Wednesday, March 6, 2013

கவிதையின் பாடம்...


ந்தக் காலத்து டூயட் பாடல்கள் என்றாலே, தன் காதலியையும்,  தான் அவள்மீது கொண்ட மையலையும், இயற்கையின் கடைந்தெடுத்த அற்புதங்களுக்கு ஒப்பிட்டு  காதலன் வர்ணிப்பதும் அவள் அதைக் கேட்டு புளகாங்கிதம் அடைவதும்தாம் திகட்டிப் போகிற அளவுக்கு திரைப் பாடல்களில்.திரும்பத் திரும்ப இருக்கும் என்று நினைத்திருந்தேன்.  அதெல்லாம் இப்போது ரசிக்கப்படுமா என்றால் சந்தேகம்தான் என்றும்...
ஆனால் அப்படி கண் காணும் காட்சிகளை காதலுக்கு உவமை சொல்லி வசீகரமான வார்த்தைகளில் பாடும் கதாநாயகனைப் பார்த்து அட போங்க, இதெல்லாம் இயற்கையின் அன்றாட சாதாரண நிகழ்வுகளே என்று அறிவுறுத்தும் கதாநாயகி அன்றே இருந்திருக்கிறாள் என்று எனக்கு சட்டென்று சொல்லிச் சென்ற இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு சரணத்திலும் அவள் அவனுக்கு என்ன அழகாய்ப் பதிலிறுக்கிறாள்!

படம்: இவன் அவனேதான்.’ இசை: எம். ரங்கராவ்.
வில்லிப்புத்தூரான் எழுதிய பாடலைப் பாடுபவர்கள் ஜானகி, திருச்சி லோகநாதன். 

பல்லவி:
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்...

சரணம் 1:                         
1. அவன்: மாமலை வானை தேன் முத்தம் ஈந்து
        மாசிலா காதல் பேசுதே சேர்ந்து..
  அவள்மாமலை தேடும் வான் வெகு தூரம்
        நாமதைக் காண ஏது ஆதாரம்? 

2. அவன் :பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி
         புதுமையைப் பார் இது காதல் அத்தாட்சி!
  அவள்: கிளைக் கனத்தாலே நீரலை மேலே
        வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே!.

3. அவன்: காதலின் தாகம் தணித்திட வேண்டி
        கரைதனில் தாவி வரும் அலை பாராய்!
  அவள்: தென் திசைக் காற்றின் வேகத்தினாலே
        திரை நதி மோதும்  அது கரை மேலே!

4. அவன்: பொன் வண்டு பூவை தாவியே ஓடி
         புதுக் காதல் கீதம்  பாடுதே நாடி...
  அவள்: தேனுண்ணும் வண்டு தான் பசி கொண்டு
         பூ மலர் கண்டு கத்துது மண்டு! 



பாடலின் இனிமையான இசை மனதை அள்ளிக் கொண்டு போகும்! 
(படம்- நன்றி: கூகிள்; காணொளி- நன்றி: youtube.)

(அந்தக் கால ஆனந்த விகடனின் அட்டைப் பட ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது.
கணவன்: கல்யாணத்துக்கு முந்தி நான் உனக்கு எழுதின காதல் கடிதங்களை இப்ப படிச்சுப் பார்த்தா அசட்டுத்தனமா இருக்கு!
மனைவி: எனக்கு அப்பவே அப்படித்தான் இருந்தது! ) 
<<<>>>

11 comments:

ரிஷபன் said...

ஒவ்வொரு சரணத்திலும் அவள் அவனுக்கு என்ன அழகாய்ப் பதிலிறுக்கிறாள்!

இனிய பாடல் இது வரை கேட்டிராதது

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாடல் இனிமை.

//அந்தக் கால ஆனந்த விகடனின் அட்டைப் பட ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது.

கணவன்: கல்யாணத்துக்கு முந்தி நான் உனக்கு எழுதின காதல் கடிதங்களை இப்ப படிச்சுப் பார்த்தா அசட்டுத்தனமா இருக்கு!

மனைவி: எனக்கு அப்பவே அப்படித்தான் இருந்தது! ) //

அருமையான ஜோக். அது தான் உண்மையும் கூட.

படித்ததும் குபீரென சிரிக்க வைக்கும் ஜோக் .. அதுவும் அந்தக்கால ஆனந்தவிகடன் ஜோக்ஸ் என்றால் எப்போது படித்தாலும் சிரிக்க முடியும், தான்.

பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடல்...

ஜோக் சூப்பர்...

இராஜராஜேஸ்வரி said...

இனிய பாடலும் காணொளிக்காட்சியும்
மனதை ஈர்த்தது ..

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் இனிய பாடல்.....

”ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்” என நினைக்கிறேன்....

கோமதி அரசு said...

பழைய பாடலுக்கு புதிய காட்சி அமைப்பு பொருத்தமாய் செய்த காணொளியும் அருமை.

Rekha raghavan said...

பாடலை கேட்டுவிட்டு போகிறவர்களை பார்த்திருக்கிறேன், அதையே அலசி ஆராய்ந்து ரசிப்பவரை இப்போதுதான் பார்க்கிறேன். அருமை சார்.

ரேகா ராகவன்.

ADHI VENKAT said...

பாடலும், வரிகளும், ஜோக்கும் என அனைத்துமே அருமை.

Ranjani Narayanan said...

பொதுவாக பெண்கள் உணர்ச்சியால் உந்தப் படுபவர்கள் என்று சொல்லுவார்கள். இங்கு இந்தப் பெண் தனது அன்பனுக்கு யதார்த்தத்தை சொல்வது ரசிக்க வைக்கிறது.

அழகான அர்த்தமுள்ள பாடல் வரிகள், இதமான இசை என்று மனதை நிறைக்கிறது.

பதிவின் மகுடம் அந்த ஜோக்!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப்பிறகு இந்தப்பாடலைக்கேட்டது இனிமையாக இருந்தது! அந்தக் காலத்தின் புகழ் பெற்ற பாடல்!
கேட்க வாய்ப்பளித்ததற்கு அன்பு நன்றி!!

Unknown said...

ஈடு இணையில்லா பாடல். எனக்கும் ரொம்ப பிடிக்கும். விரைவில் உங்கள் அனுமதியுடன் கிணற்றுத் தவளையில் வலம் வர வேண்டும். வருமா?

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!