அன்புடன் ஒரு நிமிடம் - 38
முதல்
நாள்:
எரிச்சல் கொட்டும் முகத்துடன் உள்ளே
நுழைந்தான் கிஷோர். “சே!
மனுஷன் போவானா இந்த மாதவனோட?”
“என்னடா பண்ணினான் உன்
மச்சினன்?”
“கம்பெனி
விஷயமா கோவை போனேன்ல?
அவன் ரூமிலதான் தங்கினேன். சும்மா இருந்தவனை
ஊட்டி போலாமான்னான். திடீர்னு எப்படிடான்னா, எல்லாம் நான் பார்த்துக்கறேன்
அப்படீன்னான். பேசாம படுத்து தூங்கு. காலையில கிளம்பறோம்னான். காலையில ஆளைக்
காணோம். ட்ரெயின் டைமுக்கு அரை மணி இருக்கும். பரக்கப் பரக்க வந்தவன் டிபன்கூட
சாப்பிடாம ஸ்டேஷனுக்கு ஓட வெச்சு... ரயில் ஏதோ பிரசினையில நின்னு நடுவழியில மூணு மணி நேரம் ஒரு டீ கூட இல்லாம
ஊட்டியில போனா ரூம் ஏதும் சொல்லி வெக்கலே இவன். லாட்ஜ் லாட்ஜா அலைஞ்சு நூறு பெற
முடியாத ரூமுக்கு ஆயிரம் அழுது... வரும்போ பஸ் டிக்கட்டும் கிடைக்காம நைட் தங்க
வேண்டி வந்து மறுநாள் எனக்கு வேலை தடைபட்டு... சரியான கிறுக்கன்! பத்து வயசுப்
பையனுக்கு இருக்கிற அறிவு இல்லே இவனுக்கு!”
''ஆமா,
சுத்த மடையன்தான்! மண்டை நிறைய களிமண்தான் போல!”
தொடர்ந்து திட்டிக்கொண்டே
இருந்தான். அவரும் ஆமோதித்துக் கொண்டே இருந்தார்.
“இனி
இந்தப் பயல் எங்கேயாச்சும் பிளான் கிளான் போட்டான்னா பத்து கிலோமீட்டர் ஓடிப்
போயிடணும்!”
“நூறு!” என்றார் அவர்.
மற்றொரு நாள்.
வரும்போதே திட்டிக் கொண்டு வந்தான். அதே
மாதவனை! “சே
இவன்லாம் ஒரு மச்சினன்! கேவலமாயிருக்கு!”
“என்னடா
இப்ப?”
“இந்தப்
பயலுக்குப் போய் உதவி பண்னினேன் பாருங்க! வீடு கட்ட சரியான ஆள் இல்லேன்னு
புலம்பினான். எனக்கு தெரிஞ்ச காண்ட்ராக்டரை சொன்னேன். டர்ம்ஸ் பேசிக்கோ, அட்வான்ஸா ரொம்ப
விட்டுவைக்காதேன்னு அட்வைஸ் பண்ணித்தான் விட்டேன். இப்ப அவன் சரியா கட்டலியாம்.
இழுத்தடிக்கிறானாம். பணத்தை வேறே வாங்கிட்டானாம். என்னை வறுத்தெடுக்கிறான். மனுஷனா
இவன்? ”
“அடடே
அப்படியா சொல்றான்?”
“ரொம்ப
மட்டமா பேசிட்டான். கூறு கெட்ட பயல். போடா,
இனி என் மூஞ்சியில முழிக்காதேன்னு சொல்லிடப் போறேன்!” கோபத்தின் உச்சியில்
இருந்தான்.
“விடுடா.
ஏதோ தெரியாம சொல்லிட்டான்!”
“என்ன
அவனுக்கு வக்காலத்து வாங்கறீங்க?
அவன் சகவாசமே வேணாம்! என்ன நினைச்சிருக்கான் மனசில?”
“சரி
விடு. பணத்தை கொடுத்துட்டு பதைபதைப்பில இருக்கிறப்ப பதமாவா பேசுவாங்க?
உன்கிட்டேதானே ஆத்திரத்தைக்
கொட்டமுடியும்?
நான் அவனைக் கேட்கிறேன் நீ ஏதும் வார்த்தைகளை விடாதே.”
ரொம்ப முயன்றார் அவனை சமாதானப் படுத்த.
சரியாக ரெண்டு மணி நேரம் ஆனது அவன் தான் வந்த மன நிலையை விட்டு வெளிவர.
அப்புறம் சாவகாசமாக உட்கார்ந்து
கேட்டான்: “அதிருக்கட்டும்.
அன்னிக்கு டூர் பிரசினையைச் சொன்னப்ப அவனை அந்த கிழி கிழிச்சீங்க. இன்னிக்கு
அதைவிட பெரிய விஷயம்...ரொம்பத் தப்பா பேசியிருக்கான். ஆனா இப்ப அவனை சப்போர்ட்
பண்ணறீங்க?
ஏன் இந்த முரண்?
ஏத்துக்க முடியலே!”
அவன் தோளைத் தட்டிக் கொடுத்தார்.
“அன்னிக்கு
அவன் மேல உனக்கு வந்தது ஒரு எரிச்சல். பிரசினை பெரிசாயிடாது. அந்த எரிச்சலுக்கு
வேண்டியது ஒரு வடிகால். அதைத்தான் கொடுத்தேன். கொட்ட விட்டேன். அது அப்படியே
கரைஞ்சிட்டது. ஆனா இப்ப உனக்கு அவன் மேல் வந்திருப்பது வெறுப்பு. இதை வளர விட்டா
ஆபத்து. ரெண்டு பெருக்குமே நல்லதில்லே. அதனால்தான் தடுத்தேன். அவன் சைடிலும்
நியாயம் இருக்கலாம்னு சொன்னேன். என்ன இருந்தாலும் உங்க உறவு நிலையானது. சம்பவங்கள், நடத்தைகள் காயப்
படுத்தலாம். ஆனா உறவுக்குப் பங்கம் வரக் கூடாது. அந்தப் பொறுப்போடதான் நான்
நடந்துக்கிட்டேன். இதில என்ன முரண்?”
“இல்லைதான்
மாமா!”
('அமுதம்' மார்ச் 2013 இதழில் வெளியானது)
<<>>
(படம்- நன்றி: கூகிள் )
13 comments:
அருமை! உறவு நிலைக்க தேவையான அறிவுரை!
சம்பவங்கள், நடத்தைகள் காயப் படுத்தலாம். ஆனா உறவுக்குப் பங்கம் வரக் கூடாது.//எல்லா உறவுகளும் மேம்பட வேண்டும்
உறவு நிலையானது. சம்பவங்கள், நடத்தைகள் காயப் படுத்தலாம். ஆனா உறவுக்குப் பங்கம் வரக் கூடாது. அந்தப் பொறுப்போடதான் நான் நடந்துக்கிட்டேன்.
பொறுப்புள்ள மாமா..பாராட்டுக்கள்.!
வித்தியாசப்படுத்தியது அருமை...!
//என்ன இருந்தாலும் உங்க உறவு நிலையானது. சம்பவங்கள், நடத்தைகள் காயப் படுத்தலாம். ஆனா உறவுக்குப் பங்கம் வரக் கூடாது. அந்தப் பொறுப்போடதான் நான் நடந்துக்கிட்டேன்.//
அருமையான நீதிக்கதைக்கு பாராட்டுக்கள்.
இடம் பொருள் காலம் கருதி உறவுகளில் எழும் பிணக்கங்களை எடைப் போட்டு கொட்டுவதைக் கொட்டி தட்டுவதை தட்டி நீரில் ஓடும் மீன் போல வளைந்தால் மட்டுமே உறவுகள் சுமூகமாகும்.
நிச்சயம் முரண் இல்லைதான்
நிகழ்வுகளை ஒப்பிட்டவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
//சம்பவங்கள், நடத்தைகள் காயப் படுத்தலாம். ஆனா உறவுக்குப் பங்கம் வரக் கூடாது.//
உண்மை. நல்ல விஷயம் சொன்ன பகிர்வுக்கு நன்றி.
உறவின் மேன்மையை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்!
உறவு தேவையான ஒன்று..
அருமையான அறிவுரை... தெரிந்து கொண்டோம்.
அன்பு ஜனா..
உண்மைதான்.
உறவுகளை அனுசரித்துதான் போகவேண்டும். வாழப்போவது ஒரு வாழ்க்கைதானே? அதை எப்படி முரணாக வைத்துக்கொண்டு வாழமுடியும்? அருமை. எதார்த்தம்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!