அன்புடன் ஒரு நிமிடம் - 92
ஊரிலிருந்து வினோதைப் பார்க்க வந்திருந்தான் வரதன். தூரத்து உறவு.
”நாலு மாசம் ஆச்சு பார்த்து...வா வா!” வரவேற்று உட்கார வைத்தான் வினோத். ”அங்கே என்ன விசேஷம்?... எங்கப்பா அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க?”
இவன் கேட்க வாயெடுக்குமுன் அவனே விவரமாக எல்லாம் சொன்னான். அப்பாவின் இருமலிலிருந்து பால்காரர் வீட்டு மாடு கன்று போட்டது வரை நீண்டதொரு செய்தித் தொகுப்பு வாசித்தான்.
அதற்குள் யமுனா இட்லிகளை எடுத்து தட்டுக்களில் பரப்ப... “வா, சாப்பிட உட்கார்!” அழைத்தான் வினோத்.
கை கழுவப் போன வரதனைக் காணோமே என்று எட்டிப்பார்த்தான். ”அட, இங்கே என்ன பண்றே இன்னும்...?”
வாஷ் பேசினில் கை கழுவ வந்தவன் அங்கிருந்த பிரஷை எடுத்து பேசினைக் க்ளீன் செய்து கொண்டிருந்தான்.
”கொஞ்சம் அழுக்கா இருந்தது, அதான் இதால லேசா...” என்ற அவன், ”சூபரா க்ளீன் பண்ணுதே இந்த பிரஷ், என்ன விலை, எங்கே வாங்கினே?”
வினோத் முகத்தில் பெருமிதம். ”சொன்னா ஆச்சரியப் படுவே. பதினஞ்சு வருஷம் இருக்கும் இந்த பிரஷை வாங்கி... வெறும் பதினெட்டு ரூபா. வாங்கினப்ப எத்தனை ஸ்ட்ராங்கா இருந்ததோ அப்படியே இருக்கு இன்னிக்கும். ஒரு இழை கூட பிரியலே. இத்தனை வருஷமா உபயோகிச்சுட்டு வர்றோம். கொஞ்சமும் தேய்ஞ்சு போகலே. பேசின் சுத்தம் பண்ண, அதை இதைன்னு உபயோகிக்கிறதுக்கு ஒரு கணக்கில்லை. ஆனா இன்னும் அதே மாதிரி நல்லா உழைக்குது.”
அந்த பிரஷைப் பற்றி வினோதுக்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு. அதனால் படு சுவாரசியமாக சிலாகித்தான்.
“அப்படியா?” என்று அதை ஆச்சரியமாகப் பார்த்தான் வரதன். “பதினஞ்சு வருஷமா உழைக்குதுன்னா அபாரம்தான்.”
திரும்ப அதை வைக்கப் போனவன் அதன் மேற்புரத்தைக் கவனித்தான்.மேல் பகுதியில் நிறைய அழுக்கு. கைப்பிடியின் பின் பகுதியிலும் திட்டாக படிந்திருந்தது. அந்தக் கோணத்தில் ஆராய்ந்ததில் ஆங்காங்கே கறுப்பாய் புள்ளிகள் சிலவும் தென்பட்டன.
“என்ன இப்படி இருக்கு?”
”ஆமா இதை க்ளீன் பண்ணவே இல்லை. அதான்...”
”என்ன ஒரு irony பாரு. இந்த பிரஷ் நமக்கு எத்தனை உழைச்சிருக்கு. எத்தனை விஷயங்களை சுத்தம் பண்ணிக் கொடுத்திருக்கு? ஆனா அது கொஞ்சம் தளர்ந்து அதில் அழுக்குப் படிஞ்சிருக்கிறப்ப அதை நாம க்ளீன் பண்ணணும்னு நமக்குத் தோணறதில்லையே?”
சாப்பிட்டுவிட்டு அவன் கிளம்பிப் போய் விட்டான். ஆனால் வினோத் மனதில் அந்தக் கேள்வி எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தது. நமக்காக இத்தனை வருஷம் பாடுபட்ட பெற்றோருக்கு இப்ப கொஞ்சம் உடல் நிலை பாதிச்சிருக்கும்போது அவங்களைக் கூடவே வைத்துப் பார்த்துக்கணும்னு நமக்குத் தோணவே இல்லையே?
(’அமுதம்’ அக்டோபர் 2014 இதழில் வெளியானது)
5 comments:
ரசித்தேன்... அருமை...
மிகப்பெரியதோர் விஷயத்தை மிகச்சிறியதோர் நிகழ்ச்சி மூலம் கதையாகச்சொல்லியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.
கடைசி பத்தி மிகவும் சிந்திக்க வைக்கிறது.
//(’அமுதம்’ அக்டோபர் 2014 இதழில் வெளியானது)//
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
சின்ன சம்பவம் பெரிய நீதியை உணர்த்திவிட்டது! அருமை!
நல்ல கதை. சின்ன பிரஷ் கொண்டு பெரிய விஷயத்தினை புரிய வைத்து விட்டாரே....
அருமையான கதை. ஆஃப்டர் ஆல் ஒரு க்ளீனிங்க் ப்ரஷ் என்று ஒதுக்கிட முடியாது! அதிலும் நல்ல போதனை!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!