Sunday, July 26, 2026

ரசி ரசி என்று...


‘இப்போது நீங்க அஞ்சு பேரும் உயிரோடு இருப்பதற்கான ஒரே காரணம் நீங்க யாரிடம் ஆட்டையை போட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது என்பதுதான்!’ என்கிறான் வில்லனிடமிருந்து வந்தவன், அந்த ஐந்து மினி சைஸ் திருடர்களிடம். உயிர் பிழைக்க அவர்களுக்கு ஒரு ஃபைனல் அஸைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. கொடுத்தது யார் என்று தெரியும் போது..?
படம்: ‘The Usual Suspects’.. சப்த நாடியும் ஒடுங்கினாற்போல் விசாரணைக்காக அமர்ந்திருக்கும் கெவின் பாத்திரம்தான் படத்தின் உயிர் நாடி. அந்த தன் முதல் காட்சியிலிருந்து காரில் ஏறும் கடைசி காட்சி வரை அவர் நடிப்பு ரசி ரசி என்று கதறும்.
அப்படியே அள்ளிக்கொண்டு விட்டார் Best Supporting Actor ஆஸ்காரை! நாலாவது வருடம் Best Actor பரிசையும் ('American Beauty')
Kevin Spacey... இன்று பிறந்த நாள்!
இவர் குரல் தனி ஒலி. வித்தியாசமான, மெதுவாய்த் தவழ்ந்து வரும் குரல்.
Top 10 வில்லன்கள் பட்டியலில் இரண்டு இடத்தை இரண்டு படங்களுக்காக அள்ளிக்கொண்டு விட்டவர் இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும்.
’Se7en’ படத்தில் சீரியல் கில்லர் ரோல் இவருக்கு. பாவத்துக்கு ஒருவராக ஏழு அப்'பாவி'களை கொலை செய்ய கிளம்பும் அவரின் மாடஸ் ஆப்பரேண்டியைக் கண்டுபிடித்து அவரைத் தூக்க முயலும் அதிகாரியாக Morgan Freeman! சபாஷ் சொல்லும் சரியான போட்டி!
சக்கைப்போடு போட்ட படம் ‘L.A.Confidential’. நட்சத்திரங்களின் வீக்நெஸை வைத்து நாலு காசு ஸைடில் பார்த்துக் கொண்டிருந்தவர், நல்ல பக்கம் சேர்ந்து உண்மைக்காக போராடும் போலீஸ் அதிகாரியாக மாறுவதை நவீனமாக சித்தரித்திருப்பார்.
திரையை விட மேடையே விருப்பம். என்ன சொல்றார்? ‘என்னதான் பிரமாதமாக நீங்கள் ஒரு படத்தில் நடித்தாலும் அதை விட நன்றாக அதில் நீங்கள் நடிக்க முடியாது. நாடகத்தில் அடுத்த செவ்வாய்க்கிழமை நீங்கள் இன்னும் பிரமாதமாக நடிக்க முடியும். அது தான் நாடகத்தின் த்ரில்!’
‘நாடக மேடை செய்து நசிந்து விட்டது என்கிறார்கள். ஆனால் மனிதர்கள் கதை கேட்க விரும்பும் வரை, மனிதர்கள் கதை சொல்ல விரும்பும் வரை நாடகம் உயிரோடுதான் இருக்கும்.’
நல்ல பாத்திரத்தை நாடிப் போவார். Woody Allen-க்கு Netflix சந்தா ஒன்றை அனுப்பினாராம் என் படங்களைப் பார்க்கலாமே என்றபடி. கண்டிப்பாக உங்களைப் பயன்படுத்திக் கொள்வேன் என்று அவர் பதிலளித்தார்.
Jack Lemmon தான் இவரது ரோல்மாடல். ‘எப்படி ஒரு நல்ல நடிகராகவும் நல்ல மனிதராகவும் இருக்க முடியுமென்று அவர் தான் கற்றுக் கொடுத்தார் எனக்கு.’
Other Quotes? ‘வெற்றி என்பது செத்துப் போவது மாதிரி. மேலும் மேலும் வெற்றி அடையும்போது இன்னும் உயரத்தில் உங்கள் வீடுகள் அமையும். இன்னும் உயரமாகும் வீட்டுச் சுவர்கள்.’
‘மிகப்பெரும் வெற்றி அடைந்ததும் அந்த கேள்வி உங்கள் முன் வந்து நிற்கும்: இதை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? கார், வீடு, வசதிகள் என்று வாங்கிக்கொண்டு ஒதுங்கி ஓய்வு எடுக்கப் போகிறீர்களா அல்லது அந்த வசதிகளை வைத்துக் கொண்டு ஏதாவது செய்து அன்பைப் பரப்பப் போகிறீர்களா?’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!