Thursday, July 23, 2026

கடைசிக் குடம்


கடைசிக் குடம்
கே.பி.ஜனார்த்தனன்
('இலக்கியப்பீடம்' சிறுகதைப் போட்டி 2005 - பரிசு பெற்ற கதை)
கனகசுந்தரம் தவித்தார். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தண்ணீருக்கான எந்த சாத்தியக் கூறும் தென்படவில்லை. இப்படியோர் அத்துவானக் காட்டில் இப்படியொரு நெருக்கடியான வேளையில் பரிதவித்துக் கொண்டு நிற்க வேண்டி வரும் என்று தன் வாழ்நாளில் ஒருபோதும் நினைத்ததில்லை அவர். காலடி நிலத்தைப் போலவே அந்த உண்மை சுட்டது.
அவருக்கு இப்போது தண்ணீர் வேண்டும். உடனடியாக வேண்டும். ஓர் அரைக் குடமாவது வேண்டும்.
அங்கே இந்நேரம் மகளுக்கு என்ன ஆச்சோ என்று நினைத்தபோது அவர் மனம் பதை பதைத்தது. அஜிதா உயிருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்து விடக்கூடாதே என்று துடி துடித்தார். “கடவுளே, முருகா, உன் அறுபடை வீட்டுக்கு வந்து அன்னதானம் செய்யறேன், எப்படியாவது என் மகளைக் காப்பாத்து!”
அந்த நேரத்தில் அவர் புறப்பட்டு இங்கே வந்திருக்கவே கூடாது. மகளுக்குத் தலைப் பிரசவ நேரத்தில் யாராவது புது ஃபாக்டரிக்கு ஸைட் பார்க்கப் போவார்களா? புத்திக்குத் தெரிவது ஆசைப்பட்ட மனசுக்குத் தெரியாமல் போச்சே!
எண்பது கிலோமீட்டர் தானே, விருட்டுன்னு ஒரு டிரைவ் போய்விட்டு வந்து விடலாம் என்று காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். டிரைவரைக் கூட அழைத்துக் கொண்டு வரவில்லை, அங்கே வீட்டில் ஆட்கள் தேவைப்படுமே என்று.
இடத்தைப் பார்த்துப் பேசி முடித்து அட்வான்ஸ் நீட்டும்போது செல் ஒலித்தது.
“அஜிதாவுக்கு வலி எடுத்துட்டுதுங்க. நாங்க உடனே ஆஸ்பத்திரிக்குப் போறோம்.”
“வலிதானா? கன்ஃபர்ம் பண்ணிட்டியா?”
“ஐயோ அதெல்லாம் ஆச்சுங்க. நீங்க உடனே….”
“ஓகே. அப்ப அட்மிட் பண்ணிடு. நான் இதோ புறப்பட்டு வந்துடறேன்.”
“வந்துடுங்க. ஏற்கனவே அவளுக்கு பிராப்ளம் இருக்கு. டாக்டர் சொல்லியிருக்காரு. ஞாபகம் இருக்கில்ல?”
இருக்கிறது. அவர் அதற்குள் காரில் ஏறி விட்டிருந்தார். ”அப்ப பார்க்கலாம்யா! அட்வான்ஸ் பத்திரத்தை மானேஜர் கொண்டு வருவாரு.”
வண்டியைக் கிளப்பி அந்தப் பழைய தார் ரோட்டில் ஏதோ ஒரு சிற்றூரைத் தாண்டிக் கொண்டிருந்தபோது செல் மறுபடி கூப்பிட்டது. “ஹலோ!”
பார்வதியின் அழுகைதான் முந்திக்கொண்டு கேட்டது. “டாக்டர் என்னென்னமோ சொல்றாருங்க. ஏதோ சிக்கலாம். நீங்க எங்கே இருக்கீங்க?”
“வந்துட்டுத்தான் இருக்கேன். என்ன சிக்கல்? செல்லை டாக்டர்கிட்டே கொடு.”
“அவரு தியேட்டருக்குள்ளே இருக்காருங்க. பிளட்டுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். ஏ பாசிடிவ்.”
“என் குரூப் கூட… சரி, பெருமாள்கிட்டே சொல்லு. உடனே…” என்று சொல்வதற்குள் செல் சிக்னலை முற்றிலுமாக இழந்து விட்டது. “சே!”
எதிரில் தென்பட்ட மாட்டு வண்டியைக் கைநீட்டி நிறுத்தினார். “மெயின் ரோட்டுக்கு இன்னும் எத்தனை தொலைவு இருக்குப்பா? அர்ஜெண்டா போகணும்.”
“அது இருக்குங்க ஒரு இருபது கிலோமீட்டரு. நீங்க இப்படி இந்த மண் ரோட்டிலே புகுந்து ஸ்ட்ரெயிட்டா போனீங்கன்னா அதிலே பாதி தொலைவு கூட இருக்காதுங்க. மருங்கூர்கிட்டே ரோட்டிலே ஏறிடலாம்.”
“இந்த ரோட்டிலேயா? ரோடு ஒரு மாதிரி இருக்கே?”
“அதெல்லாம் சரிதாங்க. ஏத்தம் இறக்கமா இருக்குமே தவிர குழப்பம் ஒண்ணுமில்லீங்க. அட, துரிதமா போகணும்கறீங்க. அப்புறம் யோசிச்சிட்டிருந்தா எப்படிங்க?”
ரோடு சமாளிக்கும்படியாகத்தான் இருந்தது. ஆளரவம் எதுவும் தென்படவில்லை. வெகு தொலைவில் ஏதோ ஒன்றிரரண்டு குடிசைகள். மேலே பறக்கிற பருந்துகளும் காக்கைகளும். வெயில் தகித்தது.
பாதி தொலைவு வந்திருப்பார். கார் சட்டென நின்று விட்டது.
இறங்கி பேனட்டை திறந்து ஆராய்ந்தார். புகை முகத்தைச் சூழ்ந்தது. ரேடியேட்டர் தண்ணீர் கேட்டது.
தண்ணீர்! இந்த அத்துவானக் காட்டில் தண்ணீருக்கு எங்கே போவது? யாரிடமாவது கேட்கலாம் என்றால் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஒருவரும் தென்படவில்லை.
அங்கே என்ன ஆச்சோ? பார்வதியால் ஓரளவுக்கு மேல் சமாளிக்க முடியாது. டாக்டர் என்ன க்ரிடிகல் சிச்சுவேஷனைச் சொல்லப் போகிறாரோ? அதிலே அவள் துவண்டு, தடுமாறி, எப்படி என்ன முடிவு எடுத்து…
அவர் மட்டும் அங்கே இருந்தால் என்ன பிரச்சனை என்றாலும் சமாளித்திருப்பார். ஃபிளைட்டில் கூட ஸ்பெஷலிஸ்டை வரவழைத்திருப்பார்.
இதுவரை வாழ்க்கையில் அவர் சமாளித்திராத பிரச்னையே இல்லை. முந்து, முந்து, முந்திக் கொண்டு முன்னேறு. இதுவே அவரது வாழ்க்கையின் தாரக மந்திரம். அவரது சுய முன்னேற்றப் பாய்ச்சல்கள். அவற்றின் வேகம். மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னேறிப் போய்க் கொண்டே இருப்பார். எந்த சந்தர்ப்பத்திலும் தோல்வியுறாதவர் இப்போது வசமாக மாட்டிக் கொண்டு விட்டார்.
சுற்றிலும் மண்டியிருந்த முள் மரங்களைப் பரிதாபமாகப் பார்த்தார். இந்தப் பக்கம் இறங்கிப் பார்க்கலாமா? தண்ணீர் கிடைக்குமா? எந்தப் பக்கம் இறங்கித் தேடினாலும் தண்ணீர் கிடைக்கிற மாதிரி தெரியவில்லை. வந்த வழியே திரும்பி நடந்தால் மட்டும் - பத்து கிலோமீட்டருக்கு மேலேயே இருக்குமே? ஏதாவது சான்ஸ் இருக்கலாம். அது நடக்கக்கூடிய காரியமா? சே, இப்படி வந்து சிக்கிக் கொண்டோமே?
மனதில் குமைந்தபடி வந்த வழி திரும்பிப் பார்த்தபோதுதான் அந்தச் சிறுமியைப் பார்த்தார்.
தலையில் தண்ணீர்க் குடம்!
அவர் நாக்கில் எச்சில் ஊறிற்று. ‘கிடைச்சிட்டது!’
அவளைப் பார்த்தார். ஒட்டி உலர்ந்த தேகம். சாயம் போயிருந்த சட்டை. காய்ந்த சேறு அப்பியிருந்தது பாவாடையில். எண்ணெய் காணாத தலை தரிசாக வறண்டிருந்தது.
நிறுத்தினார். “இந்தா பிள்ளே! எங்கேயிருந்து தண்ணி கொண்டு வர்றே?”
“அப்பாலே புதுமலையிலே ஒரு குட்டை இருக்கு. அதிலேயிருந்துதான்.”
“ரொம்பத் தொலைவோ?”
“ஆமா.. ஏழு கிலோ மீட்டர். எங்க வீட்டிலேயிருந்து.”
“உங்க வீடு எங்கேயிருக்கு?”
“அது போகணுங்க.. இன்னும் மூணு கிலோமீட்டர்.”
“நல்ல சமயத்தில் தெய்வம் மாதிரி வந்தே.” விஷயத்தைச் சொன்னார். “அந்தத் தண்ணியைக் கொஞ்சம் கொடு, உனக்கு நான் பணம் தர்றேன்.” கையை நீட்டினார், நூறு ரூபாய் நோட்டுடன்.
அவள் யோசிக்கவில்லை. தீர்மானமாகச் சொன்னாள். “முடியாதுங்க.”
“என்னது… தரமாட்டியா?”
“ஆமாங்க. தரமாட்டேன்.”
“ஏய், உனக்கு எவ்வளவு வேணா பணம் தர்றேன். என் மகளுக்கு அங்கே பிரசவம் நடக்குது. சிக்கல் அதிலே. நான் உடனே போகணும். என் உயிரே அங்கே தான் இருக்கு. இந்தா…” நோட்டுக் கற்றைகளை எடுத்து நீட்டினார்.
“அதான் சொன்னேன்ல.. முடியாது! வழி விடுங்க.” அவள் தாண்டிச் செல்வதிலேயே குறியாயிருந்தாள்.
“ஏம்மா தர மாட்டேங்கிறே?”
“எப்படிங்க தர முடியும்? எங்களுக்குக் குடிக்கக் கூட தண்ணியில்லே! எங்கப்பா, அம்மா, அண்ணன், அக்கா நாலு பேரும் வேலைக்கு போயிருக்கிறாங்க. ஊரை சுத்தி ரொம்ப தொலைவுக்கு தண்ணி கிடையாது. கிழக்கே இப்படி பத்து கிலோமீட்டர் நடந்து போய் புதுமலையிலேயிருந்துதான் தண்ணி கொண்டு வரணும். அதனாலதான் நான் வேலைக்குப் போகலை. வேலை முடிஞ்சு அவங்க பசியோட வருவாங்க. அதுக்குள்ள நான் ரெண்டு குடம் தண்ணி எடுத்து சோறாக்கி வெக்கணும். ஒவ்வொரு குடமாத்தான் எடுத்திட்டு வரமுடியும். ஏன்னா… எனக்கு எலும்பு நோய் இருக்கு. எப்படி இந்தத் தண்ணியைத் தருவேன்? எங்க உசிரும் இந்த தண்ணியிலேதான் இருக்கு!” முகத்தில் உறுதி ஓடியது.
பத்து கிலோமீட்டர் இந்தக் கல்லிலும் முள்ளிலும் நடந்து… அவர் காலுக்குள் ஒரு மாதிரி கூசியது. கலங்கி சாயா கலரில் தழும்பிய தண்ணீரைப் பார்த்தார்.
‘இதையா குடிக்கிறாங்க? ஏன் டி.பி. எல்லாம் வராது?’
“கேக்கிறதுக்கே ரொம்பச் சங்கடமா இருக்கும்மா. தண்ணிக்கு இங்கே இவ்வளவு கஷ்டமா?” தேனொழுகப் பேசினார் “இத பாரும்மா, நீ கஷ்டப்பட்டு எடுத்துட்டு வந்த தண்ணியைக் கொடுன்னு கேக்க உண்மையிலேயே நான் விரும்பலை. ஆனா, நான் இருக்கிற நிலைமை அப்படி. கேக்கிற நிலைமையிலே கடவுள் என்னைக் கொண்டு வந்து விட்டுட்டார். பாரு.. இப்ப இந்தத் தண்ணியை இதிலே விட்டால் வண்டி கிளம்பிடும். நீயும் என்னோடவே வா. மெயின் ரோடு போனதும் முதல் ஊர்ல தண்ணியை வாங்கி உன்னை ஒரு டாக்ஸி பிடிச்சு அனுப்பி வெச்சிடறேன். சரியா?”
“முடியாது,” என்றாள் அவள் அழுத்தமாக.
“அப்புறமும் ஏம்மா முடியாதுங்கறே? உனக்கு வேண்டியது தண்ணி தானே? எனக்கும் உனக்கும் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிடறேன்ன பிறகும் மறுக்கிறியே… ஏன்?”
“ஏனா? ஏன்யா நான் இதைத் தரணும்? உங்களை மாதிரி ஆளுங்களுக்குத் தண்ணி கொடுக்க மாட்டேன். நாங்க இன்னிக்கு தண்ணிக்கு இந்தப் பாடு படறதுக்குக் காரணம் நீங்கதான்!”
“நாங்களா? என்ன பிள்ளே உளர்றே?”
“உளரலே. எங்கம்மா சொல்லியிருக்கா. எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கா.”
“என்ன சொன்னா?”
“உங்கள மாதிரி ஆளுங்களோட சுயநலத்தாலதான் இன்னிக்கு நாட்டிலே தண்ணிப் பஞ்சம். காடுகளை எல்லாம் அழிச்சிட்டீங்க. அப்புறம் எப்படி மழை பெய்யும்? விவசாயத்திலே வர்ற வருமானத்திலே படிப்பீங்க. அப்புறம் கிராமத்தைக் காலி பண்ணிட்டு டவுனுக்கு போயிடுவீங்க. டவுனிலிருக்கிற மரம், செடியை எல்லாம் வெட்டித் தள்ளுவீங்க. டவுனைப் பெரிசாக்கிப் பெருசாக்கி பக்கத்து கிராமத்தை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டுடுவீங்க. சுத்தியிருக்கிற வயலையெல்லாம் அழிச்சு வீடு, பாக்டரின்னு கட்டிடுவீங்க. இப்படி உலகத்தை சிமெண்டு கட்டடங்களா மாத்திட்டே போனா அப்புறம் மழை எங்கே பெய்யும்? தண்ணி எப்படிக் கிடைக்கும்?
“எங்கம்மா சொல்லுவா.. இயற்கையிலே எல்லாத்திலேயும் ஒரு சுழற்சி இருக்குதாம். பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க. கிராமத்திலே என்ன பண்ணறோம்? சாப்பாட்டிலேருந்து நமக்கு சக்தி வருது. அந்த சக்தியை உழைப்பாக்கி வயல்லே வேலை செய்றோம். அந்த உழைப்பிலே பயிரு வளர்ந்து மறுபடி நெல்லு விளைஞ்சு சாப்பாடு கிடைக்குது. பூமியிலிருந்து எடுத்ததை பூமிக்கே திரும்பக் கொடுத்திடறோம்.
“கடல்லேயிருந்து தண்ணியை எடுக்குது சூரியன். மலையும் காடும் அதை மழையாக்கித் தருது. பூமியிலே அது ஆறா ஓடி மறுபடியும் கடலுக்கே வருது. அது மாதிரி! ஆனா உங்க டவுன் ஆளுங்க இப்ப என்ன பண்றீங்க? பூமியிலேயிருந்து என்னென்னமோ எடுக்கறீங்க… ஆனா பூமிக்கு என்ன திருப்பித் தர்றீங்க? அல்லது தானாக பூமிக்குத் திரும்பக்கூடிய எதையாவது தடுக்காமல விட்டுருக்கீங்களா?
“உலகத்திலே இயல்பா இருக்கிற சுழற்சியை கலைக்கிறீங்க. அதனால கஷ்டப்படுறது யாரு? இப்ப முதல்ல நாங்க. எங்களை மாதிரி அப்பாவிங்க. அப்புறம் கடைசியிலே நீங்க. ஆமா, ஒரு நாள் நீங்களும் அதனால பாதிக்கப்படுவீங்க. பாதிக்கப்படணும். பட்டே தீருவீங்க. ஆமா… அப்படிப் பாதிக்கப்பட்டுத்தான் இப்ப இங்கே நீங்க நிக்கறீங்க!”
கனகசுந்தரம் ஸ்தம்பித்து நின்றார். அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடியாக விழுந்தன. காக்கையொன்று வேகமாகச் சிறகடித்து அவர்களுக்குக் குறுக்கே பறந்து சென்றது.
மகளின் பிரசவச் சிக்கல், போராட்டம் என்று அவர் இருந்த நிலைமையை முற்றிலுமாக மறந்து போனார். நேரம் நின்று போயிருந்தது.
உலகத்தின் கடைசிக் குடம் தண்ணீரை வைத்துக்கொண்டு உலகின் கடைசி இரண்டு மனிதர்கள் வார்த்தைகளால் போராடிக் கொண்டிருந்த மாதிரி பட்டது.
தன் பங்கில் நியாயம் சற்றுமின்றி போரில் தோற்றுப் போனதை உணர்ந்தார்.
“உண்மைதாம்மா! சுயநலம்கிற மந்திரத்தை உச்சரிச்சுக்கிட்டே வாழ்க்கை முழுதும் வாழ்ந்திடறோம். அதனுடைய பாதிப்பு சுத்திச் சுத்தி கடைசியிலே எங்களையும் தாக்கும்கிறது எங்களுக்குப் புரியலே. நீ சொல்றது சரிதாம்மா. இன்னிக்கு நீங்க. நாளைக்கு நாங்க. நாங்களும் ஒரு நாள் கஷ்டத்தை சந்திச்சே ஆகணும். எது எல்லாரையும் கஷ்டத்தில் கொண்டு விடுமோ அதை நோக்கி நாங்க கடுமையான வேதத்திலே போயிட்டிருக்கோம். நல்லாவே தெரியுது எனக்கு. இனிமே யோசிப்பேன். என்னை யோசிக்க வச்சிட்டே. புறப்படும்மா, வீட்டிலே எல்லாரும் பசியோட வருவாங்கன்னு சொன்னியே…”
அவள் புறப்படவில்லை. மெல்ல அந்த பிளாஸ்டிக் குடத்தை இறக்கி கார் மீது வைத்தாள். “எடுத்துக்குங்க,” என்றாள்.
“இல்லே.. வேணாம்மா.”
“இல்லிங்க, உங்க மக…”
“என்ன நடக்கிறதோ நடக்கட்டும் அங்கே. இயற்கையோட தீர்ப்பு அதுன்னு ஏத்துக்கிறேன்.”
“இல்லைங்க, ரொம்ப நாளா சுமந்த கோபம். கொட்டிட்டேன் வார்த்தையை. பெரிசா எடுத்துக்காதீங்க. எதிலே ஊத்தணுங்க?” என்று அவள் முற்பட, அவர் தயங்கிய அந்த வினாடி…
சர்ரென்று பறந்து வந்த இரு காக்கைகள் அந்தக் குடத்தின் மீது மோதின.
குடம் கவிழ்ந்து பள்ளத்தில் உருண்டோட அதிலிருந்து சாடிய தண்ணீர் - அந்த இடத்தில் அது வெறும் தண்ணீரா? - தரையில் புரண்டோடியது. காக்கைகள் அதே வேகத்தில் இறங்கிப் பாய்ந்து, உறிஞ்சும் செந்தரையுடன் போட்டியிட்டு அதைப் பருகிக் கொண்டு பறந்தன.
அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் சிறுமியும் கனகசுந்தரமும்.
“இந்த தண்ணீர் மீது அந்த பறவைகளுக்குத்தான் என்னை விட உரிமை போல,” என்றார் விதியை உணர்ந்தவர் மாதிரி.
சிறுமி சாலையின் ஓரப்பள்ளத்தில் மெல்ல இறங்கிச் சென்று அந்த குடத்தை எடுத்துக் கொண்டாள்.
அவர் பக்கெட்டை எடுத்துக் கொண்டார்.
அவள் வந்த வழியே நடந்தார்கள், மௌனமாக.
><><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!