Monday, June 21, 2021

எளிமையும் விவரமும்...


‘Panchayat.’ வெப் சிரீஸ்… (Amazon Prime)

அந்தக் குக் குக்கிராமத்துக்கு பஞ்சாயத்து செகரெட்டரியாக ஹீரோ வந்து சேரும்போது நம் மனதில் காதல், மோதல், காமெடின்னு பல ஒன்லைன்கள் உதிக்க, நடப்பது என்ன? எல்லாம் அமைதியாக, எல்லோரும் அவரவர் ஆக. இயல்பாக எழும் பிரசினைகள்! அழகாக வந்து விழும் முடிச்சுக்கள்! இழையோடும் நகைச்சுவை!
பல ஆயிரம் ‘ஒரே’ படங்களைப் பார்த்துப் பார்த்து ஃபார்முலாக்களை ஏற்றிவிட்டிருக்கிற மனது சற்றுத் துவளுகிறது. சற்றே நேரத்தில், இந்த ‘ஃபார்முலா இல்லாமை’ இத்தனை அழகா என்று வியந்து போகிறோம்!
ஹீரோவுடன் அந்த கிராமத்துக்குள் நுழைந்து ஒவ்வொருத்தரையா சந்திச்சிட்டே வர்றோம். கொஞ்ச நேரத்துல பார்த்தால், அந்தப் பஞ்சாயத்து பிரசிடெண்ட் வீட்டில திண்டில நாமும் உட்கார்ந்து இருக்கிறோம். எப்படி வந்தோம்னே தெரியல. அப்படி ஒரு இயல்பான மூவ்மெண்ட்.
ஹீரோவின் perspective-ல் தொடங்கிச் சென்றது, கொஞ்ச நேரத்தில் எல்லாருடைய பார்வையிலும் நகர்கிறது. ஹீரோயின்னு ஒருத்தர் இல்லாம எட்டு எபிசோட்... ஆஹா நாம் காண்பது என்ன எபிசோடா அல்லது எபிக்கா?
எத்தனை இன்னஸண்ட் ஆக இருக்கிறதோ அத்தனை விவரமாக! எத்தனை எளிமையாக இருக்கிறதோ அத்தனை ஆழமாக!
12 சோலார் விளக்கு எங்கே போடணும்ன்னு தீர்மானிச்சாச்சு. 13-வதுக்காகத்தான் இந்த மீட்டிங் என்று ஆரம்பிக்கிறது ஒரு எபிஸோட். ஹீரோவுக்கு படிக்க லைட் வேணும். அவன் வேலை பார்த்து தங்கியிருக்கும் பஞ்சாயத்து ஆபீஸ் முன்னால் போடச் சொல்ல, பேய் பிடிக்கிற மரத்தின் பக்கத்துல போட்டா ஊரார் பயம் அகன்று வோட்டு குவியுமேன்னு பிரசிடெண்ட் சொல்ல... ஒரே வழி, மக்களின் அந்த பயத்தை அகற்றறதுதான்னு ஹீரோ, பேயின் பூர்வாங்கத்தை தூர் வாங்கக் கிளம்புவதும், சந்திக்கும் இயல்பான வினோதங்களும் சந்திப்பவர்களின் வினோதமான இயல்புகளும்... கச்சிதமான கதை வட்டம்.
நேர்த்தியா இழை பின்னின பட்டுச் சேலை மாதிரி கதைகள். பாந்தமாப் போட்ட பார்டர் மாதிரி ஊடாடும் காமெடி. அந்தந்த எபிசோடின் மையக் கதைக்கு சம்பந்தமில்லாம ஒரு வார்த்தை, வசனம் வரணுமே? என்னா கவனம்யா!
யாருய்யா அது அந்த பஞ்சாயத்து பிரசிடெண்ட் கணவர்? பாலையாவை பார்வையிலேயும் ரங்காராவை வார்த்தையிலேயும் கொண்டு வருகிறார். நட்புக்கும் குடும்பத்துக்கும் இடையே, பாலிடிக்ஸ்க்கும் நியாயத்துக்கும் இடையே புருவத்தை நெறிப்பது சுவாரசியமாகவும் அழகாகவும் இருக்கிறது.
டௌரி வாங்கமாட்டேன்னு சொல்லும் ஹீரோவை வரனாக்க ஆசை அவருக்கு. அவன் சொல்ற மாதிரி ஒரு லட்சம் ஸாலரி வாங்குவானா? பரிட்சையில தேறணும்னா பிரைய்ன் வேணும்கிறாளே மனைவி? இருக்கா பார்த்துடுவோம்னு கேள்வியைக் கொடுத்து யுவர் டைம் ஸ்டார்ஸ் நவ் சொல்லும் பிரசிடெண்டு புருஷன்! அவர் குழம்பும்போது கூடவே குழம்புகிறோம். தவிக்கும்போதும் கூடவே நாமும்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைக்கிற மாதிரி அந்த கடைசி எபிசோட். ஒண்ணுமே சொல்ல வேண்டாம் அதைப் பத்தி. பார்த்துத்தான் ரசிக்கணும்.
எந்த இடத்திலும் தன்பால் கவனம் ஈர்க்காத கேமரா! அதுதானே நல்ல கேமரா மேனுக்கு இலக்கணம் என்பார் பிரபல காமிராமேன் மார்கஸ் பார்ட்லி?
நாடகத்தனமான நடிப்பு மருந்துக்குக் கூட இல்லையே என்று வருந்துகிறவங்களுக்கு ஆறுதலாத் தேடினால் ரிங்குவின் அம்மா பாத்திரம் மட்டும் ஆங்காங்கே சற்று ஆறுதல் வழங்குகிறது.
அத்தனை விஷயங்களும் மாற்றாத அவன் மனதை மாற்ற வரும் பெண் , ஆமா நாம தேடிக்கொண்டே இருந்த பெண் வருகிறாள்... எப்போ? அது சஸ்பென்ஸ்!
மொத்தத்துல நாம எதைப் பார்த்தெல்லாம் இதுவரை கைதட்டிட்டு, ரசிச்சிட்டு இருந்திருக்கோம்னு நாண வெச்சிடுது. எபிசோட் எட்டையும் பார்த்தபின் பழகிய நிஜ மனிதர்களைப் பிரியும் உணர்வு தோன்றுவது தொடருக்கும் வெற்றி, நமக்கும் திருப்தி என்கிறது.
><><

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

பொதுவாக சீரியல் எதுவும் பார்ப்பதில்லை - அதிலும் இந்த அமேசான் ப்ரைம் போன்றவற்றில் கணக்கே இல்லை!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!