Saturday, June 26, 2021

பொழிவில் ஓர் பொலிவு



‘ராஜா, அவசரப் படாதீங்க, நான் சொல்றதைக் கேளுங்க’ன்னு அலறியபடியே நாயகி ஓடோடிவ்ர, கேட்காமல் மலையுச்சியை நோக்கி ஏறும் பாக்யராஜ்… அட்டகாசமாக முடியும் அந்த 'டார்லிங் டார்லிங் டார்லிங்' க்ளைமாக்ஸ் காட்சியை நாம் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் கச்சிதமாக படமாக்கியிருப்பார் அந்த ஒளிப்பதிவாளர்.

அஷோக் குமார்… ஜூன் 25. பிறந்த நாள்!
'நெஞ்சத்தைக்' காமிராவால் 'கிள்ளியவர்'. “பருவமே... புதிய பாடல்…” பாடல் காதில் ஒலிக்கும் போதே அந்த பியூட்டிஃபுல் போட்டோகிராஃபி மனதில் ஒளிரும். மலர்களினூடே சூரியன் ‘மினுமினு’க்கும் ஆரம்ப ஷாட்டிலிருந்தே! மரங்கள் அடர்ந்த பனிச் சாலையில் காதலர்கள் ஜாகிங் பயில, வண்ணமும் ஒளியும், கிரணமும் நிழலும் திரையில் விளையாடும்.
பொலிவு என்று ஒரு சொல் உண்டு. எழில், அழகு என்பதற்கும் மேலே விரும்பப்படுவது. புலரும் பொழுதின் பொலிவை அந்த ஷாட்களில் இவர் பொழிவதை பொழுதுக்கும் ரசிக்கலாம்.
ஜானியின் ‘என் வானிலே..’ பாடலில் அந்த வான் - மேக இடைவெளிப் பிரகாசத்தில் பியானோ வாசித்துப் பாடும் ஸ்ரீதேவியும், ரசிக்கும் ரஜினியுமாக காட்சி என்ன அழகு!
பியூட்டி பார்லர் வேலை பார்க்க ரஜினி நடந்து போவதைத் தூரத்திலிருந்து வளைவாகக் காட்டுவதாகட்டும், பச்சை மரப் பின்னணியில் ரெட்டை ரஜினி ஒருவரையொருவர் புரட்டிப் புரட்டி எடுப்பதை கட் ஷாட்களில் மிரட்டியிருப்பதாகட்டும், தீபத் தட்டுகளின் மஞ்சள் வண்ணத்தை 'ஆசையைக் காத்துல..' பாடலில்
ஆடும் பெண்களின் முகங்களில் அழகுற எதிரொலிப்பதாகட்டும்… ‘ஜானி’ இவரது மாஸ்டர்பீஸ்.
எல்லாவற்றையும் விட ‘ஒரு இனிய மனது..’ பாடலில் ஸ்ரீதேவியின் profile -ஐ ஒளிக் கோடுகளால் மட்டும் வரைந்திருப்பார்! Scintillating!
இவரது ஒரு பாடல் காட்சியிலேயே ஏராளம் ஓவிய மாடல்கள் கிடைக்கும். காம்போசிஷன் கச்சிதமாக இருக்கும்.
‘மஞ்சள் வெயில்..’ (‘நண்டு') பாடலில் வாழையிலைகளினூடே குழந்தை சிரிக்க அர்ச்சனா பாடுவது இதமாக இருக்கும் என்றால் அமிழும் சூரியனின் செவ்வானப் பின்னணியில் கடலின் படகுகள் அழகாக அசைவது ‘அக்கரையில்லா எங்க வாழ்க்கையிலே..’ பாடலில் (‘கட்டுமரக்காரன்’) ரம்மியம்!
தம் கோணங்களால் நாம் நேராக உட்கார்ந்து படம் பார்க்க வைப்பவர். நீலம் இவரது ஃபேவரிட் போலும். அழகை நீளப்படுத்தியிருக்கும் அது.
உச்சமாக ‘கண்ணோடு காண்பதெல்லாம்..’ பாடலில் நாம் கண்ணோடு கண்டதெல்லாம் அவர் கலைத்திறனை சொல்லும். ஒன்று நிஜம் ஒன்று V. R. என்று ரெண்டு ஐஸ்வர்யாக்கள் ரெண்டு பிரசாந்த் பார்க்க அனாயாசமாக கிராஸ் பண்ணிச் சென்றபடியே ஆடும் பிரமிப்பு.
முதல் படம் மலையாள ‘ஜென்ம பூமி’யிலேயே ஸ்டேட் அவார்ட் வாங்கிய இந்த அலகபாத்காரர் பயின்றது அடையார் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில். அப்புறம் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு நேஷனல் அவார்ட்! டைரக்டர் மகேந்திரனின் ஆஸ்தான காமிராமேன் எனலாம்.
‘வெற்றி விழா’ ‘மெட்டி’ ‘காளி’ ‘முந்தானை முடிச்சு’ ‘உதிரிப்பூக்கள்’… முதல் 3D படத்துக்கும் (‘மை டியர் குட்டிச்சாத்தான்’) இவர்தான் ஒளிப்பதிவாளர்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான ஒளிப்பதிவாளர் குறித்த தகவல்கள் சிறப்பு. தொடரட்டும் உங்கள் தேடுதல்களும் பதிவுகளும்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!