Wednesday, June 16, 2021

உடை முக்கியம்!


தம்பாட்டுக்கு, தம் பாட்டுக்கு சாக்ஸபோனும் டபிள் பாஸும் வாசித்துக்கொண்டிருந்த ஜோவும் ஜெர்ரியும் வில்லன் செய்த கொலை ஒன்றைப் பார்த்து விடுகிறார்கள். அதை வில்லன் பார்த்துவிட, ஊரைவிட்டு எப்படி தப்புவது? போடு பொம்பளை வேஷம். பெண்கள் இசை கோஷ்டி ஒன்றில் பெண் வேடத்தில் சேர்ந்துகொண்டு கொண்டு ரயிலேறி விடுகின்றனர். தலைவி கேன் (மர்லின் மன்றோ) மீது மையல் கொண்டு, காட்ட முடியாத காதலில் அவதிப்படுகின்றனர். அவளோ ஒரு மில்லியனேரை மணக்கும் திட்டத்தில் மிதப்பாக! என்ன செய்வது? விழிக்கிறான் ஜோ. போடு இன்னொரு (ஆண்) வேஷம்! பணக்கார பிசினஸ்மேனாக! மீன்வைல் ஜெர்ரியோ 'அவளை' அடையத் துடிக்கும் நிஜ பணக்காரன் ஒருவனிடம் மாட்டிக் கொள்கிறான். அந்தச் சமயம் பார்த்து ஒரு ரகசியக் கூட்டத்துக்காக அங்கே வரும் வில்லன் கொலை செய்யப்பட அதையும் பார்த்து தொலைத்து விடுகிறார்கள் ஜோ-ஜெர்ரி. இப்ப இந்த ஊரை விட்டும் ஓட வேண்டும்... காதல்?

‘Some Like It Hot’ என்ற இந்த 1959 ஃப்ரேம் டு ஃப்ரேம் காமெடியில் ஜோவாக வந்து ஜோராகக் கலக்கியவர்...
Tony Curtis. இன்று பிறந்த நாள்!
பெரும்பாலும் ப்ளே பாயாக வந்து சிரிக்கவைத்த டோனியின் முன்கதை முழுக்க சோகமானது. வறுமை. சரியாக சாப்பாடு போட முடியாத பெற்றோர் தம்பியையும் இவரையும் அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிட, கற்றுக் கொண்ட ஒரே விஷயம் எப்படியாவது தானே மேலே வருவது. தம்பி ஓர் ஆக்ஸிடெண்டில் இறந்துவிட தவித்துப் போனார். நேவியில் சேர்ந்தபோது இரண்டாம் உலக யுத்தம். வெளிவந்ததும் நடிப்பு பள்ளியில் சேர்ந்தார், ஆதர்ச Cary Grant -ஐ மனதில் வைத்து! சில வருடங்களில் அவருடனேயே நடிக்கும் காலம் வந்தது. ‘Operation Petticoat’
Gregory Peck, Kirk Douglas, Burt Lancaster, Anthony Quinn, Robert Mitchum, Frank Sinatra... அத்தனை பேரும் மறுத்த பாத்திரம் அது. மறுக்காத மார்லன் பிராண்டோவுக்கு தேதி கிடைக்கவில்லை. இவரிடம் வர, விரும்பி ஏற்ற படம்தான் Sidney Poiteur -உடன் நடித்த ஸ்டான்லி க்ராமரின் ‘The Defiant Ones’. இருவரும் விலங்கால் பிணைக்கப்பட்டிருக்க சிறைக்கு அவர்களை எடுத்து செல்லும் டிரக் விபத்துக்குள்ளாகிறது. ஒருவரை ஒருவர் பிடிக்காத இருவரும் அந்த விலங்குடனேயே சேறும் புதைகுழியும் அடர்ந்த காட்டு வழியில் தப்பிச் செல்வதும் வழியில் சண்டையிட்டுக் கொள்வதும்... மறக்க முடியாத படம். இருவருக்குமே ஆஸ்கார் நாமினேஷன்.
ஆனானப்பட்ட கிர்க் டக்ளஸுடன் நடித்தபோது அந்த இரண்டு படத்திலும் ரசிகர்களை இவரும் தவறாமல் கவர்ந்திருப்பார். ‘Spartacus’ ‘The Vikings’(அந்த இறுதி ஃபைட் த்ரில்லிங், இல்லை?) அசாத்திய காமெடி நடிகரான ஜாக் லெமனுடன் இவர் சேர்ந்தால் கேட்க வேண்டுமா? சீன் பை சீன் நாம் சிரித்த ‘The Great Race’! நடித்த வேடங்களில் ஒன்று மேஜிக் நிபுணர் ஹூடினியாக. மேஜிக் தெரிந்தவர் என்பதால் அனாயாசமாக.
மணந்த ஆறு பேரில் முக்கியமானவர் பிரபல நடிகை Janet Leigh இவரது நாலு புத்திரிகளுமே நடிகையர். ரொம்ப பிரபலம் அதில் Jamie Lee Curtis (‘True Lies’ நாயகியாக வருவாரே அவரேதான்.)
ரொம்ப கவனமாக தேர்ந்தெடுப்பார் படத்தில் அணியும் காஸ்ட்யூம்களை. கற்றுக் கொடுத்தவர் பிரபல நடிகர் Lawrence Olivier. ‘உடை முக்கியம்! அது கேரக்டரை இன்னும் மேம்படுத்த உதவும்!’
><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!