Wednesday, June 23, 2021

வித்தியாசம். விறுவிறுப்பு. நகைச்சுவை...



ஹார்ட் அட்டாக்கில் இருந்து மீண்டு வந்த வக்கீல் ராபர்ட்ஸ் நிராதரவாக நிற்கும் லியோவின் கேஸை எடுத்துக்கொள்கிறார். ஒரு பணக்கார பெண்மணியை பணத்துக்காக கொன்றுவிட்டதாக அவன் மேல் வழக்கு. மனைவியே அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல வருகிறாள். அப்படியும் அவனைக் காப்பாற்றிய தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இவர்...

நினைவுக்கு வருகிறதா அகதா கிரிஸ்டியின் ‘Witness for the Prosecution’? பிரமாதமான அந்த நாவலைத் திரையில் படுபிரமாதப்படுத்தியவர் அந்த டைரக்டர். அதைப் பார்த்துவிட்டு நிறைய பேர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கிடம் அவர் படம் என்று நினைத்து விட்டு பாராட்டினார்களாம்.
அந்த டைரக்டர்... Billy Wilder. ஜூன்22. பிறந்த நாள்!
1950, 60 களின் பத்துப் பன்னிரண்டு புகழ் பெற்ற படங்களை அடுக்கினால் அதில் இவர் படம் ஒன்றிரண்டாவது இருக்கும். மொத்தம் 22 முறை ஆஸ்கார் நாமினேஷன்! அவார்டை வாங்கியது அதில் ஏழு முறை. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிட்யூட் தேர்ந்தெடுத்த 100 சிறந்த படங்களில் நாலு இவருடையது.
இவருடைய எல்லா படங்களுக்கும் மூன்றே ஒற்றுமை. வித்தியாசம். விறுவிறுப்பு. ஊடாடும் நகைச்சுவை. ரசிகர்களுக்கு போர் அடிக்க கூடாது என்பதுதான் அவர் தியரி. ‘நான் பார்க்க விரும்புகிற மாதிரி இருக்கும் படங்களையே நான் எடுத்திருக்கிறேன். என் படத்தை பார்த்துவிட்டு ஒரு 15 நிமிஷம் அதைப் பற்றிப் பேச முடிந்தால் அதைவிட வேறென்ன பரிசு?’
இவர் இயக்கியவைதாம் மர்லின் மன்றோவின் அந்த பிரபல ‘The Seven Year Itch’ , & ‘Some Like It Hot’ (1959 இல் இவர் எழுதி இயக்கிய இந்தப் படத்தை இதுவரை வந்ததில் பெஸ்ட் காமெடி படமாக 2000 ஆம் வருடத்தில் அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்ந்தெடுத்தது.)
அப்புறம் ஜாக் லெமன் - ஷர்லி மெக்லீன் ஜோடியின் அந்த இரண்டு பிரபல படங்கள்: ‘The Apartment’ & ‘Irma la Douce’ (ஹிந்தியில் மனம் கவர்ந்த ‘மனோரஞ்சன்’) கிர்க் டக்ளஸின் ‘Ace in the Hole’... ஆட்ரி ஹெப்பர்னின் ‘Sabrina’...
ரயில் டிக்கட்டுக்கு பணம் இல்லாத நாயகி சின்னப் பெண்ணாக நடித்து அரை டிக்கட் எடுப்பார் இவரது ‘The Major and the Minor’ 1942 படத்தில். அந்த வேடத்தில் ஜெர்ரி லூயி நடிக்க ‘You’re Never Too Young’ என்று 1955 இல் எடுத்து அதுவும் சக்கைப் போடு போட்டது.
‘யார் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையே அவர்தான் மிகச்சிறந்த டைரக்டர்.’ என்னும் இவர், வளரும் இயக்குனர்கள் உணரும் வார்த்தைகள் நிறைய சொல்கிறார்:
‘உங்கள் உள்ளுணர்வின்படி செய்யுங்கள். தப்பாக போனாலும் அது உங்களுடையதாக இருக்கும்.’
‘ஒரு நடிகர் கதவை திறந்து கொண்டு வந்தால் ஒன்றும் இல்லை. ஜன்னல் வழியாக நுழைந்தால் அது ஒரு சம்பவம்!’
‘க்ளோஸப் என்பது ஒரு துருப்புச் சீட்டு.’
‘தனித்தனியே பார்த்தால் ஆடியன்ஸ் ஒரு இடியட்டாக தோன்றும். ஆனால் மொத்தமாக பார்த்தால் அவர்கள் ஒரு ஜீனியஸ்.’
ரிட்டையர் ஆன பிறகு டைரக்ட் செய்ய மிகவும் ஆசைப்பட்ட படம் Schindler's List ஆனால் ஸ்பீல்பர்க் -க்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.
1970 களில், ‘என்ன இந்தக் காலத்தோடு அவுட் அஃப் டச் ஆகி விட்டீர்களே என்று கேட்டதற்கு இந்தக் காலத்தோடு டச் ஆக யார் விரும்புகிறார்கள்?’ என்றாராம்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் சிறப்பு.

Thulasidharan V Thillaiakathu said...

சிறப்பான தகவல்கள். படங்களின் பெயரையும் குறித்துக் கொண்டோம்

கீதா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!