Thursday, June 24, 2021

‘ஒரு நாள் போதுமா?’


சிலர் இருக்கிறாங்க. அவங்களை நாம சந்திச்சே இருக்க மாட்டோம். ஆனா நம்ம வாழ்க்கையில அவங்க வெகுவா ஊடுருவியிருப்பாங்க. இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு எடுத்துக்குவாங்க. உற்சாகத்தையும் ஆறுதலையும் அள்ளி வழங்கி இருப்பாங்க. ஆ, நீங்களே சொல்லிட்டீங்களே.. அவரு தாங்க. 

கண்ணதாசன்... இன்று பிறந்த நாள்!

‘அவரு எழுதின பாடல்கள்ல உங்களுக்குப் பிடிச்ச ஒரு பாடல் சொல்ல முடியுமா?’ன்னு கேளுங்க. தலையை சொறிவாங்க. சொல்றதுக்கு ஒண்ணு இருக்காது. உடனே மனசில ஓடறதிலேருந்து ஒரே ஒரு பாட்டை செலக்ட் பண்றதுக்குள்ளே முழி பிதுங்கிரும். யோசிக்க ‘ஒரு நாள் போதுமா?’


எந்தப் படமா இருக்கட்டும், கதையின் அடிநாதத்தை சில அடிகளில் தன் பாடலில் கொண்டு வந்து விடுவார். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி. படத்தின் ஒன் லைன் பாடலில்! 

"தூக்கி வளர்த்தவள் தாயென்றால் அதை

ஆக்கிக் கொடுத்தவள் பேரென்ன?

வாங்கிய தாய்க்கே மகனென்றால் அதைத்

தாங்கிய தாயின் உறவென்ன?"  

‘அன்னை’ படக்கதையை இதைவிடச் சுருக்கமாக எப்படி சொல்ல முடியும்?


வானம்பாடி படத்தின் சுருக் இதோ.... காதல் தோல்வியில் இருக்கும் கதாநாயகனுடன் (எஸ் எஸ் ராஜேந்திரன்) கவியரங்கத்தில் போட்டியிடுகிறாள் தோழி (தேவிகா)

‘காதலித்தாள், மறைந்து விட்டாள், வாழ்வு என்னாகும்?”

‘அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்.’

‘ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு.’

‘அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது.’

‘வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு?’

‘தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது.’


ஒன் லைனில் என்ன, சில சமயம் இரண்டொரு வார்த்தையிலேயே சொல்லிவிடுவார். படத்தின் கதையை. இதோ உதா.

“எங்கிருந்தாலும் வாழ்க..”

(’நெஞ்சில் ஒரு ஆலயம்’) காதலித்தவள் எங்கிருந்தாலும் அவள் வாழவேண்டுமென்று எண்ணி அவள் கணவனைக் காப்பாற்றுகிறான் தன் உயிரைவிட்டு.


நவரசமும் அபிநயம் பிடிக்கும் அவர் பாடல்களில்.. ‘பேசுவது கிளியா..’ என்று கொஞ்சும்! ‘வீடுவரை உறவு…’ என்று அஞ்சும்! 

பறக்க ஆரம்பித்துவிட்டால் போதும். நாம்'பாட்டு’க்கு பறந்து கொண்டேயிருக்கலாம் மனதில். கடைசி வார்த்தை வரைக்கும்!. "காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா..."

அள்ள அள்ள வந்து கொண்டே… ‘சொன்னாலும் வெட்கமடா.. சொல்லாவிட்டால் துக்கமடா… துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா…’ (முத்து மண்டபம்) ‘ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்.. அந்த ஒருவரிடம் தேடினேன், உள்ளத்தைக் கண்டேன்.. உள்ளமெங்கும் தேடினேன், உறவினைக் கண்டேன்.. அந்த உறவினிலே மூழ்கினேன் பிரிவினைக் கண்டேன்..’ (தேன் நிலவு)


இலக்கியத்துக்கும் சாதாரண ரசிகனுக்கும் இடையே உள்ள தூரத்தை யாராவது இத்தனை டெஸிமலுக்குக் குறைத்திருப்பார்களா என்றால் இல்லை. 

"நீரோடும் வைகையிலே..நின்றாடும் மீனே…" ('பார் மகளே பார்') பாடலில் ஒரு வரி.

"உன் ஒருமுகமும் திருமகளின் உள்ளமல்லவா...?"

"உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா..?"

ஒரு முகத்தின் வெள்ளம் என்றால்? நதியும் கடலும் சங்கமிக்கும் இடத்தை பொழி முகம் (Estuary) என்பார்கள். சங்க முகம் என்றும் சொல்வதுண்டு. அந்த முகம்! அதில் ஒன்றாய்ப் பாயும் இரு வெள்ளம்!

கவிதையிலும் ஓர் காவிய நயம்..


மதுரைவீரன், மன்னாதி மன்னன், மகாதேவி, மாலையிட்ட மங்கை, ரத்தத் திலகம் இல்லற ஜோதி, கவலை இல்லாத மனிதன் .. மனதில் தடம்பதித்த படங்களையும் எழுதினார்.

'மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி!' முதல் பிரபல பஞ்ச் டயலாக் அதுவே! அதுவும் வில்லனுக்கு! 

காலம் அவருக்கு எத்தனையோ பரிசுகளை வழங்கி இருக்கலாம் ஆனால் காலத்துக்கு அவர் வழங்கிய பரிசு அவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடக்கூடியது. ‘சிவகங்கைச் சீமை’ என்ற அவர் தயாரித்த படம். காலத்துக்கும் நிற்கும் காவியம்.


இந்த ஒரு பாட்டு போதுமே? அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும்!

“ஓஹோ ஓஹோ மனிதர்களே, ஓடுவதெங்கே சொல்லுங்கள்!

உண்மையை வாங்கி, பொய்களை விற்று, உருப்பட வாருங்கள்!

1

அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது

அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது

உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது

உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது.

காலம் போனால் திரும்புவதில்லை, காசுகள் உயிரை காப்பதும் இல்லை...

2

அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காற்றுக்கு நிற்காது

அழகாய் இருக்கும் காஞ்சிரை பழங்கள் சந்தையில் விற்காது

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது

விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது.

கண்ணை மூடும் பெருமைகளாலே தம்மை மறந்து வீரர்கள்போலே...

3

ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரம் ஆகாது

உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது

படிப்பதனாலே தெளிவுள்ள மனசு பாழ் பட்டுப் போகாது

பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது

காற்றைக் கையில் பிடித்தவன் இல்லை, தூற்றித் தூற்றி வாழ்ந்தவரில்லை…”

('படித்தால் மட்டும் போதுமா?')

><><><


3 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு பாடலுமே சிறப்பு - இதில் எதைச் சொல்ல எதை விட...

கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாளில் சிறப்பான பதிவு.

ராமலக்ஷ்மி said...

அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

சிறப்பான பாடல்கள். கவிஞர் அவரின் பிறந்த நாள் தினத்திற்கு ஏற்ற பதிவு.

கீதா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!