அன்புடன் ஒரு நிமிடம் - 27
நாலைந்து ஆடியோ பெட்டிகளுக்கு நடுவில் தலை புதைந்து கிடந்த கிஷோர் அதிகப்படியாக ஏதோ அரவம் கேட்க தலை நிமிர்ந்து பார்க்கையில், ராகவ் அவனைக் கடந்து கிச்சனுக்குப் போய் விட்டிருந்தார். உள்ளே அவரும் யாழினியும் பேசிக் கொள்வதுகூட கேட்டது. ஓஹோ, இவன் ஏதோ பிசியாய் இருக்கிறான் என்று அவளிடம் பேச ஆரம்பித்து விட்டார் போல.
யாழினி
சமையல் செய்து கொண்டிருந்தாள். “அவியல் செய்யப் போறேன் சித்தப்பா. எங்க ஊர் டிஷ் ஆக்கும் அது!”
“ஓஹோ?” என்றவர், ‘ஆமா இந்த அவியல் எப்படி செய்யறதாக்கும்? சொல்லு, நானும் சேர்ந்துக்கறேனே...” என்று அவளருகில்
உட்கார்ந்துவிட்டார்.
யாழினி
சிரித்தாள். “நீங்களா சித்தப்பா?”
“நானே தான்! ஆமா அடுப்பைப் பத்த வை
முதல்லே!”
“ஐயோ முதலில் டிஷ்களுக்கான காய்
எல்லாம் வெட்டி வெச்சிட்டு அப்புறம் தான் அடுப்பைப் பத்த வைக்கணும். அப்பதான் காஸ் மிச்சப்
படுத்தலாம்.”
“அவ்வளவுதானே? அவியலுக்கு இதிலே என்ன காய்
வெட்டணும்? கத்தரிக்காயா, மாங்காயா, வெள்ளரிக்காயா, வாழைக்காயா?”
“எல்லாத்தையும்தான் சித்தப்பா!”
“எல்லாத்தையுமா?” மலைத்தார், “இதிலே இவ்வளவு சமாச்சாரம் இருக்கா?”
எட்டிப்
பார்த்தான் கிஷோர். தானும் களத்தில் குதிக்கலாமா? உள்ளிருந்து ஒரு உந்துதல்... “என்ன மாமா மாட்டிக் கிட்டீங்களா?”
"அதெல்லாமில்லை, எனக்குப் பிடிக்குமே இதெல்லாம்!" கையில் முருங்கைக்காய்.
“சமாளிக்காதீங்க, இப்படிக் கொடுங்க!” சட்டென்று அதைக் கையில் வாங்கிக்
கொண்டான்.
“பேண்ட்ஸ், பேண்ட்ஸ்...” என்று அவள் அலற அலற அப்படியே
தரையில் உட்கார்ந்து விட்டான். “இத்தனை வருஷமா இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததே இல்லை இவரு, இப்ப வந்துட்டாராக்கும்!” நொடித்தாள்.
ஆளுக்கொன்றாக
வெட்ட ஆரம்பிக்க...
முருங்கைக்
காயை சரசரவென்று வெட்டி, “இதோ ரெடி,” என்று அவன் நீட்ட...
யாழினிக்கு
சிரிப்பு தாங்க முடியவில்லை. “ஐய, இப்படியா தோலோட வெட்டறது?”
அந்தக்
கணம் ராகவின் அலைபேசி அழைக்க, எடுத்தவர், “..இப்ப வர முடியாதே, முக்கியமான வேலையில் இருக்கிறேனே?” என்றார்.
“என்ன மாமா?”
“ஃபிரண்ட் வீட்டில... பெண் பார்க்க
வர்றாங்களாம், ஒரு நடை நான் வரமுடியுமான்னு...”
“அதுக்கென்ன போய்வாங்க மாமா,’’ நகர தயங்கிய கால்களை நகர்த்தி
அனுப்பி வைத்தான், “நான்
பார்த்துக்கறேன் இங்கே! இறங்கிட்டேன் இல்லே கோதாவில்?”
“யாழ், அந்த வெண்டைக்காயை எடு!”
“எதுக்குங்க?”
“வெண்டைக்காய் சாம்பார்
வெக்கணுமில்ல? வெட்டத்தான்..”
“ஐயோ, அது மாட்ச் ஆகாது!”
“புடவை மாதிரி இதிலேயுமா?”
விழித்ததைப்
பார்த்து அவளுக்கு சிரிப்பு. “வெங்காய சாம்பார் வைக்கலாம்,”
கண்ணீரும்
கம்பலையுமாக அவன் வெங்காயத்தை வெட்ட "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சம்...” என்று அவள் பாட...
அரிசியை
அவன் களைந்தபோது அளவு ரொம்பவே குறைய, “என்னங்க இது பாதி அரிசியைக் காணோம்?”
“அதுவா? தண்ணீரில் களைஞ்சதில...”
“களைஞ்சிட்டீங்களாக்கும்? அதுவும் சரிதான்!” என்றாள், “களையறதுன்னா காணாம போக்கிடறதுன்னு
அர்த்தம் எங்க ஊரில...”
நடுவே
கியாஸ் தீர்ந்து போக அவன் விரைந்தோடி அடுத்த சிலிண்டரை மாற்றியது, பதமாக வெந்த பின்னும் வேகலை, வேகலை என்று அவன் பதறியது என்று
கேலியும் கூத்துமாக... கிண்டலும் சீட்டியுமாக... பத்து மணியிலிருந்த முள் எப்படி
ஒன்றுக்குத் தாவிற்று என்று தெரியவில்லை.
அடுத்த வாரத்தில் ஒரு நாள்.
மாமாவுடன் அவர் வீட்டில் பேசிக் கொண்டிருந்தான் கிஷோர்.
ஒவ்வொருத்தர்
வாழ்விலும் ஆகப் பெரிய சந்தோஷ கணங்கள் என்று ஒரு நேரம் இருக்கும், ஆனால் அது ஆளுக்கு ஆள் எப்படி
வித்தியாசப்பட்டிருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் ராகவ்.
அப்போது
யாழினியின் போன் வர, “இதோ அவளையும் கேட்போம்,” என்று கேட்க, தயங்காமல் உடனே பதில் வந்தது. “அன்னிக்கு எனக்கு சமையல் ஒத்தாசைன்னு வந்தாரே அந்த மூணு மணி நேரம்தான்!”
இவன்
நெகிழ்ந்து போனது அதிகமா மகிழ்ந்து போனது அதிகமா என்று தெரியவில்லை.
சரியாக நாலு வாரம் பொறுத்து, ஒரு நாள் ராகவ் யாழினிக்கு போன்
செய்து, “ஆமா, கிஷோர் எப்ப பார்த்தாலும் ஆபீஸ்
வேலை, இல்லேன்னா பிரண்ட்ஸ்னு
மூழ்கிடறான், குடும்பம்னு ஒண்ணு இருக்கிறதே
தெரியலேன்னு போன மாசம் புகார் வாசித்தாயே, அவனைப் பார்த்து பேசணுமே?” என்றார் ஒன்றுமே அறியாதவர் போல.
“ஐயோ அவர் அப்படி இல்லே மாமா, இப்பல்லாம் அவருடைய நேரம் அதிகம் செலவாகிறது
என்னோடுதான்,” என்றவள் ஒரு நிமிடம் நிறுத்தி, “தாங்க்ஸ் மாமா,” என்றாள்.
<<<>>>
('அமுதம்' டிசம்பர் 2012 இதழில் வெளியானது)
10 comments:
//ஒவ்வொருத்தர் வாழ்விலும் ஆகப் பெரிய சந்தோஷ கணங்கள் என்று ஒரு நேரம் இருக்கும், ஆனால் அது ஆளுக்கு ஆள் எப்படி வித்தியாசப்பட்டிருக்கும் //
உண்மை. அதை கனகச்சிதமாக பொருத்தி வாழ்வியல் பாடத்தை சொல்லிக்கொடுத்திருக்கீங்க. அருமை.
ரேகா ராகவன்.
புரிய வைத்து விட்டார் மாமா...
//இப்பல்லாம் அவருடைய நேரம் அதிகம் செலவாகிறது என்னோடுதான்,” என்றவள் ஒரு நிமிடம் நிறுத்தி, “தாங்க்ஸ் மாமா,” என்றாள். //
அழகான கதை. ;)))))
அமுதம் வெளியீட்டுக்குப் பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
நல்ல வாழ்வியல் அர்த்தம்.
அப்போது யாழினியின் போன் வர, “இதோ அவளையும் கேட்போம்,” என்று கேட்க, தயங்காமல் உடனே பதில் வந்தது. “அன்னிக்கு எனக்கு சமையல் ஒத்தாசைன்னு வந்தாரே அந்த மூணு மணி நேரம்தான்!”
இவன் நெகிழ்ந்து போனது அதிகமா மகிழ்ந்து போனது அதிகமா என்று தெரியவில்லை...
அந்த க்ஷணம் ...அழகானது ...
வாழ்ந்து கற்கும் வாழ்க்கைப்பாடம் ..
பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
அழகான வாழ்க்கை தத்துவத்தை சொன்ன கதை. ஒவ்வொரு நிமிடமுமே ரசிக்க வேண்டிய ஒன்று தான்...
நடுவே கியாஸ் தீர்ந்து போக அவன் விரைந்தோடி அடுத்த சிலிண்டரை மாற்றியது, பதமாக வெந்த பின்னும் வேகலை, வேகலை என்று அவன் பதறியது என்று கேலியும் கூத்துமாக... கிண்டலும் சீட்டியுமாக... பத்து மணியிலிருந்த முள் எப்படி ஒன்றுக்குத் தாவிற்று என்று தெரியவில்லை//
தாங்க்ஸ் !
//ஒவ்வொருத்தர் வாழ்விலும் ஆகப் பெரிய சந்தோஷ கணங்கள் என்று ஒரு நேரம் இருக்கும், ஆனால் அது ஆளுக்கு ஆள் எப்படி வித்தியாசப்பட்டிருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் ராகவ்///
உண்மைதான்...வாழ்க்கையின் தத்துவத்தை அபாரமா சொல்லிட்டீங்க...பெரிய எழுத்தாளர் உங்களுக்கு எழுத சொல்லியா தரணும்? ஆமா அதென்ன சிலமணி நேரம் முன்பு நான் கருத்து என்னும் பின்னூட்டம்அனுப்பியபோது அந்தக்கணம் போவேனா என்று அடம்பிடித்ததே? கொஞ்சம் தயவு பண்ணுங்க ஜனா என்னைமாதிரி சாதாரண எழுத்தாளர்களும் கருத்து சொல்ல அனுமதி கொடுங்க சாமி!!:)
ஒவ்வொருத்தர் வாழ்விலும் ஆகப் பெரிய சந்தோஷ கணங்கள் என்று ஒரு நேரம் இருக்கும், ஆனால் அது ஆளுக்கு ஆள் எப்படி வித்தியாசப்பட்டிருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் ராகவ்.
அப்போது யாழினியின் போன் வர, “இதோ அவளையும் கேட்போம்,” என்று கேட்க, தயங்காமல் உடனே பதில் வந்தது. “அன்னிக்கு எனக்கு சமையல் ஒத்தாசைன்னு வந்தாரே அந்த மூணு மணி நேரம்தான்!”//
அற்புதமான மறக்க முடியாத கணங்கள்.
வாழ்க்கையில் சில அற்புத கணங்களுக்கு ஏங்கும் பெண்ணின் இதயம் தெரிகிறது.
ராகவ், கிஷோருக்கு அழகாய் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டார்.
நல்ல கதை. வாழ்வியல் தத்துவத்தினை சுலபமாக எடுத்துரைத்தது!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!