நெருங்கும் மரணத்துடன் ஆஸ்பத்திரி படுக்கையில் படுத்திருக்கும் ஜெமினி. எதிரில் கண்ணீருடன் மனைவி. தலையை அசைக்கிறார்.(’அழாதே!’). அந்த பேப்பர்களை கொடுக்கிறார். கையெழுத்து போட்டு விட்டேன் என்பதை சைகையால் தெரிவிக்கிறார். வாங்கிய அவள் அழுகையுடன் நகர.. படுத்திருக்கும் ஜெமினி தன் பாதங்களை விலக்கி பார்க்கிறார் என்ன செய்கிறாள் என்று. அவர் பார்வையில் தெரியும் இயலாமை. ஏக்கம். அவள் அதைக் கிழித்துப் போட்டதும் ஒரு வினாடி பதைப்பது... மறுவினாடி ஒரு புன்னகை முகத்தில். அவளை நோக்கி கையை நீட்டுகிறார். அவள் ஓடி வந்து காலை பற்றி அழுகிறாள். நீட்டிய கைகள் துவள தலை சாய்கிறார். முகத்தில் அந்த ‘புன்னகை’!
படம்; 'புன்னகை'
அந்த ஒரு படம் போதும் அவர் பேரைச் சொல்ல.
Gemini Ganesan... A Gem of an actor… இன்று பிறந்த நாள்!
‘புன்னகை’ அவரின் மாஸ்டர்பீஸ், அவரின் புன்னகையைப் போலவே. ‘உண்மையாக வாழ்றவன்னு சொல்றியே? தன் மகனிடம் அந்த உண்மையை சொன்னானா?’ என்று சகஸ்ரநாமம் கேட்கிறபோது ‘எங்க அப்பா சொல்லி இருக்காரு'ன்னு பையன் அதை சொல்லும்போது ஃப்ரேமில் இல்லாமலேயே ஃபிரேமில் நிற்பார் ஜெமினி.
முதல் படம் ‘மிஸ் மாலினி’க்குப் பிறகு ஆறு வருடம் ஆயிற்று அடுத்த வாய்ப்புக்கு. ‘தாய் உள்ளம்’ அதிலும் வில்லன் ரோல். ரெண்டு வருடம் பொறுத்து ‘மனம் போல் மாங்கல்யம்’ (டபிள் ரோல்) வந்து பிரபலமானதும் மளமளவென்று படங்கள். மாயா பஜார்.. யார் பையன்.. களத்தூர் கண்ணம்மா.. வஞ்சிக்கோட்டை வாலிபன்.. கல்யாண பரிசு வந்ததும் ஸ்டார்!
நம்ம ஊர் கேரி க்ராண்ட்! ஸ்ரீதரின் ரொமான்டிக் படங்களுக்கு பொன் கச்சிதமாகப் பொருந்தியவர். ‘தேன் நிலவி'ல் வைஜயந்திமாலாவுடன் காஷ்மீர் குன்றொன்றில் அமர்ந்து பேசும் போது ‘இன்னும் கொஞ்சம் மேலே போலாமா?’ என்று கடைவாயில் புன்னகையுடன் அப்படி அழகாகக் கேட்க அவரால் மட்டுமே முடியும்!
‘ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?’ என்று நளினமாக அவர் கேட்கும்போது எந்த நாயகியால்தான் மீண்டும் பாடாமல் இருக்க முடியும்? கொஞ்சும் சலங்கை. கொஞ்சும் குரல்.
மிக நேர்த்தியாக நடித்திருந்த படம் ‘சாந்தி நிலையம்.’ இரவில் காஞ்சனாவின் அறைக் கதவைத் தட்டி... கேட்கிறார். ‘பசங்க படுத்துட்டாங்களா?’ நிறுத்தி, ‘என்னமோ பாட்டு சத்தம் கேட்டது…’ நிறுத்தி, ‘பசங்க பாடினாங்களா?’ நிறுத்தி, ‘நீங்க பாடினீங்களா?’ நிறுத்தி, ‘தட்ஸ் ஆல் ரைட்!’ வாயிலிருந்து சுருட்டை எடுக்காமலே சொல்லி விட்டுப் போகும் இதமான மிடுக்கு. Alec Guinness ரேஞ்சில் அசத்தலான நடிப்பு அது!
‘சுமைதாங்கி.’ பெண் பார்க்க வந்திருக்கும் போது காபிப் பொடி இரவல் வாங்க பக்கத்து வீட்டுக்கு ஓடும் மிடில் கிளாஸ் குடும்பத்தின் முழுச் சுமையும் அவன் தலையில். கிடைத்த வேலையைக் கூட அண்ணனுக்குத் தாரைவார்க்கும் நிலை. கடைசியில் காதலையும் தியாகிக்க நேரும்போது ‘மயக்கமும் கலக்கமும்’ தெளிந்து அவன் ஏற்றுக்கொள்ளும் முடிவு! மிளிரும் அவர் நடிப்பின் வடிவு!
‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் தன் ரொமான்டிக் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்தார் பாருங்கள், நச்! What a portrayal of a restrained character!
‘Namak Haraam’ தமிழில் வந்த போது (‘உனக்காக நான்') ராஜேஷ் கன்னா ரோலில் இவர். அமைதியாக அமரிக்கையாக.. நட்பின் உற்சாகத்தில் துள்ளும்போதும் சரி, கடமையின் உத்வேகத்தில் நண்பனிடம் பொங்கும் போதும் சரி, நடிப்பு சீராக சம அளவில் இருக்கும்.
ஸாஃப்ட் ரொமான்டிக் ஹீரோ ரோல் ஜெமினிக்கு என்றால் டைரக்டருக்கு பாதி வேலை தீர்ந்தது.
பாத்திரத்தின் ஆழத்தில் நடிகர் காணாமல் போய் விடாமலும் நடிப்பின் ஆழத்தில் பாத்திரம் காணாமல் போய் விடாமலும் பார்த்துக் கொள்வதில் 'மிருதுவான கெட்டி'க்காரர்.
><><

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!