Thursday, December 3, 2015

அரிதான பயன்கள்...(நிமிடக்கதை)


அன்புடன் ஒரு நிமிடம் - 90.

”...பார்க்கிறவங்க அப்படியே அசந்திடற மாதிரி இருக்கணும். அந்த ஏரியாவில அது ஒரு மாடல் ஹவுஸா...”
புதிதாகத் தான் கட்டவிருக்கிற வீட்டைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தான் அவர் மைத்துனன் யுவன், ”எல்லா வசதியும் இருக்கிற மாதிரி ஒரு ரெண்டாயிரம் சதுர அடியில பிளான் பண்ணியிருக்கேன்.”  
”அத்தனை ஏரியா வேணுமா?’ என்றார் வாசு.
”பின்னே  பார்க்க அசத்தலா இருக்கவேண்டாமா? மாடிப்படியை ஹாலில் டைனிங் பக்கமா தொடங்கி வளைவா மேலேற்றி கொண்டு போய் மேலே ஒரு அரை வட்டமா காரிடார்..."
”அது எதுக்கு?’
”அங்கேயிருந்து பார்த்தால் கீழே ஹால் வியூ பிரமாதமா இருக்கணும்.  அப்புறம் திடீர்னு குடும்பத்தோட யாராச்சும் கஸ்ட் வந்தா தங்க 
பின்னாடி ரெண்டு ரூம்ல சின்னதா அவுட் ஹவுஸ் மாதிரி ஒண்ணு.’
”அதான் மேலே ஒரு கஸ்ட் ரூம் சொன்னியே முதலில்?”
”இது குடும்பத்தோட வந்தால் தங்கறதுக்கு..”
”ஓஹோ, இந்தப்பக்கம் தனியா ஒரு ரூம் கொடுத்திருக்கியே, அது எதுக்கு?” அவன் வரைந்து காட்டிய படத்தைப் பார்த்துக் கேட்டார்.
”ஒரு எக்ஸ்ட்ரா ரூம் இருக்கட்டுமேன்னுதான்... நாளைக்கு எதும் அவசியம்  நேர்ந்தா உதவுமே...” பென்சிலால் ஒரு இடத்தில் சின்னக் கோடுகளைத் தீட்டினான். "இங்கே இந்தக் காலியிடத்தில ஒரு சின்ன புல்வெளி மாதிரி அமைக்கப் போறேன்.பசங்க எப்பவாவது லீவில் வந்தா விளையாடறதுக்கு ஆகுமில்லையா?”
தொடர்ந்து அதில் அவன் ஏற்படுத்தவிருக்கும் புதுப் புது அம்சங்களைப் பற்றி இன்னும் அடுக்கினான்..எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டவர் அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கினார். அப்புறம் திடீரென்று நினைவு வந்தவராக, "மறந்தே போயிட்டேன், உனக்கொரு செல் போன் வாங்கித் தர்றதா நினைச்சிருந்தேன்... வா இப்பவே முடிச்சிடலாம்." 
"அட என்ன ஒரு  கோயின்சிடன்ஸ்! நேத்துத்தான் செல் போனைத் தொலைச்சுட்டேன்." 
"அப்ப உடனே கிளம்பு..."
”நேராக வண்டியை ஒரு மாலில் நிறுத்தினார். அந்த ஸ்டோர் அட்டகாசமாக இருந்தது.
”என்ன இங்கே...?’ 
”சூபரா ஒண்ணு வாங்கித் தர வேணாமாக்கும்?” இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். ”ஹலோ, புதுசா வந்திருக்கிற மாடல் எடுத்துப் போடுங்க.” 
”...இதைப் பார்த்தீங்களா...  ஹை ரிஸல்யூஷன் ஸ்க்ரீன் சார்.  முழுசா எட்டு இஞ்ச். படம் கண்ணில ஒத்திக்கலாம் போல இருக்கும்.”
இன்னொரு மாடலை எடுத்தார்.  ’”இதிலே எட்டு எம் பி காமிரா இருக்கு. துல்லியமா இருக்கும் படம் ஒவ்வொண்ணும்.”
அடுத்ததில் மெமரி கார்ட் இலவசம்...
”அதோ அந்த மொபைலை எடுங்க,” என்றான்.
”சார், அது பேசிக் மாடல். நிறைய ஃபீச்சர்ஸ் கிடையாது.”
ஆனால் அதையே எடுத்துக் கொண்டான். ”அதான் வேணும் எனக்கு.”
“ஸார் இந்த ஆண்ட்ராய்ட் போனில் பத்தாயிரம் ஆப்ஸ்...”
”அதெல்லாம் நான் உபயோகிக்கவா போறேன்? சிம்பிளா நான்  நிச்சயமா உபயோகிக்கிற விஷயங்கள் மட்டும் உள்ள ஒரு மொபைல் தான் வேணும் எனக்கு. தேவையில்லாம காசும் செலவு பண்ணி ஏன் வாங்கி சுமக்கணும்!”
வெளியே வந்ததும் வாசு, ‘நீ சொன்னது சரிதான்!  நாம உபயோகிக்கிறது அரிதுன்னு தெரியறப்ப காசையும் செலவு பண்ணி கஷ்டமும் பட்டு எந்த விஷயத்தையும் செய்யறதில அர்த்தம் இல்லைதான்.”
இவர் சொல்றது கட்டவிருக்கும் தன் வீட்டுக்கும் பொருந்தற மாதிரி இருக்கே... யோசிக்க ஆரம்பித்தான்.
’இவர்பாட்டுக்கு தேவையில்லாம  பிரம்மாண்டமா பிளானை போட்டுட்டே போறார் கடனும் அதிகம் வர்ற மாதிரி. என்ன பண்றதுன்னே தெரியலே,’ன்னு அவன் மனைவி சுமதி தன்னிடம் சொன்னதை இவர் அவனிடம் சொல்லவில்லை.

('அமுதம்’ அக்டோபர் 2014 இதழில் வெளியானது.)

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் பாடம்.... தேவையில்லாத வசதிகளைத் தவிர்க்கலாம்....

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு திட்டம்...

ரிஷபன் said...

உங்கள் டச் ! கடனை இழுத்துக் கொள்வதில் என்ன லாபம் இருக்கு.. நல்ல தீம்

கோமதி அரசு said...

அருமையான கதை. பயனுள்ள கதை.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல கருத்துள்ள கதை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!