர் திரை ‘வாழ்விலே ஒளி வீசவே வந்ததோ’ அந்தப் பாடல்? “அன்பில் மலர்ந்த நல்ரோஜா…கண் வளராய் என் ராஜா…” (’கணவனே கண் கண்ட தெய்வம்') “ஆ… தாலோ தாலோ தாலோ… ஆராரோ.. ராரோ ராரோ…” என்று wind up செய்யும்போது eternal bliss இல் wrap up செய்யப்படுவதைத் தவிர்க்க முடியாது.
அதானே, ஏன் தவிர்க்கணும்?
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!