Monday, June 3, 2013

உழைப்பின் சுவை...


அன்புடன் ஒரு நிமிடம் - 35

உழைப்பின் சுவை...

வீட்டுக்குள் நுழைந்ததுமே கேட்டார் வாசு. அந்த பெய்ண்டர் பையன் வந்தாரா? வேலையை ஆரம்பிச்சுட்டாரா?”

ஊஹூம். ஆளையே காணோம்! என்றார்கள் பரசுவும் அரசுவும் கோரஸாக.

ஐயையோ நாளைக்கு பங்ஷனாச்சே? என்ன இப்படி பண்ணிட்டான்? செல் நம்பர் இருக்கா?”

பத்து முறைக்கு மேல் போட்டாச்சு. ஸ்விட்ச் ஆஃப் தான் சொல்லுது.

திடீர்னு யாரை எங்கே போய்... இப்ப என்ன பண்றது?”

பையன்கள் இருவரும் விழிக்க, அவரே சொன்னார்: இப்படி செய்தா என்ன?” உள்ளே போய் பெய்ண்ட் டின்களையும் பிரஷ்களையும் எடுத்து வந்தார். நாமே பிரஷைக் கையில் எடுத்து விட வேண்டியதுதான். வேறே வழியில்லை. இன்னிக்கு முடிச்சாகணும் வேலையை.

நாமேவா?”

நாமேதான். பிரசினையும் சரியாயிடும். தவிர அவங்களுக்கு தர்ற அமவுண்ட் அறுநூறு நமக்கே நமக்கு இல்லையா?”

அதுவும் சரிதான்!என்றான் அரசு முகம் மலர. அதற்குள் பரசுவின் கையில் பிரஷ் ஏறியிருந்தது. நீங்க மற்ற வேலைகளைப் பாருங்கப்பா, நாங்களே பார்த்துக்கறோம்!

அடுத்த நாலு மணி நேரம் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கினார்கள்.  ஃபைனல் டச் கொடுத்துவிட்டு பார்த்தபோது அப்படி ஒன்றும் கோரமாக இல்லை. கொஞ்சம் அழகாய்க்கூட வந்திருந்தது என்று சான்றிதழ் தந்தாள் அம்மா.

எடுங்க! என்றான் பரசு.

என்னது?”

அந்த அறுநூறைத்தான்!

ஷூர்! கொடுத்தார். என்ன பண்ணப் போறே?”

பிரியாணி வாங்கிடலாம். நாலு பிளேட் சரியா அறுநூறு.

சரி,” என்றார் நானே வாங்கிட்டு வந்திடறேன். கிளம்பியவரை நினைவூட்டினான் பரசு. அப்பா மறந்துடாதீங்க. அந்த மேற்கு பஜார் கடையில் வாங்குங்க.

அப்படியா?”

ஆமா. அங்கே தானே டேஸ்டா இருக்கும்? எத்தனை வாட்டி சொல்றது? நீங்க பாட்டுக்கு போனதடவை செய்த மாதிரி மெயின் ரோட் கடையில வாங்கிடாதீங்க! அங்கே நல்லாவே இருக்காது. பாதிக்குப் பாதி கூட சாப்பிட முடியலே.

ஓகே. யுவர் மணி! யுவர் சாய்ஸ்! கிளம்பினார்.

கொஞ்ச நேரத்தில் பைக் வந்து வாசலில் நிற்க, ஓடி வந்தவர்களிடம் கையிலிருந்த பார்சலை நீட்டினார். பையிலிருந்த பெயரைப் பார்த்தபின்தான் திருப்தி இருவருக்கும்! எங்கே, மறந்து போய் அங்கே நுழைஞ்சுடுவீங்களோன்னு பயந்தேன்!

பிளேட்டுகளில் அம்மா பரிமாற

அடடா, என்ன ஒரு டேஸ்ட்! மற்றவங்களும் போடறாங்களே பிரியாணின்னு!

அதிலும் இன்னிக்கு வழக்கத்தைவிட வித்தியாசமா பிரமாதமா...

புதுசா வெரைட்டியா பண்ணியிருக்காங்க!

ஒரு பிடி பிடித்தபின் அவர் சொன்னார், நீங்க சாப்பிட்டது மெயின் ரோட் கடை பிரியாணி தான்!

நிஜமாவா?”

யெஸ்.! போன தடவை நீங்க சலித்துக்கொண்ட அதே கடையிலேர்ந்து தான்! கவர் மட்டும் தான் வேறு!

நம்பவே முடியலியே? நல்ல டேஸ்டா இருந்ததே?”

ஏன் இருக்காது? கொடுத்த காசில் அன்றைக்கும் இன்றைக்கும் வித்தியாசம் இருந்ததே? கஷ்டப்பட்டு ஒரு வேலை செய்து அதிலே வந்த காசாச்சே! அந்த டேஸ்ட்டே தனிதான் இல்லையா?”

ஆமாமா. ரெண்டுமே டேஸ்டி தான். பசியின் தன்மையிலதான் இருக்கு ருசியின் இனிமை.புன்னகையுடன் வந்தது பதில்.

('அமுதம்' பெப்ருவரி 2013 இதழில் வெளியானது.)
<<<>>>

(படம்- நன்றி: கூகிள்)

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// கஷ்டப்பட்டு ஒரு வேலை செய்து அதிலே வந்த காசாச்சே! அந்த டேஸ்ட்டே தனிதான் இல்லையா...? ///

அனுபவித்தவர்களுக்கு மட்டும் சுவை புரியும்... வாழ்த்துக்கள்...

நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

// கஷ்டப்பட்டு ஒரு வேலை செய்து அதிலே வந்த காசாச்சே! அந்த டேஸ்ட்டே தனிதான் இல்லையா?”//

அருமையான படைப்பு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

[ நான் பள்ளியில் படித்த காலத்தில் ஆங்கிலத் துணைப்பாடத்தில் TOM WHITE WASHES THE FENCE என்று ஒரு கதை உண்டு. ஏனோ எனக்கு அந்த ஞாபகம் வந்தது. ;) ]

கரந்தை ஜெயக்குமார் said...

உழைப்பின் சுவையே உன்னதம்தான்

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
உழைப்பில் கிடைக்கும் எதற்கும்
கூடுதல் மதிப்பே
சுருக்கமாயினும் சொல்லியவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

கவியாழி said...

பசியின் தன்மையிலதான் இருக்கு ருசியின் இனிமை.” //உண்மைதான்

உஷா அன்பரசு said...

உழைத்து சாப்பிடும் போது பசியும் தெரியும், ருசியும் தெரியும். நல்ல படைப்பு.
த.ம-5

ராமலக்ஷ்மி said...

உண்மைதான்:)! நல்ல கதை.

ராஜி said...

உழைப்பின் அருமை மற்றோர் வடிவத்தில். உங்க உழைப்புக்கு வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

கஷ்டப்பட்டு ஒரு வேலை செய்து அதிலே வந்த காசாச்சே! அந்த டேஸ்ட்டே தனிதான் இல்லையா?”

“ஆமாமா. ரெண்டுமே டேஸ்டி தான். பசியின் தன்மையிலதான் இருக்கு ருசியின் இனிமை.” புன்னகையுடன் வந்தது பதில்.//

டேஸ்ட் !

வெங்கட் நாகராஜ் said...

பிரியாணி போலவே உங்கள் பதிவும் டேஸ்டி.....

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!