Sunday, March 31, 2013

முதற் புள்ளி...



அன்புடன் ஒரு நிமிடம் - 29

முதற் புள்ளி

ன்னைத்தான் தேடிட்டிருந்தேன்,” என்று கிஷோர் வந்ததுமே வரவேற்ற மாமா வினாடிகளை வீணடிக்காமல் கேட்டார் மனதில் நின்றதை.
உனக்கும் வெங்கட்டுக்கும் என்ன பிரசினை? கொஞ்ச நாளா அவன் வீட்டுப் பக்கமே போறதில்லையாமே? போனில் கூட வர்றதில்லை போல?”

அப்படீன்னு அவன் சொன்னானா?”

நோ,நோ. லதிகா, அவன் மனைவிதான் சொன்னாள்.

ப்ச்! கிடக்கிறான் விடுங்க மாமா! ஃபிரண்டு ஃபிரண்டுன்னு எவ்வளவுதான் விட்டுக் கொடுக்கிறது?” படிக்க எடுத்த பேப்பரை திரும்ப டீப்பாய்க்கே விசிறியடித்ததில் அவன் உள் காயம் பளிச்சிட்டது.

எல்லா ஃபிரண்டையும் மாதிரியா அவன்? ஷெர்லாக் ஹோம்ஸும் வாட்ஸனுமாக மாதிரி இல்லே வளைய வந்தீங்க?”

சரி, எதுக்கும் ஒரு லிமிட் இருக்கில்லையா?”

அதென்ன, ஐநூற்றி முப்பத்தி ஏழா?”

என்ன கேக்கறீங்க?”

அதான் நீ வெச்சிருக்கிற லிமிட்? அந்த நம்பரைத்தான் என்னன்னு கேட்டேன்.

சிரித்தான்.அப்படியெல்லாம் இல்லை, பொறுத்துக்க முடியாத லெவலுக்குப் போகும்போது வேறே என்ன பண்றது?”

அப்படீங்கறே?, சரி, ஏன் இப்படி நடந்துக்கறேன்னு கேட்கலாம் இல்லியா?”

உதாசீனப் படுத்தறவங்க கிட்டே என்ன கேக்க முடியும்? தன்மானம்னு ஒண்ணு இருக்கில்லே? கழிஞ்ச நாலஞ்சு தடவை அவன் வீட்டுக்குப் போயிருந்தப்ப சரியா முகம் கொடுத்து பேசலை. இங்கே வீட்டு ரிப்பேர் வேலை நடந்துட்டிருக்கு, கண்டுக்கவே இல்லை. முன்னேயெல்லாம் எத்தனை ஒத்தாசையா இருப்பான்? அவன் பையனுக்கு எல்.கே.ஜி. அட்மிஷன் முயற்சி பண்ணினதைப் பத்தி மூச்சு விடலே, கிடைச்ச பிறகுதான் சொன்னான். முன்னேயென்றால் எப்படியாவது ஒரு நல்ல ஸ்கூல்ல வாங்கணும்டான்னு என்கிட்ட தான் ஓடி வருவான். ஒண்ணொன்னா சொல்லிட்டிருக்கவில்லை, சுருக்கமா சொன்னா அவன் இப்ப கொஞ்ச நாளா என்கிட்ட சரியா பழகறது இல்லை. அதான் என்னை டிரிகர் செய்தது. அதான் நானும் ஒதுங்கிக் கொண்டேன்.

அப்படியானால் சரிதான்! மோவாயைத் தடவிக் கொண்டு ஆமோதித்தார். அப்புறம் வெகு நேரம் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை.

டி.வி யில் சிவாஜி நடித்த பலே பாண்டியா ஓடிக்கொண்டிருந்தது. தொடர்ந்து நகைச்சுவைக் காட்சிகள்...

கடகடவென்று சிரித்து ரசித்தான் கிஷோர்.

சற்று நேரத்தில் அவன் கிளம்ப எழுந்தபோது...

என்ன மாமா ஏதோ யோசனை மாதிரி தெரியுது?”

ஏன் கிஷோர், வெங்கட்டின் சில செயல்கள் உன்னை டிரிகர் செய்தது மாதிரி உன்னோட ஏதேனும் செயல்கள் அவனை தூண்டியிருந்து அதன் விளைவாக அவன் சற்று விட்டேற்றியாய் நடந்து கொண்டிருக்கலாமோன்னு ஒரு கணம் யோசனை ஓடிற்று! என்றவர், “நோ. நோ. இருக்காது, அப்படி ஏதும் இருந்தால் அதைப்பற்றி நீ முதலில் யோசிக்காமலா இருந்திருப்பாய்?” என்றார். 

அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அவன் யோசிக்க ஆரம்பித்தான்...
<<>>
('அமுதம்' டிசம்பர் 2012 இதழில் வெளியானது)

(படம்- நன்றி: கூகிள்)

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அவன் யோசிக்க ஆரம்பித்தான்...

யோசிக்க ஆரம்பித்த முதற்புள்ளி ....

திண்டுக்கல் தனபாலன் said...

தம்மைப்போல் மற்றவர்களும் நினைப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் குணம் பலருக்கும் கண்டிப்பாக இல்லை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

யோசிக்க ஆரம்பித்த முதற்புள்ளி ...
கதை அருமை.பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

யோசிக்க ஆரம்பித்துவிட்டால் நல்ல தீர்வு கிடைத்துவிடும்.
நண்பர்கள் சேர்ந்துவிடுவார்கள்.
நல்லதைச்சொல்ல மாமா போன்ற உறவுகள் வேண்டும்.
நல்ல கதை.

Ranjani Narayanan said...

மாமாவின் சொற்கள் எங்களையும் யோசிக்க வைத்தன.

உஷா அன்பரசு said...

நாம் நடந்து கொள்வது போல்தான் அடுத்தவரும் நடந்து கொள்வார்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.ஆனால் குறைகள் செய்வதில் அடுத்தவர் போல் நாமும் இருக்க கூடாது என்று நினைத்தாலே பகை ஓடி விடும்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!