Thursday, June 20, 2013

காட்டாத பக்கங்கள்...
அன்புடன் ஒரு நிமிடம்  37 

சோபாவில் அமர்ந்திருந்தவருக்கு ஐம்பது இருக்கும். டிவியில் ஓ(ஆ)டிக்கொண்டிருந்த கிரிக்கெட்டிலோ டீபாயில் கிடந்த விகடனிலோ அவர் கவனம் செலுத்தவில்லை. குளிக்கும் நேரம் முடிந்து சாத்வீகன் வரும் வரை அசையாமல் காத்திருந்த விதமே சொல்லிற்று மனதில் அடைத்து வைத்திருந்த கவலையின் பரிமாணத்தை.

எப்படி இவரை தாத்தா சரிப்படுத்தி அனுப்பப் போகிறார் என்று யோசிக்க ஆரம்பித்தான் அபிஜித்.

எத்தனையோ பிரசினைகளை சந்திச்சிருக்கேன் என் பிஸினஸில். அலசி காரணத்தை சரியாக் கண்டு பிடிச்சிருக்கேன். சரி பண்ணியிருக்கேன். ஆனா இந்த விஷயத்தில என்னால... ஊகூம்! என்ன காரணம்,எங்கே தவறுன்னே தெரியலே. என்று ஆரம்பித்தார்.

சொல்லுங்க.

அசோக் என்னை இப்படி கவிழ்த்துருவான்னு நினைக்கவே இல்லை. என்ன பார்க்கறீங்க? ஆமா. என் மகனைத்தான் சொல்றேன். ரொம்ப கவனம் செலுத்தி அவனை படிக்க வெச்சேன். நான் பண்ற பிஸினஸ் பத்தியெல்லாம் பேசுவேன் அவனிடம்.

, அதிலுள்ள சௌகரியங்களைப் பத்தியெல்லாம் சொல்லுவீங்க இல்லையா?”

சொல்லுவேனா அதை? நான் படற கஷ்டங்களையெல்லாம், சந்திக்கிற பிரசினைகளை எடுக்க வேண்டியிருக்கிற ரிஸ்க்குகளை எல்லாம் நல்லாவே எடுத்து சொல்வேன். எல்லாம் கேட்டுக்குவான். படிச்சு வேலைக்குப் போகிறதில் உள்ள சௌகரியத்தை சொல்லுவேன். அது எத்தனை ஈஸி அண்ட் பெட்டர்னு... படி, நல்ல படின்னு எப்பவும் உற்சாகப் படுத்துவேன். ஆனா அவன் சரியாப் படிக்கலே. அவன் படிச்ச லெவலுக்கு நல்ல வேலை கிடைக்கவும் வழியில்லே.

அப்ப பேசாம வியாபாரத்தில் இறக்கிவிட வேண்டியதுதானே?”

அவனுக்கு அதிலேயும் இண்ட்ரஸ்ட் இல்லே. பிடிக்கலேப்பா என்கிறான். என்னால முடியாதுங்கறான். என்ன பண்றதுன்னே...

ஓஹோ?”

எஸ். படிப்பு வரலேன்னா இருக்கவே இருக்கு பிசினஸ்னு ஒரு மிதப்பு வந்திடக் கூடாதேன்னுதான் அதிலே நேரக்கூடிய எல்லா கஷ்டங்களையும் எடுத்துச் சொன்னேன். ஃபாக்டரியை அண்டவே விட்டதில்லை. படிச்சு வேலைக்கு போவதன் சௌகரியங்களை அழுத்திச் சொல்லுவேன்...

ஸ்டாப், ஸ்டாப்,” இவர் கையை உயர்த்தினார், நீங்க செய்த ரெண்டுமே தப்பு. வியாபாரம் செய்வதில் உள்ள வசதி, கஷ்டம் ரெண்டையும் சொல்லி அதேபோல வேலைக்குப் போவதிலும் சிரமமும் நன்மைகளும் இருப்பதை எடுத்துக் காட்டியிருக்கணும். அப்படி அலசி சொல்லியிருந்தால் எந்தத் துறையிலுமே ரெண்டு பக்கமும் உண்டுன்னு புரிஞ்சிட்டிருப்பான். தானே ரெண்டிலும் உள்ள பிளஸ்ஸும் மைனசும் அலசிப் பார்த்து ஏதாவது ஒன்றில் தன்னை ஈடுபாடுடன் செலுத்தியிருப்பான்... பிஸினஸில் வரும் கஷ்டங்களை மட்டும் எடுத்து சொன்னீங்க. உங்க போதனையிலிருந்து அவன் கற்றுக் கொண்டது வியாபாரத்திலுள்ள கஷ்டங்களை அல்ல, எந்த விஷயத்திலும் நெகட்டிவ்களை தேடிக் கண்டு கொள்வது எப்படி என்கிறதைத்தான்!

இப்பதான் எனக்குப் புரியுதுங்க அது! என்ன பண்றது இனிமேல்?”

ஒண்ணுமே பண்ணாதீங்க! ஹாய்யா இருங்க. அதான் வழி!

என்னது?” அபிஜித்துக்கும் ஆச்சரியம்.

எஸ். உங்களைப் பொறுத்தவரை பிசினசைத் தேர்ந்தெடுத்தீங்க. அதில் வர்றதை ஏற்றுக் கொண்டீங்க. அதை அவனுக்குக் காட்டுங்க. கஷ்டமோ நஷ்டமோ ஒண்ணைத் தேர்ந்தெடுத்தாக வேண்டியதுதான்னு உங்க சொல் மூலம் அல்ல, செயல் மூலமாக தெரிவியுங்க. அவன் கொஞ்சம் யோசிக்கட்டும். நானும் பேசறேன். நம்புவோம். சிந்திப்பான். நல்லது நடக்கும்.

கிளம்புகையில் அவரிடம் வேர்வை வடிந்திருந்தது. அமைதி படிந்திருந்தது.
<<<>>>
('அமுதம்' மார்ச் 2013 இதழில் வெளியானது)


8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கஷ்டமோ நஷ்டமோ ஒண்ணைத் தேர்ந்தெடுத்தாக வேண்டியதுதான்னு உங்க சொல் மூலம் அல்ல, செயல் மூலமாக தெரிவியுங்க. அவன் கொஞ்சம் யோசிக்கட்டும். நானும் பேசறேன். நம்புவோம். சிந்திப்பான். நல்லது நடக்கும்.”//

நல்லதே நடக்கட்டும். அமுதத்தில் வெளிவந்துள்ள அமுதமான படைப்புக்குப் பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆறுதல் கூறிய தன்னம்பிக்கை வரிகள் அருமை...

வாழ்த்துக்கள்...

ரிஷபன் said...

உங்க சொல் மூலம் அல்ல, செயல் மூலமாக தெரிவியுங்க. அவன் கொஞ்சம் யோசிக்கட்டும்.

எதுவுமே உள்ளிருந்து வரவேண்டும்..

பால கணேஷ் said...

உரையாடலாக நல்ல கருத்துக்களைச் சொல்வது ரசிக்க வைத்த உத்தி. மிக ரசித்தேன்!

விமலன் said...

செயல் சிறந்த சொல்/

இராஜராஜேஸ்வரி said...

அவன் கொஞ்சம் யோசிக்கட்டும்.

அமுதமான படைப்புக்குப் பாராட்டுக்கள்..!

கோமதி அரசு said...

கஷ்டமோ நஷ்டமோ ஒண்ணைத் தேர்ந்தெடுத்தாக வேண்டியதுதான்னு உங்க சொல் மூலம் அல்ல, செயல் மூலமாக தெரிவியுங்க. அவன் கொஞ்சம் யோசிக்கட்டும். நானும் பேசறேன். நம்புவோம். சிந்திப்பான். நல்லது நடக்கும்.”//

நல்லது நிச்சயம் நடக்கும்.
நல்ல கதை.
வாழ்த்துக்கள்.

Mahi said...

நல்ல அறிவுரை. பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேலானது என்பதை அழகா சொல்லிட்டீங்க! :)

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!