Sunday, October 19, 2025

கிருஷ்ணரைப் போல...


நாமக்கல்லுக்கு சில பெருமைகள் உண்டு. முக்கியமானது: கவிஞர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பிறப்பிடம்.
நாமக்கல் கவிஞர்… இன்று பிறந்த நாள்.
எட்டாவது பிள்ளையாகப் பிறந்தவர்,
கிருஷ்ணரைப் போல.
"தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. " வரிகளை எழுதியவர்.
" கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்." என்ற வரிகளும் அவருடையவையே. (இந்த இரு பாடல்களும் 'கடவுளின் குழந்தை' படத்திலும் இடம் பெற்றன)
உப்பு சத்தியாக்கிரகத்தின் போது இவர் பாடிய பாடல் நினைவிருக்கும்... " கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!"
அந்தப் பிரபல படம்.. எம்ஜிஆர், பானுமதி நடித்த 'மலைக்கள்ளன்' இவருடைய கதை தான். பட்சிராஜாவின் ஸ்ரீராமுலு நாயுடு அதை இந்தியிலும் தயாரித்தார். 'Azaad'. திலீப்குமார் மீனாகுமாரி நடித்தனர்.
திருக்குறள் உரை, ‘கம்பனும் வால்மீகியும்’… நிறைய நூல்கள்!
1949இல் அரசவைக் கவிஞர் ஆனார். 1971இல் பத்மபூஷன் விருது.

Thursday, October 16, 2025

நல்ல அறிவுரை...


’சிலர் தாங்கள் எந்த இடத்துக்கு செல்லும்போதும் அதன்
சந்தோஷத்திற்குக் காரணமாகிறார்கள்.
மற்றவர் தாங்கள் எந்த இடத்தை விட்டு செல்லும்போதும்!
>><<
'இளைஞனாக இருக்கையில் நான்
வாழ்க்கையில் ஆக முக்கியமான விஷயம்
பணம் என்று எண்ணியிருந்தேன்;
இப்போது எனக்கு வயதாகவே,
அதுவேதான் என்று அறிந்துகொண்டேன்.'
>><<
'நல்ல அறிவுரையை எப்போதுமே நான்
எவருக்கேனும் கொடுத்துவிடுகிறேன்.
அந்த ஒன்றைத்தான்
அதைவைத்து செய்ய முடியும்,
ஒரு போதும் தனக்கு அது உதவுவதில்லை.’
>><<
’கையாளக் கடினமான
இரண்டே விஷயம் வாழ்க்கையில்:
தோல்வியும் வெற்றியும்.’
>><<
'விரும்பும் அத்தனை
விஷயங்களும் கிடைக்காவிடில்
விரும்பாத எத்தனை
விஷயங்கள் கிடைக்காமல் உள்ளதென
எண்ணிப் பாருங்கள்'
><><><
'இப்போதெல்லாம் மனிதர்களுக்கு
எல்லாவற்றின் விலையும் தெரிகிறது, ஆனால்
எதன் மதிப்பும் தெரிவதில்லை.’

சொன்னவருக்கு இன்று பிறந்த நாள்… Oscar Wilde...
ஆஸ்கார் வைல்ட் ஒரு முறை நடிகை ஸாரா பெனார்டுடன் பேசிக் கொண்டிருந்தார். சிகரெட் ஒன்றை எடுத்து பற்றவைக்குமுன் வைல்ட் அவளிடம், "நான் புகை விடறதில உங்களுக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லையே?"
"நீங்க புகையறதில எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை !" என்றாள் அவள் கூலாக.

><><><

Wednesday, October 15, 2025

ஃபிரேமுக்கு ஃபிரேம்...


ஃபிரேமுக்கு ஃபிரேம், காட்சிக்கு காட்சி நான் இருக்கிறேன் என்று தன்னை தெரிவித்துக் கொண்டே இருக்கும் டைரக்டர்கள் நிறைய பேர். ஆனால் கதைக்குள் முழுசாக நாம் மூழ்கி எழுந்திருந்து, யாரு நம்மை இதுக்குள்ளே இழுத்துட்டுப் போய் மெய் மறக்க வைத்தது என்று கடைசியில் தேடும் நபராக இருக்கும் இயக்குனர் வெகுசிலர்.
அவர்களில் ஒருவர் பீம்சிங். இன்று பிறந்த நாள்..
படிக்காத மேதை. ரங்கராவ் சிவாஜியை வீட்டை விட்டு போடா என்பார். என்னையா போகச் சொல்றீங்கன்னு அதிர்ந்து, எதிர்த்து, கத்தி, அடங்கி கடைசியில் கோபத்துடன் வெளியேறும் அந்த காட்சியில் சிவாஜி, ரங்காராவ் தவிர இன்னொருவரும் இருப்பார். ஆனால் அவரது பிரசன்ஸை கொஞ்சமும் நாம் உணர மாட்டோம். அவர்தான் பீம்சிங். Yes, his speciality is not showing his presence while showing his brilliance!
அம்மையப்பன் தான் முதல் படம். அடுத்ததில் கவனம் ஈர்த்தார். ‘ராஜா ராணி’. breezy comedy... நாலே முக்கால் நிமிட ஒரே ஷாட்டில் சேரன் செங்குட்டுவனாக தொடர் வசனம் பேசுவாரே சிவாஜி? அந்தப் படம். அப்புறம் ‘பாகப்பிரிவினை’ வந்தது. பாகஸ்தர் ஆகிவிட்டார் நம் வாழ்வில்.
திரைக்கதை எடிட்டிங் டைரக் ஷன் மூன்றிலும் எக்ஸ்பர்ட். எடிட்டிங் அசிஸ்டன்ட் ஆக ஆரம்பித்து டைரக் ஷன் அசிஸ்டெண்டாக ( கிருஷ்ணன் - பஞ்சுவிடம்) தொடர்ந்து, பின் டைரக்டர் ஆனவராயிற்றே?.
வாழ்க்கையின் முடிச்சுகளில் சிக்குண்டு தங்கள் தவிப்பை, உள்ளக் கொந்தளிப்பை கேரக்டர்கள் வெளிப்படுத்தும் போதெல்லாம் அதை நம் உள்ளங்களுக்கு நானோ லிட்டர் குறையாமல் அப்படியே டிரான்ஸ்ஃபர் செய்யும் வித்தையை அறிந்த வித்தகர். Opposite characters + Conflict = Drama என்பதையும் Sensitive Characters + Situation = Melodrama என்பதையும் புரிந்து வைத்திருப்பவர்.
சிவாஜி, ஜெமினி, சாவித்திரி என்று இந்தப் பக்கம் 'பாவமன்னிப்பு' அரங்கு நிரம்ப ஓடிக்கொண்டிருக்க, இரண்டே மாதத்தில் அதே நடிகர்களுடன் பாசமலர் வெளியாகி அந்தப் பக்கம் அரங்கு நிறைந்து... இந்த தியேட்டரை விட்டு சிரித்தபடியே வெளியே வருபவர்களும் சரி, அந்தத் தியேட்டரை விட்டு கண்ணீர் மல்க வெளி வருபவர்களும் சரி, கதையில் கரைந்து, காட்சிகளில் உருகி, பிரமிப்புடன் இருப்பார்கள். (வாழ்க்கையை அப்புறம் அவர்கள் பார்க்கும் விதமே மாறுபட ஆரம்பித்து விட்டிருக்கும்.) மிகச் சின்ன இடைவெளியில் இரண்டு குடும்பப் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா காண வைத்த டைரக்டர் அவர் ஒருவர்தான். நாலாம் மாதமே ‘பாலும் பழமும்’ வெளியாகி அடுத்த ஜூபிலியை நோக்கி... சிவாஜி படங்களுக்கு பீம்சிங் ஒரு பீம்!
அந்த வருடத்தின் மிக நீளப்படமான ‘பதிபக்தி’யில் தொடங்கி இரண்டே கால் மணி ஓடும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரை கேரக்டர்களின் conflict தான் இவரது பலம். அதில் சில மிக நுணுக்கமாக இருக்கும். ‘பார் மகளே பார்’ படத்தில் தன் வீட்டு ஃபங்ஷனுக்கு வந்திருந்த வி.கே.ராமசாமியை சிவாஜி தொடர்ந்து கேஷுவலாக அவமானப்படுத்த, பொறுக்கமுடியாமல் அவர் குமுறி எழுந்து, உன் இரண்டு மகள்களில் ஒருத்தியின் தாய் வேறு எவளோ ஒருத்தி, தெரியுமா உனக்கு? என்று தன்னை மறந்து பொங்கிவிடும் அந்தக் காட்சி சாட்சி.
பச்சக் என்று மனதில் ஒட்டிக் கொள்வதால் என்னமோ ‘பா’விலேயே ஆரம்பிப்பார் படத்தின் பெயர்களை. உண்மைதான். பாகப்பிரிவினை, பாலும் பழமும், பார்த்தால் பசிதீரும், பாசமலர், பாவ மன்னிப்பு, பச்சை விளக்கு.. பெயரைச் சொன்னாலே போதும், படம் நம் மனதில் ஓட ஆரம்பித்து விடும்.
கேமராவுக்கு ஒரு கண்ணனையும் எடிட்டிங்குக்கு ஒரு லெனினையும் நமக்குத் தந்திருக்கிறார். ஜெயகாந்தனின் இரண்டு நாவல்களை திரைக்கு தந்தவர் படமாக்கிய மற்றொரு நாவல் மு.வ. அவர்களின் பெற்ற மனம்.
இவர் இயக்கிய பாலும் பழமும் படத்தை ஹிந்தியில் ஸ்ரீதர் இயக்கினார். இவர் இந்தியில் இயக்கிய மற்றவர்கள் இயக்கிய படங்கள் Aadmi (ஆலய மணி - கே சங்கர்), Nai Din Nai Raat (நவராத்திரி- ஏ.பி.நாகராஜன்), Gopi (முரடன் முத்து-பி.ஆர்.பந்துலு), Phooja Ke Phool (குமுதம்-ஏ.சுப்பாராவ்)
வேறு புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது, ஜனங்களின் மனதை கவர்ந்தவர், ஜனங்களின் மனதில் இருப்பவர் பற்றி? எல்லாம் அறிந்ததே.

Tuesday, October 14, 2025

சினிமாவின் தந்தை...


சினிமாவின் தந்தை பிறந்த நாள் இன்று...
எடிசனை எட்டிப் பார்க்காதீர்கள். இவர் அவருக்கும் முன்னோடி. சுழலும் தட்டுகளில் துவாரங்களை வரிசையாக இட்டு, அதன் பின்னாடி படிப்படியான அசைவுகளின் படங்களை சுழலவைத்து கண்ணின் தோற்ற மாயையின் லாபத்தை ... அதாவது சினிமாவின் வித்தை(யை) முதல் முதலாகக் காட்டியவர். அந்த ஆதி அனிமேஷனுக்கு (1832) அவரிட்ட பேர் ஃபினாகிஸ்டிஸ்கோப்!
2019 இதே நாளில் கூகிளின் டூடில் பார்த்திருப்பீர்கள். அது இவரை சிறப்பிக்கவே!
Joseph Plateau...

Monday, October 13, 2025

தயங்கித் தயங்கி...


நடிப்பதில் அவருக்கு துளி ஆர்வம் இல்லை. ஸ்டூடியோ லேபரட்டரியில் அசிஸ்டன்டாக தான்பாட்டுக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவரை பிடித்து தள்ளாத குறையாக கேமரா முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். புக் செய்திருந்த ஹீரா நடிகருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால். நடிக்க வேண்டியதோ பிரபல நடிகை தேவிகா ராணியுடன். தயங்கித் தயங்கி நடித்து முடித்தவர் லேபரட்டரியில் வந்து ரஷ் பார்த்தபோது அவருக்கே ஆச்சரியம்! அட, நன்றாகவே நடித்திருக்கிறோமே? அவருடனேயே அடுத்த படம் நடித்தபோது அந்த ‘அச்சுத் கன்யா’ உச்சத்துக்குக் கொண்டு போனது அவரை.
அசோக் குமார்… இன்று பிறந்த நாள்!
தாதா மோனி (சகோதர ரத்தினம்) என்று அன்போடு அழைக்கப்பட்டவர். இயல்பாக நடிக்கும் வெகு சில நடிகர்களில் ஒருவர்.
அவருக்கு நீங்கள் எந்த பட்டம் கொடுக்க நினைத்தாலும் அது பொருந்தும். பெஸ்ட் ஹீரோ... பெஸ்ட் வில்லன்... பெஸ்ட் ஃபாதர் காரக்டர்.... பெஸ்ட் காமெடி நடிகர்....
மள மளவென்று தேவிகா ராணியுடன் பல படங்கள்... அடுத்து லீலா சிட்னிஸுடன் வரிசையாக… மீனா குமாரியுடன் பதினேழு... நளினி ஜெய்வந்துடன் நாலைந்து... 1940 களின் அசைக்க முடியாத நாயகனாக.
நாயகன் இமேஜை உடைத்து ஆன்டி ஹீரோவாக முதலில் கலக்கியதும் அசோக் குமார்தான்.... படம்: ‘Kismet’. கண்ட அபார வெற்றியில் அது தெலுங்கிலும் தமிழிலும் (பிரேம பாசம்) ரீமேக்.. அடுத்து வந்த ‘Mahal’ சூபர் ஹிட் சஸ்பென்ஸ் படம்.. “Aayega.. Aanewala..” பாடலைப் பாடி லதா மிகப் பிரபலமானது இந்தப்படத்தில் தான்.
பிச்சுவாப் பக்கிரி ஷேக் முக்தார், ஜெயிலில் இருந்து தப்பிய பிரதீப் குமாருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது பின்னால் சத்தமில்லாமல் வேவு பார்த்துக் கொண்டிருப்பார் அசோக் குமார். சி.ஐ.டி என்று நினைக்கும்போது சீஃப் வில்லனாக வெளிப்பட்டு நம்மைத் திகைக்க வைப்பார் ‘Ustadon Ki Udtad’ படத்தில். (‘வல்லவனுக்கு வல்லவன்’)
‘பாசமலர்’ ஹிந்தியில் ‘ராக்கி'யான போது சிவாஜி ரோலில் இவர். கிடைத்தது Filmfare அவார்ட். ‘க்ரஹஸ்தி' தமிழில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ ஆனபோது இவர் ரோலில் சிவாஜி.
‘நானும் ஒரு பெண்’ இந்தியில் (‘Main Hun Ladkhi’) ரங்கராவ் ரோலை அதே கனிவுடன் அழகாக பண்ணியிருப்பார். இவரின் மாஸ்டர்பீஸ் ‘Jewel Thief’ பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
‘Mamta’ ‘Intaqaum’ ‘Kanoon’ ‘Bhai Bhai’ ‘Chitralekha’ ‘Bheegi Raat’....மறக்க முடியாத படங்கள். மறக்க முடியாத நடிப்பு.
இவர் ஊக்குவித்து பின்னால் மிகப் பிரபலமானவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள். ஷக்தி சமந்தா. இயக்கிய ‘Howrah Bridge’ அசோக் குமாரை ஸ்டைலிஷ் ஹீரோவாக்கியது. 2. பி.ஆர்.சோப்ரா. இவரை இயக்கிய ‘Gumrah’ அமோகமான பெயரை வாங்கித் தந்தது. 3.ரிஷிகேஷ் முகர்ஜி. இவரை இயக்கிய ‘Ashirvad’ படத்தில்தான் நேஷனல் அவார்டு கிடைத்தது இவருக்கு. (அதில் இவர் பாடிய ‘Rail Gadi...’ தான் திரையுலகின் முதல் rap song!)
பாம்பே டாக்கீஸ் தயாரிப்பாளர்களில் இவரும் இருந்த போது இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் தேவ் ஆனந்த். படம் ’Ziddi’ அதே படத்தில் அறிமுகமான மற்றொரு பிரபலர் பிரான்.
1987 -லிருந்து தன் பிறந்த நாளை கொண்டாடுவதை நிறுத்திவிட்டார். தம்பி கிஷோரின் மறைவு நாளாக அது ஆனதால்.
ஹோமியோபதி படித்திருந்த இவர், நோயுற்று காலை எடுக்கவிருந்த ஓர் இளம் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாராம்.
பலரின் ஃபேவரிட் ஆக சிலர் இருப்பார்கள். இவர் எவ்ரி ஒன்ஸ் ஃபேவரிட்!

Saturday, October 11, 2025

ஔவையார் என்றதும்...


வழி தவறி வந்த சிறுமியை குழந்தை பாக்கியம் இல்லாத செல்வத் தம்பதி எடுத்து வளர்க்கிறார்கள். பிள்ளையார் பக்தையாக வளரும் அந்தப் பெண், வேண்டாத திருமண வாழ்விலிருந்து தப்பிக்க வேண்டுகிறாள் பிள்ளையாரை. முதியவளாக மாறிவிடுகிறாள். அவ்வையார். ஜெமினியின் பிரமாண்ட தயாரிப்பு. நடித்தவர்? கட்டபொம்மன் என்றதும் சிவாஜி நினைவு வருவது போல ஔவையார் என்றதும் இவர்.
கே.பி.சுந்தராம்பாள்… இன்று பிறந்த நாள்!
தாராளமாகச் சொல்லலாம், தமிழ்த் திரையுலகின் முதல் கிரேட் ஸ்டார் என்று. ஆம், 1935-இலேயே ஒரு லட்சம் வாங்கிய நட்சத்திரம்.(பக்த நந்தனார்)
‘வாழ்க்கை என்னும் ஓடத்தி’ல் நம்மை அழைத்துச் சென்றவர் (பூம்புகார்). ‘ஞானப்பழத்தை’ மொழிந்து தந்தவர் ( திருவிளையாடல்). ‘காலத்தில் அழியாத’ பாடல்கள் தந்தவர் (மகாகவி காளிதாஸ்). ‘கேள்விகள் ஆயிரம்’ பாப்பாவை கேட்கச் செய்தவர் (உயிர் மேல் ஆசை). ‘வாசி வாசி என்று’ தமிழ் வாசித்தவர் (திருவிளையாடல்). ‘எங்கேயும் சக்தி உண்டு’ என்று காட்டியவர் (சக்தி லீலை) ‘கூப்பிட்ட குரலுக்கு’ யார் வராதது? ( துணைவன்)
அந்த கம்பீரக் குரலை கேட்டதும் நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும்... அந்த கணீர்க் குரல் காதில் விழுந்ததும் பரவசம் பொங்கும்... அந்தப் பாசக் குரலில் மனம் அப்படியே இளகும்.
ஆரம்பத்தில் டிராமா ட்ரூப்பில் இருந்தபோது, தரப்பட்ட ஆண் வேடங்களையும் ஏற்று நடித்தார். ஒரு மைல் தூரம் கேட்கும் அவர் பாடினால் என்பார் நடிகர் சாரங்கபாணி.
செம பாராட்டில் இருந்தபோது சம புகழில் இருந்தவர் S.G.கிட்டப்பா. ரெண்டு பேரையுமே வேண்டியவர்கள் எச்சரித்தார்கள் அவருடன் பாடினால் உங்கள் பாட்டு எடுபடாது என்று. காதில் போட்டுக் கொண்டால் தானே? கொழும்பில் சந்தித்தபோது நேராக அவரிடமே கேட்டு விட்டார் கிட்டப்பா, ரிகர்சல் ஆரம்பிக்கலாமா என்று. சேர்ந்து பாடிய மேடைகள் கைதட்டலில் மூழ்கின. ‘வள்ளி திருமணம்’ படத்தில் சேர்ந்து நடிக்க, அது அவர்கள் திருமணத்தில் முடிந்தது. எதிர்பாராத கிட்டப்பாவின் 27 வயது மரணம்! மீண்டும் தனிமையில் அவர்.
எப்போதும் கதர் அணியும் இவர், 750 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். ஆறு மணி நேர கச்சேரி எல்லாம் அவருக்கு சாதாரணம்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான நேஷனல் அவார்டு, துணைவன் படத்துக்காக 1969 இல். M.L.C. ஆக பதவி பெற்றது 1951 இல். அவ்வகையில் கலைஞர்களில் முதலாமவர்.

கானாவுக்கெல்லாம் கானா..


கானாவுக்கு எல்லாம் கானா… அது இதானா?
“ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன் மேலே…
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே.."
படகில் எல்லாரும் அமர்ந்திருக்க படகோட்டியபடியே S S ராஜேந்திரன் பாடுவதாக… படம்: ‘தை பிறந்தால் வழி பிறக்கும்.’
அலைமேல் நாம் மிதப்பதுபோல் ராகம்! இதாண்டா கானா என்று இசையமைத்த K V மகாதேவனை எப்படி வியப்பதெனத் தெரியலே! நம் ஆசைப் படகை அத்தனை ஒய்யாரமாக ஓட்டிச் செல்லும் ட்யூன்! அந்த ஓங்கார வயலின் இடையிசை கூட அலைகளைப்போல் ஆர்ப்பரிக்கும்.
திருச்சி லோகநாதன் என்றதுமே நினைவுக்கு முதலில் வரும் பாடல்.
அவருக்காகவே அமைந்ததா என பொருந்திப் போகும் அவர் குரல் பாடலோடு. டைட்டில் வரியில் வரும் நாலு ‘லே’யையும் அவர் உச்சரிக்கும் ஸ்டைலையே நாலு வாட்டி கேட்கலாம்.
கண்ணதாசனின் வண்ண வரிகளுக்கு சாம்பிள்:
“வாழ்வில் துன்பம் வரவு.. சுகம் செலவு.. இருப்பது கனவு…”
“வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததேன்? வடிவம் மட்டும் வாழ்வதேன்?”
பல்லவி யோடு சேர்ந்து வந்து சேரும் ஒவ்வொரு சரணக் கடைசி வரியும் தத்துவமாய் விரியும். ("காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்..")
இப்ப வர்ற ஓலங்களைப் போல அல்லாமல் கம்பீரமான ஒரு கானாப் பாடல்!

Friday, October 10, 2025

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...


“பிருந்தாவனமும் நந்தகுமாரனும்.. யாவருக்கும் பொது செல்வமன்றோ?”
பாடலுக்கு அவர் அமைத்த இசையும் அப்படியே! தமிழ் தெலுங்கு இந்தி மூன்றுக்கும் சொந்தமானது. எல்லோர் மனதுக்கும் பந்தமானது. இன்றைக்கும் மிஸ் பண்ணாமல் கேட்கும் ‘மிஸ்ஸியம்மா’ படப் பாடல்.
எஸ். ராஜேஸ்வர ராவ்.. தென்னிந்திய திரை உலகில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர்.. இன்று பிறந்த நாள்!
“தெரிந்து கொள்ளணும் பெண்ணே… அதைப்போல், நடந்து கொள்ளணும் பெண்ணே…” என்று சாவித்திரி பாட, “பழகத் தெரிய வேணும்.. உலகில், பார்த்து நடக்க வேணும்..” என்று ஜெமினி பாட அந்தப் படமே ஒரு இசை விருந்து. “எல்லாம் உனக்கே தருவேனே, இனிமேல் உரிமை நீ தானே..” என்ற ஏ எம் ராஜா பாடும்போது மயங்காதார் யார்? கடைசியில் வரும் “மாயமே நான் அறியேன்..” அற்புதமான மெலடி.
அதில் வரும் ‘வாராயோ வெண்ணிலாவே…’தான் அவரது மாஸ்டர்பீஸ். பாடலும் சரி காட்சியும் சரி மறக்க முடியாதது. சரணத்தைப் பாடிவிட்டு ஜெமினி கணேசன் மறுபடி ‘வாராயோ வெண்ணிலாவே…’ என்று பாட ஆரம்பிக்க அது பெண் குரலில் ஒலிக்க ஒரு விநாடி திகைத்து திரும்பிப் பார்த்து அங்கே சாவித்திரியும் பாடுவதைக் கண்டு நிறுத்துவது!
எத்தனை முறை கேட்டாலும் புதிதாகத் தெரியும், புத்துணர்ச்சியும் காதல் உணர்வும் அள்ளித் தெளிக்கும் அந்தப் பாடல்: “ஓஹோ வெண்ணிலாவே...விண்ணாளும் வெண்ணிலாவே…வீசும் தென்றலிலே.. கதை, பேசும் வெண்ணிலவே..” ஜெமினி, சாவித்திரி ‘பிரேம பாசம்’ படத்தில் நடிக்கும் அந்த கண்டசாலா, லீலா பாடல் ஒலிக்காத திசையில்லை.
“எங்கிருந்து வீசுதோ.. இனிதாகவே தென்றல்..” என வீசிய ‘கடன் வாங்கி கல்யாணம்’ படப்பாடல். இந்தப் படத்தில்தான் ஜாலியான அந்த “கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே..” இசையில் ஜாலம் செய்த, “போதும் உந்தன் ஜாலமே..”
‘அவர் யார்?’ என்று கேட்க வைத்த, மயக்கும் குரல் கொண்ட ரகுநாத் பாணிகிரஹி தமிழில் பாடிய அந்த இரண்டே பாடல் ‘அவள் யார்?’ படத்தில் இவர் இசையமைத்தவைதான். (“நான் தேடும் போது.. நீ ஓடலாமோ?” “கண் காணும் மின்னல் தானோ?”)
1976 இல் கே எஸ் கோபாலகிருஷ்ணன் ‘தசாவதாரம்’ எடுத்தபோது இவர்தான் இசையமைத்தார்.
“சேலாடும் நீரோடை மீதே... தேனின்பப் பண் பாடுவோமே..” என்ற கண்ணதாசன் பாடல் ராஜா சுசீலாவின் குரலில் வந்தது. ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’
பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஆரம்பத் தமிழ்ப் பாடல்களில் ஒன்றான, அவரை பிரபலப்படுத்திய “அவனல்லால் புவி மேலே அணுவும் அசையாது…” இவரது ‘பிரேம பாசம்’ படத்தின் பாடல்.
எல்லா வகை வாத்தியங்களும் வாசிக்கத் தெரிந்த இவர் எல்லா வகை பாடல்களும் இசையமைக்கத் தெரிந்தவர். “காப்பியிலே பல் தேய்க்கிறார்... மாப்பிள்ளை டோய்..” அந்தக் காமெடி பாடல் ‘மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் வருவது.

முதல் ‘பேசும்’ படம்...


1931. அந்த நடிகையின் முதல் ‘பேசும்’ படம் அது. ‘The Sin of Madelon Claudet.’ பிரிவ்யூ போட்டு பார்த்ததில் உதட்டைப் பிதுக்கினார்களாம். ஸ்கிரிப்டை ரிப்பேர் பார்த்தாயிற்று. காட்சிகளை மாற்றி எடுக்கலாமென இறங்கினார்கள். ஆனால் அடுத்த படத்தில் அவர் நடிக்க கமிட் ஆகிவிட்டது. இடையிடையே வந்து நடித்துக் கொடுக்க அவர்கள் சம்மதிக்கவில்லை. சோரவில்லை. அதை முடித்துவிட்டு வந்து இதில் நடித்தார். அந்த வருட ஆஸ்காரை வாங்கினார்.
Helen Hayes... இன்று பிறந்தநாள். (1900 - 93)
30, 40 களின் பிரபல நடிகை... திரையிலும் மேடையிலும்! நடித்த நாடகம் ஒன்று (Victoria Regina) தொடர்ந்து மூன்று வருடம் நடந்தது. Tony, Emmy, Grammy, Oscar என்று எல்லா அவார்டுகளையும் வாங்கிக்கொண்டவர்.
நடித்த மற்றொரு படம் ஹெமிங்வேயின் ‘A Farewell to Arms.’ மிகப் பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட நாவல். சுகம், துக்கம் இரு முடிவுகளும் வைத்து எடுக்கப்பட்டு ஊருக்கு தகுந்த மாதிரி திரையிட்டார்கள்.
அடுத்த ஆஸ்காரை 38 ஆண்டுகளுக்குப் பின் 'Airport' படத்துக்காக வாங்கினார், சிறந்த துணை நடிகையாக. அகதா கிறிஸ்டியின் மிஸ் மார்பிளாக நடித்தது 1985 இல் டி.வி.க்காக. (Murder with Mirrors)
1993 மார்ச் 17.. இரவு 8 மணிக்கு பிராட்வேயின் விளக்குகள் ஒரு நிமிடம் மங்கி மிளிர்ந்தனவாம், இவர் மறைவிற்கு அஞ்சலியாக.
Quotes? ‘நான் தேடும் சிந்தனைகளை புத்தகங்கள் அளிக்கின்றன. மருந்தும் பலமும் தருகின்றன. தைரியம் என்னை விட்டு நழுவும் போதெல்லாம் அவற்றைத் தேடிப் போகிறேன். அவை எனக்கு, ஏற்றுக்கொள்ளும் விவேகத்தையும் முயற்சியையும் மன விசாலத்தையும் கொடுக்கின்றன.’
‘பெற்றோரிடமிருந்து அன்பையும் சிரிப்பையும் எப்படி ஒவ்வொரு அடியாக முன்வைத்து போவது என்பதையும் கற்றுக் கொள்கிறோம் ஆனால் புத்தகங்களை திறக்கும்போது உங்களுக்கு சிறகுகள் இருப்பதைக் கண்டு பிடிக்கிறீர்கள்.'
‘10 இலிருந்து 70 வரைதான் வாழ்க்கையில் கஷ்டமான வருடங்கள்.’
‘ஓய்வெடுத்தால் துருப் பிடித்துப் போய்விடுவீர்கள்.’
‘நம்முடைய ஹீரோக்களைப் பற்றி பேசி மகிழ்கிறோம், நாமும் யாரோ ஒருவருக்கு விசேஷமானவர்தான் என்பதை மறந்து.’

Saturday, October 4, 2025

வானத்துக்கு உயர்த்தி...


பாரமவுண்ட் ஸ்டுடியோவுக்குள் நுழைந்த அந்த புதிய நடிகர், பிரபல சிஸில் பி டிமிலி நிற்பதைப் பார்த்து கைகளை ஆட்டி தெரிவித்த வணக்கத்தில் கவரப்பட்டவர் இவரைப் பற்றி விசாரித்தார். ஹீரோவாக நடித்து ஒரு படம் வெளிவந்திருந்தது. (‘Dark City’) அதைப் பார்த்துவிட்டு தன் ‘The Greatest Show on Earth’ -இல் முக்கிய ரோல் கொடுத்தார். பிரபலமானார் நடிகர்.
அதையடுத்து டிமிலி கொடுத்த வாய்ப்புத்தான் பிரபல ‘Ten Commandments’ படத்தில் மோசஸ். மைக்கலாஞ்சலோ வடித்த மோசஸ் சிலையை இவர் உருவம் ஒத்து இருந்ததால் மோசஸ் வேடத்துக்கு இவரைத் தேர்வு செய்தாராம் டிமிலி. (அவர் முதலில் ஒருமுறை ‘Ten Commandnents’ தயாரித்த 1923 இல் தான் பிறந்தார் இவர் என்பது வினோத ஒற்றுமை)
வானத்துக்கு உயர்த்திற்று படம். 'டன் டன் ஆக' புகழ் சம்பாதித்தார் சார்ல் டன் ஹெஸ் டன்.
Charlton Heston… இன்று பிறந்த நாள்..
புகழ் பெற்றபின் ‘Big Country’ படத்தில் கிரிகரி பெக்குடன் வில்லனாக நடிக்க வந்தது வாய்ப்பு. தயங்கினார். ஆனால் William Wyler டைரக் ஷன் ஆயிற்றே? நடித்தார். அடுத்து வைலர் பிரம்மாண்ட ‘Ben-Hur’-ஐ இயக்க, அதில் பென் ஹர் ஆனார். பதினோரு ஆஸ்கார் பெற்ற அந்தப்படத்திற்காக தன் ஒரே ஆஸ்காரை வாங்கினார்.
பிரம்மாண்ட சரித்திர படங்களின் தவிர்க்க முடியாத நாயகர் ஆனார். ‘The Greatest Story Ever Told', 'Khartoum', 'Major Dundee' என்று வரிசையாக… சோபியா லாரனுடன் ‘Elcid’. அவா கார்ட்னருடன் ‘55 Days at Peking’.
சரித்திரப் படங்களின் நடிப்பதற்கு முன் தன் ரோல் பற்றி அலசிப் படித்து ஆராய்ந்து விடுவார். ‘Major Dundee’ -ல் சில காட்சிகளை மீண்டும் படமாக்கச் சொல்லி தன் முழு சம்பளத்தையும் கொடுத்தாராம்.
‘பென் ஹரி’ல் அந்த புகழ் பெற்ற சேரியட் ரேஸ் காட்சிக்காக மூன்று மாதம் ரதம் ஓட்டக் கற்றுக் கொண்டார். 15000 துணை நடிகர்களுடன் 5 வாரம் படமாக்கப்பட்டது அந்தக் காட்சி. 263 -இல் ஒரு பங்குதான் ஃபைனல் கட்.
பின்னர் ஹெஸ்டன், மைக்கலாஞ்சலோ ஆகவும் நடித்தார். அந்தப் படம் தான் ‘The Agony and the Ecstasy’. ஆம், Rex Harrison -ம் இவரும் கதையிலும் நடிப்பிலும் போட்டி போட்டுக் கொண்டு நடித்த படம்.
வழிதவறிய விண்கலத்தில் வந்திறங்கிய கிரகத்தில் விழித்தெழும் அவர்கள் காணும் காட்சி! மனிதர்கள் பின்தங்கியிருக்க, மனிதக் குரங்குகள் ஆட்சிசெலுத்துகின்றன. ‘Planet of the Apes’ இவருடைய ஆக்ரோஷமான நடிப்பை அதில் பார்க்கலாம்.
Arnold Schwarzenegger -ன் அந்த அசத்தல் காமெடி அட்வெஞ்சர் ‘True Lies’ இல் அவரது பாஸ் ஆக வருவார்.
ரெண்டாம் உலகப் போரில் ராணுவத்தில் ரெண்டு வருடம்.. மனைவி லிடியா. அடுத்த குழந்தை பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த தம்பதிகள் முதலில் மகன் பிறந்ததும் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டார்கள். மனைவியும் அவரும் கேன்சரில் இருந்து மீண்டவர்கள்.
Empire பத்திரிகையின் Top 100 Movie Stars of All Time லிஸ்டில் 28வது இடம் 1997 இல். Presidential Medal of Freedom பெற்றது 2003இல்.
பின்னால் ‘In the Arena’ என்று சுயசரிதை எழுதியபோது டிமிலி தந்ததே என் திரை வாழ்வு என்று குறிப்பிட மறக்கவில்லை. தயங்காமல் சொல்வார் ‘Ten Commandments’-ல் தன்னைவிட யூல் பிரைனர் நன்றாக நடித்து இருந்ததாக.
ஹெஸ்டன் நடித்த The Earthquake' படம் சற்றே விசேஷம்: தியேட்டரில் Low Bass ஸ்பீக்கர்கள் பொருத்தி பூகம்பத்தின் போது பூமி குமுறுவதை ஆடியன்ஸ் உணர வைக்கிற Sensoround சிஸ்டத்தில் வெளிவந்தது.

ஓர் புதிய உலகை...


1994 -இல் பிரபல நாவலான ‘Little Women’ படமாக வந்தபோது அந்த நான்கு சகோதரிகளின் அம்மாவாக நடித்தவர் எல்லோருடைய மனங்களையும் அள்ளிக் கொண்டார்.
கணவர் சிவில் யுத்தத்திற்கு சென்றுவிட, தன் நான்கு பெண்களையும் கவனித்து வளர்க்க வேண்டிய பொறுப்பு மாமி என்று அழைக்கப்பட்ட அவளுக்கு. அதை எத்தனை அழகாய், தன் உறுதியான மனதுடன் நிறைவேற்றுகிறார்!
எழுத்தாளராகத் துடிக்கும் தன் மகள் ஜோவை தனியே வெளியூர் அனுப்ப முடிவு செய்தபோது ‘நீ இல்லாமல் நான் எப்படி சமாளிப்பேன்னு தெரியலே. ஆனா நீ போ. உன் திறமையை உபயோகி. சுதந்திரத்தை தழுவு. அப்புறம் பார் எத்தனை அற்புதம் நடக்குதுன்னு!’ என்று சொல்லும் போதும்...
மகள் Meg காதலை மற்ற சகோதரிகள் எதிர்த்த போது, ‘என் மகள் செல்வத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து சுயகௌரவத்தை இழப்பதை விட காதலுக்கு மதிப்பு கொடுத்து ஒரு ஏழையை மணப்பதையே நான் விரும்புகிறேன்,’ என்று தட்டிக் கொடுக்கும் போதும் Louisa May Alcott தன் நாவலில் உருவகித்த தாயை நம் கண்முன் கொண்டு வந்து விடுகிறார்.
Susan Sarandon… இன்று பிறந்த நாள்.
கணவனும் மனைவியுமாக ஆடிஷன் சென்றபோது மனைவிக்கு வாய்ப்புக் கிடைக்க, நடிகையானவருக்கு கிடைத்த ஆஸ்கார் நாமினேஷன் நாலு. அவார்ட் கிடைத்தது, தூக்குத் தண்டனைக் கைதி ஒருவனுக்காக அவன் தண்டனையைக் குறைக்கப் போராடும் பெண் துறவியாக நடித்திருந்த ‘Dead Man Walking’ படத்துக்கு.
‘Stepmom’ படத்தில் இவருக்கு சரியான போட்டி Julia Roberts. டிவோர்ஸுக்குப் பின் குழந்தைகள் தன் கணவனின் ரெண்டாவது மனைவியுடன் ஒட்டிக் கொள்ளவில்லையே என்று கவலையும் எரிச்சலும் படும் அன்னையாக ஒரு திடமான நடிப்பை வழங்கியிருந்தார்.
Richard Gere யுடன் நடித்த ‘Shall We Dance?’ படத்திலும் கைதட்டல் நடிப்பை வழங்கினார். வாழ்க்கை போரடிக்குது என்று டான்ஸ் கற்றுக்கொள்ள சென்ற ரிச்சர்ட் அழகிய ஆசிரியை ஜெனிஃபர் லோபஸுடன் ஆட்டம் போடும் போது அதை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், இறுதியில் ரிச்சர்ட், ‘என் பார்ட்னர் இருப்பது இங்கே தான்!’ என்று தன்னிடம் நன்றி சொல்லும் போது காட்டும் பரவசமும்!
அந்தக் காட்சி! கணவனைத் துப்பறிய அனுப்பிய ஆளிடம் அவள் சொல்கிறாள், போதும், வேண்டாம் என்று. “நம்ம வாழ்க்கைக்கு ஒரு சாட்சி வேணும். கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகத்திலே. அதில ஒருத்தரோட வாழ்க்கை என்ன கவனம் பெறுது? கல்யாணம் செய்யும்போது நாம் உறுதிமொழி எடுக்கிறோம், எல்லாத்தையும் கவனிக்கிறதா. அவரோட நல்லது, கெட்டது, விசித்திரமானது, வித்தியாசமானது எல்லாத்தையும்! எல்லா நேரமும்! நீங்க அப்ப அவர்ட்ட சொல்றீங்க, உங்க வாழ்க்கை கவனிக்கப்படாது போகாது, ஏன்னா நான் அதைக் கவனிக்கிறேன்னு. உங்க வாழ்க்கைக்கு சாட்சியில்லாம போகாது, ஏன்னா நான் அதுக்கு சாட்சியா இருப்பேன்னு!"
2006 ஒலிம்பிக்கில் சோபியா லாரனுடன் கொடியேந்தி நடந்த இவர் Robert Redford உடன் கை கோர்த்தது ‘The Great Waldo Pepper’ படத்தில். Marlon Brando வுடன் ‘A Dry White Season’
சொன்னது: ‘எப்படி நடித்தாலும் நாம் திருப்தி அடையமாட்டோம். அதுதான் நான் நடிகையாக நீடிக்க ஒரே காரணம்.’
‘குழந்தைகள் உங்களுக்கு ஓர் புதிய உலகை சிருஷ்டிக்கின்றன.’

Thursday, October 2, 2025

திரை உயர்ந்திருந்தது...


ஏன் உங்களுக்கு அந்த நாடகம் பிடிக்கவில்லை?’ என்று கேட்டபோது அவர் சொன்னார்.
‘அதுவா? அதை நான் பார்த்த சந்தர்ப்பம் அப்படி! திரை உயர்ந்திருந்தது!’
Quick Retort-க்குப் பேர் போனவர்கள் பலர் இருந்தாலும் ‘நச் பதில் நாயகர்’ என்ற பட்டம் சிலருக்கே உண்டு. அதில் பிரபலமானவர் இவர்.
Groucho Marx.. இன்று பிறந்த நாள். (1890 - 1977)
‘படிப்புக்கு டி.வி. மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை யாராவது அதை போடும் போதும் நான் பக்கத்து அறைக்கு போய் விடுகிறேன், புத்தகம் படிக்க.’ - இவர் சொன்னது.
அமெரிக்காவின் தலை சிறந்த நகைச்சுவையாளர் என்று இவரைக் குறிப்பிட்டவர் பிரபல காமெடி நடிகர் Woody Allen.
‘You Bet Your Life’ என்ற இவர் நடத்திய ஷோ டிவி.யிலும் ரேடியோவிலும் மகா பாப்புலர்.
அள்ளித் தெளித்த காமிக் பஞ்ச் அனேகம். சிரிக்க மட்டும் இதோ சில…
‘ஒரு கருப்பு பூனை உங்கள் பாதையில் குறுக்கே செல்வது எதை குறிக்கிறது என்றால் அந்தப் பூனை எங்கோ போய்க்கொண்டிருக்கிறது என்பதை.’
‘அவளுடைய அழகிய முகம் அவள் தன் தந்தையிடம் இருந்து பெற்றது. ...அவர் ஒரு பிளாஸ்டிக் சர்ஜன்.’
‘நான் சாகாமல் என்றும் வாழ விரும்புகிறேன். ...அந்த முயற்சியில் செத்தாலும் சரி.’
‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். ...அவளுக்குப் பின்னால் அவன் மனைவி இருக்கிறாள்.’
‘என்னைப் போன்றவர்களை மெம்பராக ஏற்றுக் கொள்ளும் எந்த கிளப்பிலும் இருக்க நான் விரும்பவில்லை.’
‘ஒருவன் நேர்மையானவனா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. அவனையே கேளுங்கள். அவன் ஆமாம் என்றால் அவன் ஒரு மோசமான பேர்வழி.’
‘நான் சொல்கிற இந்த கதையை ஏற்கனவே கேட்டிருந்தால் என்னை நிறுத்தாதீர்கள், ஏன்னா நான் இன்னொரு முறை அதை கேட்க விரும்புகிறேன்.’
‘ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து நான் ரொம்பப் பாடுபட்டு மிக ஏழ்மை என்ற நிலைக்கு வந்திருக்கிறேன்.’
‘இதெல்லாம் என் கொள்கைகள். உங்களுக்கு அவற்றைப் பிடிக்கவில்லையானால் சொல்லுங்கள், வேறு சில இருக்கிறது என்னிடம்.’
‘விவாகரத்து நடப்பதற்கு முக்கிய காரணம் விவாகம்.’
‘ஒருவன் தன் விதியை தானே நிர்ணயிப்பதில்லை. அவன் வாழ்வில் வரும் பெண்கள் அவனுக்காக அதை செய்கிறார்கள்.’
‘அவன் பார்க்கிறதுக்கு முட்டாள் மாதிரி இருக்கலாம், முட்டாள் மாதிரி பேசலாம், அதை வெச்சு ஏமாந்திராதீங்க. அவன் நிஜமாவே முட்டாள்தான்.’

Tuesday, September 30, 2025

ஒருவரே... அவரே!

1.தர்மேந்திரா நடித்ததில் உங்களால் மறக்க முடியாத படம் எது என்றால் ‘Satyakam' (தமிழில் 'புன்னகை') -ஐச் சொல்லத் தயங்க மாட்டீர்கள்.
2.ஜெயா பாதுரி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது 'Guddi'தான்.
3.ராஜேஷ் கன்னாவின் 'Anand’! ஆரால் மறக்க முடியும்?
4.அமிதாப் பச்சனின் பேர் சொல்லும் படங்களில் 'Abhiman' தவறாமல் இருக்கும்.
5.அமோல் பலேகரின் அட்டகாச காமெடி படம் என்றால் அது 'Gol Maal'(தமிழில் 'தில்லு முல்லு').
6.ராஜ் கபூர், நூடன் ஜோடியாக நடித்ததில் முதலில் நிற்பது ‘Anari’.
7.ரேகாவின் stellar performance -ஐ பார்த்து நாம் வியந்தது ‘Khubsoorat’ -இல்.
8.சஞ்சீவ் குமாரின் மிக முக்கியமான படங்களில் ஒன்று ‘Arjun Pandit.’
9.அசோக் குமார் அமர்க்களமாக நடித்து தானே ஒரு பாடலும் பாடிய படம் ‘Aashirvad.’
10.அமிதாப்பும் தர்மேந்திராவும் சேர்ந்து படம் முழுக்க காமெடியில் கலக்கிய படம் ’Chupke Chupke’
என்னன்னா... இந்த 10 படங்களையும் டைரக்ட் செய்தவர் ஒருவரே. எடிட்டிங்கும் அவரே!
யார்?
Hrishikesh Mukherjee!
இன்று பிறந்த நாள். (1922- 2006)