Saturday, November 22, 2025

கலை என்பது...


‘எப்படி நீ இருக்கிறாயோ அதற்காக வெறுக்கப்படுவது,
எப்படி நீ இல்லையோ அதற்காக விரும்பப்படுவதைவிட
எவ்வளவோ மேல்.’
… சொன்னவர் Andre Gide.
பிரஞ்சு எழுத்தாளர். 1947 இன் இலக்கிய நோபலைப் பெற்றவர்.
இன்று பிறந்த நாள்!
சுவை, இன்னும் சொன்னவை...
‘உண்மையைத் தேடுபவர்களை நம்பு. உண்மையைக் கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்பவர்களை சந்தேகி.’
‘கரையிலிருந்து கண்ணை எடுக்கும் தைரியமுள்ளவனால்தான் புதுப்புது கடல்களைக் கண்டு பிடிக்க முடியும்.’
‘கலை என்பது கலைஞனுக்கும் கடவுளுக்குமான கூட்டு உருவாக்கம். கலைஞன் எத்தனை குறைவாக செய்கிறானோ அத்தனைக்கு நல்லது.’
‘சந்தோஷத்தைக் கதையாகச் சொல்ல என்ன இருக்கிறது? எது அந்த சந்தோஷத்தை உண்டாக்கியது, எது அதை அழித்தது என்பதைத்தான் சொல்ல முடியும்.’
‘நம்மைச் சிரமப் படுத்தி நம் முயற்சியை அதிகம் கோரிய காரியம்தான் நமக்கு மிக முக்கியமான விஷயங்களை கற்றுத் தர முடியும்.’
‘சந்தோஷம் என்பது அபூர்வமானது, மிகச் சிரமமானது, மிகவும் அழகானது என்பதை அறியுங்கள். இந்த முக்கியமான கண்டுபிடிப்பை நீங்கள் நடத்தியதும் சந்தோஷத்தை ஒரு தார்மீகக் கடமையாக தழுவிக் கொள்ள வேண்டும்.’
‘எல்லாம் முன்பே சொல்லப்பட்டு விட்டது; ஆனால் யாருமே கேட்கவில்லை என்பதால் மறுபடி மறுபடி முன்னுக்குப் போய் தொடங்க வேண்டியிருக்கிறது.’
‘மனிதர்களிடையே நாம் வாழ்வது வரை மனிதத்துவம் பேணுவோம்.’
‘ஆகவே’ என்பது கவிஞர்கள் மறக்க வேண்டிய வார்த்தை.’
'உங்களுக்குள் உயிர்த்திருக்கும்
அந்த ஒன்றுக்கு உண்மையாய் இருங்கள்.'

சமந்தாவின் குரலாக...


தியோடர் ஒரு எதிர்கால பிரஜை. தன் தனிமையை போக்க ஒரு ஏ. ஐ. (Artificial Intelligence) பொருத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வாங்குகிறான். பழகப் பழக சொக்கும் குரலில் பேசும் சமந்தாவை, அதுதான் அந்த ஓ.எஸ்ஸின் பெயர், நேசிக்கவே தொடங்கி விடுகிறான். ‘Her’ படத்தில் சமந்தாவின் குரலாக படம் முழுவதும் பேசி அசத்தியவர்…
Scarlet Johansson... இன்று பிறந்தநாள்!
கிறங்க வைக்கும் அழகுடன் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஹாலிவுட்டில் வலம் வரும் ஸ்டார்லெட், ஸ்கார்லெட்.
ஹாலிவுட்டின் highest grossing படங்களில் ஒன்றாகிய 'Avengers - Endgame' இல் நடித்தவர்.
ஏழு வயதில் நடிக்க வந்த இவர் ஒரு அட்டகாசமான பாடகி. டிஸ்னியின் 'ஜங்கிள் புக்'கின் “Trust in me..” -இலிருந்து “Set it free..” வரை நிறைய ஹிட்ஸ்! தன் ஃபேவரிட் Frank Sinatra மாதிரி பாடவேண்டும் என்று ஆசை...
பிரபல நடிகையான பின்னும் பிராட்வே நாடகம் ஒன்றில் நடித்தார் ஆசை ஆசையாக. தன் இமேஜ் காணாமல் போய்விடுகிற அளவுக்கு பாத்திரத்தில் ஆழ்ந்து நடித்ததாக பாராட்டு கூடை கூடையாக!
கடந்த காலத்தின் எதிரிகளை வஞ்சம் தீர்க்கும் ‘Black Widow’-வின் நடாஷாவை மறந்திருக்க மாட்டீர்கள்.
பிரபல Christopher Nolan இயக்கிய ‘The Prestige’ படத்தில் இரு பெரும் மேஜிக் நிபுணர்களின் சினேகத்தினூடே அவதியுறுபவராக, சிறிய பாத்திரம்தானெனினும் மனதில் பதிந்த மேஜிக் நடிப்பு!
>><<>><<

Friday, November 21, 2025

ஆழ்கடலுக்கு அடியில்...


ஆழ்கடலுக்கு அடியில ஃபிளாட்டா ஒரு நிலம் இருக்கணும்னுதானே நினைக்கிறீங்க? அப்படித் தான் முன்னால நினைச்சிட்டிருந்தாங்க. அப்போ அந்த பொண்ணு வந்து சொல்லிச்சு, அங்கே மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைஞ்சிருக்குன்னு.
நெம்பக் கஷ்டப்பட்டாங்க நம்பறதுக்கு. அப்புறம் பார்த்தா 40000 மைலுக்கு குன்றுகள் நீண்டு கிடக்குது. பூமி சுற்றளவே சுமாரா 25000 தான்.
இது நடந்தது 1957-லே. 20 வருஷம் கழிச்சு அடுத்த தகவலை முன்வெச்சார். கண்டங்கள் ஒண்ணை விட்டு ஒண்ணு நகருவதை... பரிகசிச்சாங்க, ஆனாலும் அப்புறம் ஒத்துக்கிட்டாங்க.
அந்தப் பொண்ணு Marie Tharp… இன்று பிறந்தநாள்!
கூகிள் ஒரு டூடில் வெளியிட்டிருக்காங்க அவங்களுக்காக 2022 -இல்.
அவரைப் பத்தி நிறைய புத்தகங்கள் வந்திருக்கு குழந்தைங்க படிக்கிறதுக்கு. படிக்கக் கொடுங்க. ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கும்...

Wednesday, November 19, 2025

வாழ்க்கையின் குறிக்கோள்...


'பெருமளவில் தோற்கத் தயாராயிருப்பவர்களே
பெருமளவில் வெற்றி பெற முடியும்.'
சொன்னவர் Robert Kennedy … இன்று பிறந்தநாள்.
சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி John F Kennedy யின் சகோதரர்... ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இவர் வென்று வருகையில் சுடப்பட்டு இறந்தார். ஜனங்களின் பிரியமானவர்...
சொன்னவை அருமை...
‘விட்டுப்போவதே இல்லை எனில் நீ தோற்றுப் போவதே இல்லை.’
‘ஒரு இலட்சியத்துக்காக நீ எழுந்து நிற்கும் ஒவ்வொரு தடவையும் ஒரு சின்ன நம்பிக்கை அலையை எழுப்புகிறாய்.’
‘ஆகச் சிறந்த பங்களிப்பை செய்யும்போதுதான் நீங்கள் ஆகப் பெரும் மகிழ்ச்சியை அடைகிறீர்கள்.’
‘வாழ்க்கையின் குறிக்கோள் என்னவெனில் விஷயங்கள் முன்னேற ஏதேனும் ஒரு விதத்தில் பங்களிப்பது தான்.’
‘எல்லாம் எப்படி நடக்கின்றன என்று பார்த்து ஏன் அப்படி என்று கேட்பார்கள் சிலர், நானோ நடந்திடாத விஷயங்களை கனவு கண்டு ஏன் அது நடக்கவில்லை என்று கேட்கிறேன்.’
‘கண்ணியம்தான் ஒரு மனிதனின் இயற்கையான சுபாவம்.’
‘விமரிசனம் இல்லாத வாழ்க்கை வாழத் தகுந்ததல்ல.’
‘உங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று விரும்பினாலும் அப்படி அது அமைய முடியும்.’

இரண்டு கையாலும் ...


200 நாட்கள்! (1881) மிகக் குறுகிய காலமே அந்தப் பதவியில் இருந்தார்.. சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவர். தனக்குப் பதவி தரவில்லை என்ற ஆத்திரம் கொலையாளிக்கு. 'கடவுளே! என்ன இது!'தான் இவரது கடைசி வாக்கியம்.
James A Garfield.. இன்று பிறந்தநாள்!
குண்டு பாய்ந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றபோது உதவிக்கு வந்தார் டெலிபோன் புகழ் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல், தான் கண்டுபிடித்திருந்த மெடல் டிடெக்டரைக் கொண்டு. அது பலன் தரவில்லை.
இரண்டு கையாலும் எழுதுவார். இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் கூட அவரால் முடியும்!
'முதலில் நான் என்னை ஒரு மனிதனாக்க வேண்டும்,
அதில் வெற்றி பெற்றால் மற்ற
அனைத்திலும் நான் வெற்றியடைவேன்.'
இந்த மணி வாசகத்துக்குச் சொந்தக்காரர்...
இன்னும் சொன்னவை… ‘கடின வேலை செய்யும் ஆற்றல் ஓர் திறமை. அல்லது திறமைக்கு ஒரு சாத்தியமான மாற்று!’
‘எத்தனையோ தொல்லைகள் நேர்ந்து இருக்கின்றன எனக்கு. ஆனால் மிக மோசமான தொல்லை என்பது ஏற்படவேயில்லை.’
‘ஐடியாக்கள்தாம் உலகை ஆள்கின்றன.’
'விஷயங்கள் தானாக மலராது, யாராவது வந்து அதை மலர்த்தும் வரை.'
'நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நீங்கள் மிகப் பெரியவராக இல்லாவிடில் நீங்கள் அதற்கு மிகச் சிறியவர்.'
'உண்மை உங்களை விடுவிக்கும் ஆனால் அதற்குள் அது உங்களை ஒரு வழி பண்ணிவிடும்.'

மிக அழகிய ...


‘படம் ஃபெயில்யர் என்பது ஜலதோஷம் மாதிரி. ஆஸ்பிரின் எடுத்துக்கொண்டு ஆறு நாட்கள் படுக்கையில் இருந்தும் நீங்கள் சரியாகலாம் அல்லது ஆறு நாட்கள் அதை அலட்சியப்படுத்தி நடமாடியும் சரியாகலாம்.’
சொன்னவர் திரையுலக வரலாற்றிலேயே மிக அழகிய பெண் என்ற பேரை ஹாலிவுட்டில் வாங்கிய Gene Tierney... இன்று பிறந்த நாள்!
நாயகி படம் தொடங்கும் முன் கொலை செய்யப்பட்டு விடுகிறாள். விளம்பரக் கம்பெனி நடத்தும் லாரா. டிடெக்டிவ் மார்க் வந்து துப்பறிந்தால், அவள் பழகிய எல்லாருமே அவளைக் காதலித்து இருக்கிறார்கள். அப்புறம் ஏன் யார் அவளை கொல்ல வேண்டும்? ஏன் துப்பறிய வந்த இவருக்கே அவள் மீது ஒரு காதல் பிறக்கிறது. அவளைக் கனவு கண்டபடியே அவள் அறையில் இவர் தூங்கிவிட சத்தம் கேட்டு விழித்து பார்த்தால் அங்கே லாரா! அப்படியானால் கொலைகாரன் கொன்றது யாரை?
சுவாரசியமாகச் செல்லும் ‘Laura.’வில் இவர்தான் லாரா. 1944 இல் வந்த Film noir Classic!
ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தன் முதல் நாடகத்தில் தண்ணீர் சுமந்து நடந்தபோது, நான் பார்த்ததிலேயே மிக அழகான தண்ணீர் சுமக்கும் பெண் என்று ஓர் விமரிசகர் எழுதினார்.
‘Close My Heart’, ‘The Razor’s Edge’ இப்படி நிறைய ஹிட் படங்களில் நடித்து 50களைக் கலக்கியவர். ‘Leave Her to Heaven’ படத்துக்கு ஆஸ்கார் நாமினேஷன்.
பிற்காலத்தில் மன நோயால் பாதிக்கப்பட்டவர் மீண்டு வந்து, மீண்டும் ஓர் அத்தியாயத்தை திரையில் எழுதினார்.
சொன்ன இன்னுமிரண்டு...
‘உன்னால் முடியாது என்று சொல்வதைப் போல ஒரு பெண்ணின் காதல் மீதான உறுதியை அதிகரிக்கச் செய்வது எதுவும் கிடையாது.’
‘ஒருவரை ஒருவர் காதலிப்பவர்கள் திடீரென்று நிறுத்தி விடுவதை குழந்தைகளால் புரிந்து கொள்ள முடிவதில்லை.’

Tuesday, November 18, 2025

மாபெரும் கேள்விகள்...


'விஞ்ஞானி என்பவரை விஷயம் தெரிந்த ஓர் சிறுவன் எனலாம். ஒவ்வொரு சிறுவனிடமும் ஒரு விஞ்ஞானி இருக்கிறார். மற்றவர்கள் அதைவிட்டு வெளிவர, அப்படியே இருப்பவர் விஞ்ஞானி ஆகிறார்.'
இந்த அழகிய வரிகளைச் சொன்னவர் George Wald...
நோபல் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி...
இன்று பிறந்த நாள்!
இன்னும் சொன்னவை சுவை..
‘இன்று உலகில் உயிருடன் இருக்கும் எந்தப் பிராணியும் மிகப் பழங்காலத்தில் இந்த கிரகத்தில் தோன்றிய முதல் உயிரினத்துடான உடை படாத சங்கிலித் தொடர்பை பிரதிபலிக்கிறது. அதாவது மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்.’
‘மாபெரும் கேள்விகள் என்பது ஒரு புத்திசாலித்தனமான குழந்தை கேட்டு, பதில் கிடைக்காததால் கேட்பதை நிறுத்தி விட்ட அந்தக் கேள்விகள்.’
‘வலியின் அனுபவம் இல்லாவிட்டால் சந்தோஷத்தை அனுபவிப்பது ரொம்ப கடினமானது.’
‘மனிதர்கள் விரும்பும் பெரும்பாலான பொருட்களின் கஷ்டம் என்னவென்றால் மனிதர்கள் அவற்றை அடைந்து விடுவது தான்!’
‘விஞ்ஞானி என்பவர்தான் மனிதர்களிலேயே மிகவும் சந்தோஷமான நபராக இருக்க வேண்டும்.’
‘என்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை மாலிக்யூல்களுடன் கழித்திருக்கிறேன், நல்ல நண்பர்கள் அவை.’
‘கடவுளை நம்ப நான் விரும்பவில்லை ஆகவே தானாக உதித்து வந்த பரிணாமம் என்ற, விஞ்ஞானப்படி சாத்தியமற்றது என்ற (லூயி பாஸ்டரும் மற்றவர்களும் நிரூபித்த) கொள்கையை நம்புகிறேன்.’
‘என் மாணவர்களிடம் நான் சொல்லுவது நிறைவேற்ற முடிகிற ஒரு நோக்கத்தை வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே முயற்சி செய்யுங்கள் என்பதுதான்.’

உலவும் தென்றல்...


”உலவும் தென்றல் காற்றினிலே...ஓடமிதே.. நாமதிலே...”
ராஜ குமாரியை குறி வைத்து ஏமாந்து ’மந்திரி குமாரி’யை மணந்த வில்லன் அவளை ஓடத்தில் உலா அழைத்துப் போகும் பாடல்.
ஒவ்வொரு வரியும் கதையோடியைந்த அர்த்தம் உள்ளதாக இருக்கும் இந்தப் பாடலில். அவளைத் தலை முழுகுவதே அவன் எண்ணம். அதை அறியாப் பேதை...
"உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே.." என்றவள் பாட, "இதயம் அந்த மலைக்கு ஏது அன்பைக் காட்டவே?" என்று உண்மையைக் கோடி காட்டுகிறான்.
அவளோ புரியாமல் தொடர்கிறாள்: "தெளிந்த நீரைப் போலத் தூய காதல் கொண்டோம் நாம்..." அப்போதும் அவன் "களங்கம் அதிலும் காணுவாய், கவனம் வைத்தே பார்." என்று மறைமுகமாக...
அந்த அப்பாவி மடந்தை அதையும் அவன் குறும்பாக எடுத்துக் கொண்டு "குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?" என்று பாட, "உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே..." என அவன் முடிப்பான்.
ஜிக்கியும் லோகநாதனும் அசத்தும் அற்புதமான அந்த வரிகளை இயற்றியவர் மருதகாசி.
தமிழ் சினிமா இசையின் தலை சிறந்த 10 பாடல்களில் ஒன்றான இதன் நிகரில்லா இசையை (கேட்கும்போதே ஓடத்தில் சென்றாற்போல..) அமைத்தவர் மேதை ஜி. ராமநாதன்.
ஏற்கெனவே அவர் இசையமைத்த எம் கே தியாகராஜ பாகவதர் பாடலொன்று இதே இசை பாணியில்.. 'அமர கவி' படத்தில் "யானைத் தந்தம் போலே.."
படத்துடன் ஒன்றிய பாடல் காட்சி - 9.

Monday, November 17, 2025

அந்த ஒரு படம்...


துளி வசனம் இல்லாத அந்த இறுதிக் காட்சி...
நெருங்கும் மரணத்துடன் ஆஸ்பத்திரி படுக்கையில் படுத்திருக்கும் ஜெமினி. எதிரில் கண்ணீருடன் மனைவி. தலையை அசைக்கிறார்.(’அழாதே!’). அந்த பேப்பர்களை கொடுக்கிறார். கையெழுத்து போட்டு விட்டேன் என்பதை சைகையால் தெரிவிக்கிறார். வாங்கிய அவள் அழுகையுடன் நகர.. படுத்திருக்கும் ஜெமினி தன் பாதங்களை விலக்கி பார்க்கிறார் என்ன செய்கிறாள் என்று. அவர் பார்வையில் தெரியும் இயலாமை. ஏக்கம். அவள் அதைக் கிழித்துப் போட்டதும் ஒரு வினாடி பதைப்பது... மறுவினாடி ஒரு புன்னகை முகத்தில். அவளை நோக்கி கையை நீட்டுகிறார். அவள் ஓடி வந்து காலை பற்றி அழுகிறாள். நீட்டிய கைகள் துவள தலை சாய்கிறார். முகத்தில் அந்த ‘புன்னகை’!
படம்; 'புன்னகை'
அந்த ஒரு படம் போதும் அவர் பேரைச் சொல்ல.
Gemini Ganesan... A Gem of an actor… இன்று பிறந்த நாள்!
‘புன்னகை’ அவரின் மாஸ்டர்பீஸ், அவரின் புன்னகையைப் போலவே. ‘உண்மையாக வாழ்றவன்னு சொல்றியே? தன் மகனிடம் அந்த உண்மையை சொன்னானா?’ என்று சகஸ்ரநாமம் கேட்கிறபோது ‘எங்க அப்பா சொல்லி இருக்காரு'ன்னு பையன் அதை சொல்லும்போது ஃப்ரேமில் இல்லாமலேயே ஃபிரேமில் நிற்பார் ஜெமினி.
முதல் படம் ‘மிஸ் மாலினி’க்குப் பிறகு ஆறு வருடம் ஆயிற்று அடுத்த வாய்ப்புக்கு. ‘தாய் உள்ளம்’ அதிலும் வில்லன் ரோல். ரெண்டு வருடம் பொறுத்து ‘மனம் போல் மாங்கல்யம்’ (டபிள் ரோல்) வந்து பிரபலமானதும் மளமளவென்று படங்கள். மாயா பஜார்.. யார் பையன்.. களத்தூர் கண்ணம்மா.. வஞ்சிக்கோட்டை வாலிபன்.. கல்யாண பரிசு வந்ததும் ஸ்டார்!
நம்ம ஊர் கேரி க்ராண்ட்! ஸ்ரீதரின் ரொமான்டிக் படங்களுக்கு பொன் கச்சிதமாகப் பொருந்தியவர். ‘தேன் நிலவி'ல் வைஜயந்திமாலாவுடன் காஷ்மீர் குன்றொன்றில் அமர்ந்து பேசும் போது ‘இன்னும் கொஞ்சம் மேலே போலாமா?’ என்று கடைவாயில் புன்னகையுடன் அப்படி அழகாகக் கேட்க அவரால் மட்டுமே முடியும்!
‘ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?’ என்று நளினமாக அவர் கேட்கும்போது எந்த நாயகியால்தான் மீண்டும் பாடாமல் இருக்க முடியும்? கொஞ்சும் சலங்கை. கொஞ்சும் குரல்.
மிக நேர்த்தியாக நடித்திருந்த படம் ‘சாந்தி நிலையம்.’ இரவில் காஞ்சனாவின் அறைக் கதவைத் தட்டி... கேட்கிறார். ‘பசங்க படுத்துட்டாங்களா?’ நிறுத்தி, ‘என்னமோ பாட்டு சத்தம் கேட்டது…’ நிறுத்தி, ‘பசங்க பாடினாங்களா?’ நிறுத்தி, ‘நீங்க பாடினீங்களா?’ நிறுத்தி, ‘தட்ஸ் ஆல் ரைட்!’ வாயிலிருந்து சுருட்டை எடுக்காமலே சொல்லி விட்டுப் போகும் இதமான மிடுக்கு. Alec Guinness ரேஞ்சில் அசத்தலான நடிப்பு அது!
‘சுமைதாங்கி.’ பெண் பார்க்க வந்திருக்கும் போது காபிப் பொடி இரவல் வாங்க பக்கத்து வீட்டுக்கு ஓடும் மிடில் கிளாஸ் குடும்பத்தின் முழுச் சுமையும் அவன் தலையில். கிடைத்த வேலையைக் கூட அண்ணனுக்குத் தாரைவார்க்கும் நிலை. கடைசியில் காதலையும் தியாகிக்க நேரும்போது ‘மயக்கமும் கலக்கமும்’ தெளிந்து அவன் ஏற்றுக்கொள்ளும் முடிவு! மிளிரும் அவர் நடிப்பின் வடிவு!
‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் தன் ரொமான்டிக் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்தார் பாருங்கள், நச்! What a portrayal of a restrained character!
‘Namak Haraam’ தமிழில் வந்த போது (‘உனக்காக நான்') ராஜேஷ் கன்னா ரோலில் இவர். அமைதியாக அமரிக்கையாக.. நட்பின் உற்சாகத்தில் துள்ளும்போதும் சரி, கடமையின் உத்வேகத்தில் நண்பனிடம் பொங்கும் போதும் சரி, நடிப்பு சீராக சம அளவில் இருக்கும்.
ஸாஃப்ட் ரொமான்டிக் ஹீரோ ரோல் ஜெமினிக்கு என்றால் டைரக்டருக்கு பாதி வேலை தீர்ந்தது.
பாத்திரத்தின் ஆழத்தில் நடிகர் காணாமல் போய் விடாமலும் நடிப்பின் ஆழத்தில் பாத்திரம் காணாமல் போய் விடாமலும் பார்த்துக் கொள்வதில் 'மிருதுவான கெட்டி'க்காரர்.
><><

அழகாக உடுத்துவதில் அரசர்...


Come September -இல் கலக்கிய Rock Hudson!
இன்று பிறந்த நாள்.
ஹாலிவுட்டின் கடைந்தெடுத்த ரொமண்டிக் ஹீரோ. 1957 இல் டாப் ஒன் ஆக இருந்தவர். தொடர்ந்து 1964 வரை டாப் டென்னில் இருந்து ரிகார்ட் ஏற்படுத்தினார்..
Elizabeth Tailor இலிருந்து Gina Lolla Brigida வரை, Doris Day இலிருந்து Claudia Cordinale வரை அழகு நடிகைகளுடன் காதல் காட்சிகளை திரையில் வரைந்தவர்.
TV யில் இவரது McMillan and Wife சீரீஸ் ரொம்பப் பாப்புலர். நடித்த ‘Ice Station Zebra’ பிரபல Alistair McLean நாவல்.
பென்ஹர் படத்தின் ஹீரோ வாய்ப்பை A Farewell To Arms படத்துக்காக மறுத்த இவர் அழகாக உடுத்துவதில் அரசர்.

Sunday, November 16, 2025

பட்டணம் தான்...


“பட்டணம் தான் போகலாமடி பொம்பளே..
பணம் காசு பார்க்கப் போறேண்டி,
நல்ல கட்டாணி முத்தே, நீயும் வாடி பெண்டாட்டி தாயே…”
என்று கணவன் அழைக்க,
“டவுனு பக்கம் போகாதீங்க மாமா.. டவுணாகிப் போயிடுவீங்க,” என்று அவள் தடுக்க அந்தத் தெருக் கூத்து பாடல் 'எங்கள் வீட்டு மகாலஷ்மி’ (1957) படத்தில் வரும்.
பட்டணத்தில் என்னென்ன சொகுசான சௌகரியங்கள் (“வேர்த்துப் புழுங்கினா பீச்சுக்குப் போவேன், மீதப் பணத்திலே மீனு வாங்குவேன்.. ஆத்தாடி உன் கையில கொடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்..”) என்று அவன் அடுக்க, அங்கே என்னென்ன இக்கட்டும் இடரும் என்று அவள் சொடுக்க (“காலேஜு படிப்பு காப்பி ஆத்துதாம்.. பி.ஏ படிப்பு பெஞ்சு துடைக்குதாம்.. மேலே போறது நூத்தில ஒண்ணாம், மிச்சமுள்ளது லாட்டரி அடிக்குதாம்..”), பாட்டிலேயே அவன் மனம் மாறும் (“நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி.. நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி”) மனம் மறவா பாடல்.
சீர்காழியும் பி சுசீலாவும் வெளுத்து வாங்கியிருப்பார்கள், ராகத்தின் அட்டகாசமான இழுப்புகளை அஸால்டாக கையாண்டபடி…
மாஸ்டர் வேணுவின் இசைக்கு லாஸ்டிங் வரிகளை கொடுத்திருப்பார் உடுமலை நாராயண கவி. ஈ.வி.சரோஜாவின் ஆட்டம் ஆஸம்!

சிறகு இல்லாமல்...

‘என் தாத்தா ஜெரோனிமோ கதைகள் சொல்வார்... மரணம் தன்னை நெருங்குவதாக உணர்ந்ததும் அவர் முற்றத்தில் உள்ள மரங்களையெல்லாம் ஒவ்வொன்றாக கட்டித்தழுவி குட்பை சொன்னார். ஏனென்றால் அவற்றையெல்லாம் தான் இனிமேல் பார்க்க முடியாது என்று அவருக்குத் தெரிந்ததால்! வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டுமா? எதுவுமே எப்போதும் நீடிப்பதில்லை என்பதையும் எதையும் சும்மா வந்ததாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நமக்கு கிடைத்திருக்கிற எல்லாவற்றுக்கும் நன்றியுடனும் சந்தோஷத்துடனும் நாம் இருக்க முடிகிறது.’
இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? Jose Saramago.
நோபல் பரிசு பெற்ற முதல் போர்ச்சுக்கல் எழுத்தாளர். 25 மொழிகளில் வெளியாகியுள்ள நாவல், கவிதை, சிறுகதைகள்… இன்று பிறந்த நாள்!
இன்னும் சொன்ன இனியவை:
‘மற்றவர்களுடன் வாழ்வது கஷ்டம் இல்லை; மற்றவர்களைப் புரிந்து கொள்வது தான்...’
‘மனிதர்கள்
சிறகு இல்லாமல் பிறந்த தேவதைகள். சிறகில்லாமல் பிறந்து அவற்றை வளரச் செய்வதுபோல் இனியது வேறில்லை.’
‘வெட்டப்படும் போது மரம் அழுகிறது; தாக்கப்படும் போதும் நாய் ஓலமிடுகிறது; ஆனால் மனிதனோ புண்படுத்தப்படும்போது பக்குவமடைகிறான்.’
‘இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் பேசப்படுவதில்லை; தொண்டையில் அடைபட்டுக் கொள்கின்றன; கண்களில் தான் அவற்றைப் படிக்க முடியும்.’
‘வார்த்தைகள் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது எண்ணங்களை மறைப்பதற்காக அல்ல.’
‘சரியாகச் சொல்வதானால் நாம் முடிவுகளை எடுப்பதில்லை; முடிவுகள் நம்மை எடுக்கின்றன.’
‘ஒரு கையால் கொடுப்பதை மற்றொரு கையால் எடுத்துக் கொள்கிறது; அதுதான் வாழ்க்கை.’
‘உங்கள் புத்தகங்களை நீங்கள் தான் எழுத வேண்டும்; வேறு யாரும் அவற்றை உங்களுக்காக எழுத முடியாது; உங்கள் வாழ்க்கையை வேறு யாரும் வாழ்ந்ததில்லை.’
‘உங்களை விட்டு நீங்கள் வெளியில் வராத வரை நீங்கள் யார் என்று உங்களால் கண்டுகொள்ள முடியாது. உங்களுக்கு தெரியாதா என்ன?’
‘எந்த மனிதரும் தான் வாழ்க்கையில் அடைய நினைக்கிற அத்தனையையும் அடைய முடியாது. கனவுகளில் மட்டுமே அது சாத்தியம். ஆகவே எல்லாருக்கும் குட் நைட்!’