Saturday, April 18, 2020

அந்த வித்தியாசம்...(நிமிடக் கதை)

சாயங்காலம்தான் போக முடிந்தது அந்தக் கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு.  ரொம்பகாலமாக அவர் குடும்பத்துக்கு பழக்கமானவர் கொத்தனார் முருகேசன்.  புது வீடு கட்டியிருந்தார்.
காலையிலேயே எல்லாரும் வந்துவிட்டுப் போயிருந்தனர். டிபனை முடித்துவிட்டு அவருடன் அமர்ந்து பேசலானார் சாத்வீகன். முருகேசனின் மனைவி பரிசுப் பொருட்களை எடுத்து ஒவ்வொன்றாகப் பிரித்தவள், ”அட, சூப்பராயிருக்கே...” அழகான மயில் சிற்பம். 
”ஆஹா, யாரோட கிஃப்ட் அது?” 
”உங்க மருமகன் சந்திரன்தான்... ஐநூறு ரூபாயாவது இருக்கும்.”
”பரவாயில்லையே? ஆமா, மாணிக்கமும் வந்தான் இல்லையா? அவன் என்ன..” 
”ஏதோ கவர் நீட்டின மாதிரி இருந்தது...”  அதை எடுத்தாள். நூறு ரூபாய்த் தாள் ஒன்று.
”பார்த்தீங்களா சார்,” என்றார் முருகேசன் சாத்வீகனிடம். ”ரெண்டு பேருமே என் மருமகன்கள்தான்.  சந்திரன் வேலை பார்க்கிறது ஒரு கம்பெனியில் கிளார்க்காக. மாணிக்கம் சூபர்வைசர் வேலை. ரெண்டு பேருக்குமே மாசம் இருபதாயிரம் வருமானம் வருது. ஆனா பாருங்க, அவன் ஐநூறு ரூபா மதிப்புக்கு கிஃப்ட் கொண்டுவந்திருக்கான். இவன் என்னடான்னா வெறும் நூறு. அந்த மனசு வித்தியாசத்தைப் பாருங்க.” தொடர்ந்து மாணிக்கத்தை விமரிசித்தார். “ரெண்டு பேரின் அன்பின் அளவை, அக்கறையின் அளவை இது காட்டுது.” 
”வெய்ட், வெய்ட்,” என்றார் இவர். ”பரிசுப் பொருளை வைத்து அன்பையோ அக்கறையையோ மதிப்பிடுவது சரியில்லை. தவிர, நேரத்தின் மதிப்பும் ஆளுக்கு ஆள் வேறுபடுவது. அதைவைத்தும் ஒப்பிடலாகாது. அது ஒருபுறமிருக்க, நீங்க மதிப்பிட்ட கணக்கும் சரியில்லை. முக்கியமான ஒரு விஷயத்தை மறந்திட்டீங்களே?”
”என்ன சொல்றீங்க?”
”கம்பெனியில் வேலை பார்க்கிற சந்திரனுக்கு மாத சம்பளம். இன்னிக்கு ஒரு நாள் லீவு எடுத்தாலும் அவன் சம்பளம் குறையாது. ஆனால் மாணிக்கம் தின சம்பளம் பெறுபவனாச்சே.. இன்னிக்கு அவனுக்கு எழுநூறு ரூபாய் இழப்பு.  ஆக, அவன் இந்த ஃபங்க்‌ஷனுக்காக செலவிட்டதுதானே அதிகம் என்றாகிறது?” 
அவசரப்பட்டு பேசிவிட்டதை அவர் உணர்ந்தார்.  
><><><
('அமுதம்' மே, 2016 இதழில் வெளியானது. 'அன்புடன் ஒரு நிமிடம்.')


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... அதானே...

சரியான பார்வை சாத்வீகன் அவர்களுடைய பார்வை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!