Monday, December 8, 2025

அன்பும் சிரிப்பும்...


‘Carpe diem.’ (‘இந்த நாளைக் கைப்பற்றிக் கொள்!’)
அந்தப் பிரபல வாசகம் இவருடையதுதான். கி. மு. காலத்து மாபெரும் ரோமாபுரியின் முன்னணி புலவர்களில் ஒருவர்.
Horace…. இன்று பிறந்தநாள்!
புலவர்களால் கொண்டாடப்பட்ட புலவர். செய்யுளுக்கு இவர் வகுத்த வடிவமும் விதிகளும் பின் வந்தவர்களால் பின்பற்றப்பட்டது.
அப்பாவே ஆயாவாக தன்னை பார்த்துக் கொண்டதில் தன் இளமை வளம் பெற்றது என்கிறார்.
சீசர் கொலை செய்யப்பட, யு டூ புகழ் புரூட்டஸின் ராணுவத்தில் ஆஃபீஸரானார். அடுத்த Philippi யுத்தத்தின் தோல்வியில் எல்லாம் இழந்து ஊரை விட்டுப் போக வேண்டியதாயிற்று. கருவூலத்தில் ஒரு வேலையை தேடிக்கொண்டு மனதில் கருவாகிய பாடல்களை எழுத ஆரம்பித்தது அப்போதுதான்.
அந்தப் போரில் ஜெயித்த அகஸ்டஸ் அளிக்க முன்வந்த அவரது உதவியாளர் பதவியை உதறிவிட்டார் நாசூக்காக. மணம் செய்து கொள்ளாமல் தானுண்டு தன் கவியுண்டு அதன் புகழ் உண்டு பழக நண்பர் உண்டு என்றானார்.
உதிர்த்த முத்துக்கள் ஏராளம். சில இதோ:
‘வளமான சமயங்களில் சோம்பிக் கிடக்கும் திறமைகளை வசமாக வெளிக்கொணர்வது நமக்கு நேரும் கஷ்ட காலம் தான்.’
‘நாளையை நம்பாதே. வாழ்வை முழுமையாக வாழ்ந்துவிடு. இருப்பதை வைத்து எத்தனை முடியுமோ அத்தனை செய்.’
‘தற்போதைய நிலையில் உற்சாகமாக இருக்கும் ஓர் மனம் எதிர்காலத்தின் கேள்விகளுக்கு செவி சாய்க்காமல், கசப்பான நிகழ்வுகளையும் சாந்தப் புன்னகையால் சமாளிக்கும்.’
‘மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பது திருப்தியான மனம்தான்.’
‘அன்பும் சிரிப்பும் இன்றி ஆனந்தம் இல்லை, அவற்றினிடையே வாழ்.’
‘மனதை ஆட்சி செய் அல்லது மனம் ஆட்சி செய்யும் உன்னை.’
‘புத்தகங்களிலிருந்து மட்டுமே பெறும் அறிவு விவேகம் ஆகாது.’
‘எல்லாக் கோணங்களிலிருந்தும் எதுவும் அழகாயிராது’
‘பாத்திரம் சுத்தமில்லையெனில் விடும் அனைத்தும் புளிக்கும்.’
‘நல்லதொரு பயம் ஓர் அறிவுரையை விட சக்தி வாய்ந்தது.’
‘சிலவேளைகளில் முட்டாள்கள் சொல்வதும் சரியாக இருப்பது வாழ்க்கையில் அறியவேண்டிய மிகப்பெரிய பாடம்.’
‘ஒரு விஷயத்தை தொடங்கிவிட்டால் பாதி முடித்த மாதிரி. தெரிந்து கொள். தொடங்கு.’
‘ஒரு மனிதன் தனக்கு எத்தனை மறுக்கிறானோ அத்தனை அவன் கடவுளிடமிருந்து பெறுகிறான்.’
‘வாசகனை பிடித்துக் கொண்டு விடுங்கள், மேற்கொண்டு இழுத்துச் செல்லாத மந்தமான தொடக்கத்தினால் அவன் நகர்ந்து விடாமல்.’
Last but not least..
'முக்கியமான திட்டங்களுடன் சற்றே முட்டாள் தனத்தையும் கலந்து கொள்ளுங்கள். தேவையான நேரம் அசடாக இருப்பதும் அழகுதான்.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!