இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்... இன்று பிறந்த நாள்!
'அழகிய தீயே' தான் இவரை பிரபலமாக்கியது. பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி பாந்தமாக அமைந்த படம். “சந்தனப் பூங்காற்றே…” “விழிகளில் அருகினில்…” ரெண்டுமே கல்கண்டு ரகம். க்ளைமாக்ஸில் அந்த பின்னணி இசை! 'பூம்'!
இனி அவரின் அந்த அதி உன்னத முயற்சி. ‘ராமானுஜன்.’ 2014 இன் சிறந்த இசையாக ‘டெக்கான் மியூசிக்’ தேர்ந்தெடுத்த படம். க்ளாஸிகல் இசையும் வெஸ்டெர்னும் அந்தக் கதையின் காலத்திற்கேற்ப கலந்து ஓர் பவழ இசையைத் தவழ விட்டிருப்பார்.
“நாராயணா.. நாராயணா..” என்ற அந்தப் பாட்டை நீங்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டும். அடுத்து எத்தனை முறைகேட்பது என்பதை நீங்களே தீர்மானிப்பீர்கள். சுஹாசினி பாடி முடிந்து சின்ன இராமானுஜன் வந்து பாடும்போது பீட் மெல்லத் தாவி விட்டிருக்கும் முழு வெஸ்டர்னுக்கு. (லிங்க் கீழே)
அப்புறம் அவரின் அந்த ஆகச் சிறந்த பாடல்... என்ன அதுன்னு கேட்பவருக்கு: “என்ன இது, என்ன இது என்னைக் கொல்வது?..." கமலின் ‘நள தமயந்தி'யில் சின்மயியுடன் இவரே பாடியது. சரணத்தின் கடைசி வரி பல்லவியின் முதல் வரியாக மாறும் அதிசயம்! பாடல் நின்ற பிறகும் நம் காதில் அந்த தனனதன ஃப்ளூட்! அந்த பிரில்லியண்ட் அரேஞ்ச்மெண்ட்! நான் ஸ்டாப்பாக ஒலிக்க விட்டு நாம் தூங்கிப் போகலாம் நல்ல கனவுகளை நாடி! (லிங்க் கீழே)
அதே படத்தில்தான் மாதவனும் ஷ்ருதிகாவும் ஆடும் அந்த அட்டகாச ஜாலி பாடலும்! "புக்காம் பொறந்தா மனுஷாளெல்லாம் ஒண்ணா சேருங்கோ… மாப்ளே பொண்ணில் யார்தான் சமர்த்து நன்னாப் பாருங்கோ.."
“ஜீவன் எங்கே …” ‘யூனிவர்சிடி’ படத்தில் வரும் பாடல். ஜீவனைத் தொட்டுச் செல்லும். இடையிசையில் அமர்க்களப் படுத்தியிருப்பார். 'ஜெர்ரி' படத்தின் ஹிட் "என் சுவாசத்தில் காதலின் வாசம் வீசவைத்ததாரோ.."
இவரின் பக்திப் பாடல் ஆல்பங்களில் எஸ். பி. பி. பாடிய "கிருஷ்ணா.. ஜனார்த்தனா..." அப்படியொரு உருக்கம்!


No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!