Friday, July 24, 2026

அந்த இடையிசை!


இழுத்து நிறுத்தும் அந்த இடையிசை!
விஸ்தாரமாக மெல்லிசையை அதன் விவரிக்க முடியாத எல்லைகளுக்கு விஸ்தரித்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அந்தப் பாடல்!
“தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல்
கண்கள் உறங்கிடுமா?"
தென்றலில் இலை தவழ்வது போல இழைந்து செல்லும் அந்தப் பல்லவி முடிந்ததும் துவங்கும் பாருங்க (கேளுங்க) ஒரு இடையிசை .. (progression)
வயலின்கள் ‘தனனனா..’ என்று அலைகளாக மேலெழும்ப அதற்கு மேல் ஃப்ளூட் ‘தானனானனா..’ என்று அடுத்த கட்டத்துக்கு அந்த இசைச் சரத்தை எடுத்துச் செல்ல அதை நாம் ரசித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு ஆனந்த அதிர்ச்சி! பேஸ் கிதார் மேலோங்கி ‘தும்த தும் துதும்…’ என்று அதை ஆக்கிரமித்து சரணத்தில் கொண்டு போய் முடிக்கையில்… கையில் இல்லை நம் மனம்!
அப்பா! இசைச் சாட்டையால் சொடுக்கிவிட்டார்கள் நம் உள்ளத்தை விஸ்-ராம்!
ரீப்ளே பண்ணாமல் முதல் சரணத்துக்குள் போக முடியவில்லை. ஒரு வழியாக போய் வந்தால் அடுத்த இடையிசையில் ஜாக்பாட் நம்பர் 2 வுடன் காத்திருக்கிறார்கள் மெல்லிசையர்!
இந்த முறை வயலின் தொடங்கியதை ஃப்ளூட் எடுத்துச் செல்லும்போது ஆனந்த அதிர்ச்சியாக ‘ஆ அ ஆ அ ஆ…’ என்று சுசீலாவின் தேன்குரல் வயலினை ரீப்ளேஸ் செய்ய, பேஸ் கிதார் அதற்கும் சளைக்காமல் தாளம் போட இனிதே இரண்டாவது சரணத்தை ஆரம்பிக்கிறார் ஏ.எம்.ராஜா.
கொடுத்தவர்கள் மன்னர்கள்! கவனித்து ரசித்தால் நாம் வின்னர்கள்!
மருதகாசியின் மதுர வரிகள் இடம் பெற்றது ‘பெற்ற மகனை விற்ற அன்னை’ படத்தில். (எஸ் எஸ் ஆர், விஜயகுமாரி)

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!