Sunday, May 23, 2010

அப்பா ஒரு நாளும்...



('நம் உரத்த சிந்தனை' மாத இதழ் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை)


''என்னம்மா திடீர்னு குண்டைத் தூக்கிப் போடறே?'' ஆத்திரமாக அலைபேசியை முறைத்தான் விகாஸ்.

''இல்லேடா, ரொம்ப வேண்டியவராச்சேன்னு... ரெங்கசாமின்னு அவர் கூட படிச்சவராம். பக்கத்து டவுனில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை. அவர் வாங்கின லோனுக்கு அப்பா ஜாமீன் கையெழுத்துப் போட்டிருக்காரு. செக் எழுதிக் கொடுத்திட்டாங்க. அந்த ஆள் பணத்தைக் கட்டலே. ஊரை விட்டே ஓடிட்டாரு. இப்ப ரெண்டு லட்சம் எடுத்து வைக்கணும். இல்லேன்னா அப்பாவை அரெஸ்ட் பண்ணிருவாங்க.''

விகாஸ் சுற்றிலும் பாத்தான். ஐ.டி. கம்பெனியின் ஏஸி ஹால். என்னதான் மெல்லப் பேசினாலும் தெளிவாய்க் கேட்கும் மற்றவர்களுக்கு. தன் கியூபிகளை விட்டு வெளியே வந்தான்.

''என்னம்மா இது, என்ன நினைச்சிருக்கீங்க? ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க?'' இரைந்தான்.

''இல்லேப்பா, வேணுமின்னா செய்தாரு? அவரும் எதிர்பார்க்கலே இப்படி ஆகுமின்னு. நீ சப்போர்ட் பண்ணுவேங்கிற நம்பிக்கையில இருக்காரு.''

கோபம் தலைக்கேறிற்று. ''இதான்! இதான் நீங்க எனக்கு செய்யக்கூடாதது! அதை செஞ்சிட்டாரு அப்பா! நான் படிச்சது, வேலை பார்க்கிறது, முன்னேறினது எல்லாத்தையும் இது அர்த்தமில்லாம செஞ்சிட்டுதில்ல?... சரி சரி, பிரசினையை ஏற்படுத்தியாச்சு. இனி நான் இதை பாடித்தானே ஆகணும்? என் சேமிப்பு எல்லாத்தையும் பொறுக்கிட்டு வர்றேன்''

''சரிப்பா.''

''ம், உங்களால எனக்கு என்ன பிரயோசனம்? இத பாரும்மா, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கறது எல்லாம் பெரிசில்லே. அப்புறம் அதுக்கு உலை வெக்கிறது கொஞ்சமும் சரியில்லே. அவர்ட்ட சொல்லு. இதான் கடைசி.'' படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டான்.

று நாள். மனைவியின் திட்டுக்களை காதில் போட்டுக் கொண்டு, அவளிடம் கெஞ்சி செக்கில் ஜாயின்ட் கையெழுத்தை வாங்கிக் கொண்டு பாங்கில் பணம் எடுக்க வந்தபோது..

அலை பேசி துடித்தது. எடுத்தான். அப்பா.

''அந்த பிரசினையை நானே சமாளிச்சிக்கிறேண்டா. உன் உதவி தேவையில்லை.''

''அப்பா வந்து நான் என்ன சொன்னேன்னா...''

''அதான் எல்லாம் சொல்லிட்டியே. அம்மா சொன்னா.''

வைத்துவிட்டார்.

தொடர்ந்த ஞாயிற்றுக் கிழமை கிளம்பி ஊருக்கு வந்தான். நடந்தது பற்றி யாரும் பேசவில்லை. சாப்பாடு, குளியல் என்று வழக்கம் போல் நடந்தது. அம்மா மார்க்கெட்டுக்குப் போய் அவனுக்குப் பிடித்த வஞ்சிர மீன் வாங்கி வந்து பொரித்தாள்...

நேராக சுந்தரம் மாமா வீட்டுக்கு வந்தான். அப்பாவின் நெருங்கிய நண்பர். நடந்ததை எல்லாம் சொன்னான். பொறுமையாகக் கேட்டார்.

''நீ அவசரப்பட்டுட்டே!'' என்றார்.

''புரியலியே மாமா.''

''கொஞ்ச நாள் முந்தி நீ ஏதோ ஒய்வு நேரத்தில் சாப்ட்வேர் பிராஜெக்ட்ஸ் எடுத்து செய்யப்போறேன், அதுக்கு சில லட்சம் பணம் வேணும், நம்ம பூர்விக வீட்டை வித்திடலாமான்னு கேட்டியா?''

''ஆமா.'' ஞாபகம் வந்தது. அப்பாவும் சரிப்பா, பண்ணிடுவோம்னு பச்சைக் கொடி காட்டியிருந்தார்.

''என்கிட்டே வந்து அதை சொன்னான். விக்கிறதுக்கு ஆள் பார்க்க சொன்னான். அப்ப நான் கேட்டேன், ஏண்டா, உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறதே அந்த வீடு ஒண்ணு தானே, வேறே எதுவுமே நீங்க வெச்சுக்கலியே அப்படீன்னு. அதுக்கு அவன் சொன்னான், இல்லேப்பா, நாளைக்கு எனக்கோ என் காலத்துக்குப் பிறகு அவன் அம்மாவுக்கோ ஏதும் ஆச்சுன்னா விகாஸ் பார்த்துப்பான்னு நம்பிக்கை இருக்குன்னான். எதுக்கும் உன் நம்பிக்கை சரிதானான்னு ஒண்ணுக்கு நாலு தரம் யோசிச்சுப் பார்த்துக்கன்னு சொன்னேன்.''

''சரி மாமா இப்ப அதுக்கும்...''

''போன மாசம் அதை விலை பேசி அட்வான்சும் வாங்கிட்டான். ஸோ அவனுக்கிருந்த ஒரே சொத்தையும் உனக்குக் கொடுத்திட்டான். இது போன மாச நிலைமை.''

''அப்படியா?'' குழம்பினான்.

''இப்ப அவன் ஒரு பிரசினைன்னு உனக்கு போன் பண்ணினான். நீ அவசரப்பட்டு இப்படி பேசிட்டியே?''

''பின்னே என்ன மாமா, படிக்க வெச்சிட்டு, முன்னேறி வந்தப்புறம் இப்படி நம்ம நல்ல நிலைக்கு உலை வெச்சா...''

''இத பாரு, உன்னை படிக்க வெச்சது, ஆளாக்கினது எல்லாம் அவன் சக்திக்கு ரொம்ப மேலே! கல்யாணமான புதுசில் அவனுக்கு அட்டெண்டர் வேலைதான். ஆனா உன்னை பிரைவேட் ஸ்கூலில் சேர்த்தது, தினம் சைக்கிளில் கொண்டு போய் விட்டது, சின்னக் காய்ச்சல்னாலும் ஸ்பெஷலிஸ்டிடம் காட்டினது இப்படி எத்தனையோ விஷயங்கள்...! அதெல்லாம் உன்கிட்ட எதுவும் எதிர்பார்த்து செய்ததுன்னா நினைக்கிறே? நீ நாளைக்கு கஷ்டப்படக்கூடாது, உன் மனைவி குழந்தைகளோட சந்தோஷமா வாழணும்னு தானே? ரிடையரான பிறகும் உன்னோடு வந்து உட்காராமல் இங்கேயே அவங்க பாட்டைப் பார்த்துட்டு இருக்கிறதை நினைச்சுப்பாரு. ஒரு நாளும் அவன் உனக்கொரு பிரசினையை மனமறிஞ்சு செய்ய மாட்டான். ''

''அப்படீன்னா இப்ப பண்ணினது எனக்குப் பிரசினை இல்லையா?''

''தன்னை மீறி ஒரு கஷ்டம், பிரசினை எல்லாம் யாருக்கும் எப்ப வேணாலும் வரலாம். அதான் அவன் உனக்கு சொல்ல விரும்பின மெசேஜ்ன்னு நினைக்கிறேன்.''

''என்ன மாமா சொல்றீங்க?''

''அவன் உனக்கு செய்ய வேண்டியதை செய்துட்டான் . சொல்ல வேண்டியதையும் சொல்லிட்டான். இப்ப அவன் மனசில நம்பிக்கையை விதைக்கிறதும் ஒதுங்கிக்கிறதும் நீ எடுக்க வேண்டிய முடிவு. பார்த்து நடந்துக்க.''

இவனுக்கு லேசாய்ப் புரிந்த மாதிரி இருந்தது. அவர் தொடர்ந்தார். ''புரிஞ்சிருக்கும் உனக்கு. உங்கப்பா எனக்குத் தெரியாம எந்தக் காரியமும் பண்னினதிலலே. யாருக்கோ அவன் ஜாமீன் கையெழுத்து போட்டிருக்கான்னு சொன்னியே யார் அது?''

''ரெங்கசாமின்னு அவரோட நண்பர்...''

சிரித்தார். ''...அவனுக்கு ரெங்கசாமின்னு எந்த நண்பரும் கிடையாது. போயிட்டு வா.''

விகாஸ் அதிர்ச்சியில் நின்றான். ''என்னை மன்னிச்சுடுப்பா!'' மனம் இறைஞ்சிற்று...

13 comments:

வெங்கட் நாகராஜ் said...

அருமை சார். பரிசுக்கு வாழ்த்துக்கள்.

சௌந்தர் said...

நல்ல கதைக்கு கிடைத்த பரிசு

பா.ராஜாராம் said...

மிக அருமை ஜனா! வாழ்த்துகள்!

Cable சங்கர் said...

நல்ல கதை.. ஜனா.. வாழ்த்துக்கள்

எல் கே said...

arumai

ரிஷபன் said...

நெகிழ வைத்த கதை.. பரிசுக்கு நல்வாழ்த்துகள்..

vasu balaji said...

arumai sir. vaazhthugal

Chitra said...

('நம் உரத்த சிந்தனை' மாத இதழ் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை)

....Congratulations!

Rekha raghavan said...

சிறப்பான கதைக்காக பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

Bagavath Kumar.A.Rtn. said...

தற்காலத்துக்கு தேவையான
அருமையான கதை. நல்ல நடை.
வாழ்த்துக்கள் ஜனா!

பத்மா said...

வாழ்த்துக்கள் .ரொம்ப நல்லாயிருக்கு

பத்மா said...

நல்ல சவுக்கடி .அருமையா தொய்வில்லாம எழுதிருக்கீங்க ..வாழ்த்துக்கள்

Suganthan said...

மகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது தந்தையின் கடமை - வாழ் நாள் முழுவதும். ஒவ்வொரு stage-லும் ஒவ்வொரு முறையில். பிரம்மாதமாக புரிய வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்! சரியான நல்ல கதைக்கு, தகுதியான பரிசு. வாழ்த்துக்கள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!