Monday, December 21, 2015

சொல்லக் கூடாதது...(நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 94


 நண்பனைப் பார்த்து நாலைந்து நாளாச்சே என்று தியாகு வீட்டுக்கு வந்தான் வினோத். 
”என்னடா  ஆளையே காணோம்? செல்லில் கிடைக்க மாட்டேங்கிறே... ஆபீசுக்கு போன் பண்ணினா லீவுன்னு சொல்றாங்க!”
”ரெண்டு வாரமா ஒரே அலைச்சல். நானே வந்து உன்னைப் பார்க்கணும்னு நினைச்சேன். வசமா மாட்டிக்கிட்டேண்டா எங்க சதாசிவம் மாமாகிட்டே. ஆத்திரம் ஆத்திரமா வருது. ஆனா ஒண்ணும் செய்ய முடியலே.”
’ஏன், என்ன பண்ணினார்?”
’அவரு வீட்டில மராமத்து வேலை நடக்குது, நீதான் பார்த்துக்கணும்னு இழுத்துட்டுப் போயிட்டாரு. ரெண்டே வாரம் லீவு போட்டால் போதும்னு சொல்லி கையோட...  தினம் அலையறேன்.”
”ஓஹோ?”
”அவருக்கு இல்லாத வசதியா? எத்தனை சம்பளம் வேணா கொடுத்து எத்தனை ஆள் வேணா போடமுடியும்.  அவருக்குப் போய் இதை செய்யறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலே.” 
வினோத் ஒரு நிமிடம் யோசித்தான். ”இதை நீ  எதிர்பார்க்கலை இல்லையா?”
”கொஞ்சமும்!”
”ஆனா நான் எதிர்பார்த்தேனாக்கும்!”
”எப்படிடா சொல்றே?”
”போன மாசம் உங்க அண்ணன் வீட்டு கிரகப் பிரவேசத்தில நாம எல்லாம் சந்திச்சோமே ஞாபகமிருக்கா? காலையில டிபன் சாப்பிட்டுட்டு ஃப்ரண்ட்ஸ், சொந்தக்காரங்க  எல்லாருமா உட்கார்ந்து...நீ கூட ஜாலியா லெக்சர் அடிச்சிட்டிருந்தே...”
”ஆமாமா, ஞாபகம் வருது..”
”என்னென்ன சொன்னேங்கிறதும் நினைவிருக்கா?  உன் ஆபீஸ் அட்டெண்டர் ரெங்கனோட பையனை ஒரு வாரமா அலைஞ்சு காலேஜில சேர்த்து அவனுக்கு ட்யூஷன் ஏற்பாடு பண்ணினதை...உன் வீட்டுப் பின்னாடி ஒரு குடிசையில தங்கியிருந்த  வயசான பெண்மணிக்கு தினம் வெஜிடபிள் எல்லாம் வாங்கித்தந்திட்டிருந்ததை... தூரத்து உறவான ஒரு முதியவருக்கு கான்சர் வந்தப்ப மாசாமாசம் லீவு போட்டிட்டு சென்னை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போனதை... இப்படி எத்தனை சம்பவம் சொன்னே? எப்படியெல்லாம் உன்னுடைய தொண்டுள்ளத்தைப் பத்தி பெருமையா எடுத்து இயம்பிட்டிருந்தே? ஞாபகம் வருதா? அப்ப இந்த உன் மாமாவும்கூட இருந்தாரே...”
”ஆமா.’ 
”அதான் உன்னைக் கூப்பிட்டிருக்காரு. சரிதானே?”
”என்ன சரி? அவங்க எல்லாம் முடியாதவங்க, வசதியில்லாதவங்க.. அதான் நான் உதவினேன், உதவறேன். இவருக்கு ஏன்...”
”உன்னைப் பொறுத்தவரை அப்படி. அவருக்கு?” 
தியாகுவுக்கு தன் தவறு புரிந்தது.  
”இப்பவாவது தெரிஞ்சிக்க. உண்மையான தேவை உள்ளவங்களுக்கு நாம உதவறதில எத்தனை முனைப்பா இருக்கிறோமோ அத்தனை தூரம் அது இல்லாதவங்க முன்னே  நாம செஞ்ச உதவிகளைப் பத்திப் பேசறதில ஜாக்கிரதையா இருக்கணும்.”
(”அமுதம்’ நவ. 2014  இதழில் வெளியானது)

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உண்மையான தேவை உள்ளவங்களுக்கு நாம உதவறதில எத்தனை முனைப்பா இருக்கிறோமோ அத்தனை தூரம் அது இல்லாதவங்க முன்னே நாம செஞ்ச உதவிகளைப் பத்திப் பேசறதில ஜாக்கிரதையா இருக்கணும்.”//

மிகவும் கருத்துள்ள கதை.

//(”அமுதம்’ நவ. 2014 இதழில் வெளியானது)//

பாராட்டுகள்,

”தளிர் சுரேஷ்” said...

நல்ல அறிவுரை! சிறந்த கதை! வாழ்த்துக்கள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்லதொரு கரு(த்து)!

Unknown said...

தங்கள் பதிவுகளை இங்கும் பதியலாம் http://tamiln.in/

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!