Monday, January 25, 2016

நம்பிக்கை நம் மீது...(நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 97
  
”இப்பவாவது கிளம்பினாயாயே?” என்றான் தியாகு. பைக்கை வெளியே எடுத்தான் வினோத் சிரித்தபடியே.
ரொம்ப நாளாக அவன் மனைவி கேட்டிருந்தாள் பெட் ரூமில் ஒரு ஏ.சி. வைக்கவேண்டுமென்று. நண்பனுடன் அதை வாங்கி வரப் புறப்பட்டான். வாசலில் பைக் தட்டிற்று. லேசாக சாய்ந்தது பிடிக்கு நிற்காமல் சரிந்தது. தடுமாறி கூடவே விழத்தெரிந்த வினோதை இவன் பிடித்துக்கொண்டான். 
”சே, தடங்கல் ஆயிட்டுதே... அடுத்த வாரம் போகலாம்.”  நிறுத்திவிட்டான் வினோத் பயணத்தை.
”அதெல்லாம் ஒண்ணுமில்லே,  கிளம்புடா!” சொன்னால் கேட்கணுமே? யமுனா முகம் வாடிற்று
”இல்லேடா, சகுனம் சரியில்லே. நிச்சயமா இன்னிக்கு நமக்கு விஷயம் ஒழுங்கா நடக்காது.”
”எத்தனை மாசமாச்சு அவள் கேட்டு. இன்னும் தள்ளிப்போட்டா சரியில்லை! நீ கிளம்பித்தான் ஆகணும்.”
அரை மணி நேர போராட்டத்துக்குப் பின் அரை மனதாக கிளம்பினான் வினோத்.
வழி நெடுக புலம்பல் ”பாரு ஏதாச்சும் ஆக்சிடெண்ட்ல மாட்டப்போறோம்...” 
கடையில்... ”உட்காருங்க சார்.” ஒவ்வொரு மாடலாக விளக்கியபோது புறப்பாட்டின் தயக்கம் எல்லாம் மறந்து கலகலப்பாக ஆகிவிட்டான் வினோத். ”பாரு, இதுதான் பெஸ்ட் ஆஃபர்னு நினைக்கிறேன்,” என்று ஒரு மாடலை தியாகுவிடம் காட்டினான். ”என்னடா எங்கேயொ பார்த்துட்டு நிற்கிறே?”
அந்த நேரம் அவன் செல் போன் அழைக்க தியாகு பேசினான், ”அப்படியா இதோ வர்றேன். அட்ரஸ் சொல்லுங்க.”
”என்னடா மேட்டர்?”
”ஒண்ணுமில்லே, நீ பார்த்துக் கொண்டிரு. இதோ வந்திடறேன்.” 
அதேபோல் வந்துவிட்டான். குஷியாகப் பேசிக்கொண்டு விஷயத்தை முடித்து வீட்டுக்கு வரும்போது மணி நாலு. 
”இதுக்குப்போய் தயங்கினீங்களே, இப்ப போன விஷயம்  நடந்து முடிஞ்சதா இல்லியா?” முகம் மலர யமுனா.
”ஆமாமா,” என்றான், ”இருந்தாலும் இப்படி ஒரு விஷயம் கரெக்டா நாம் புறப்படும்போது நடக்கிறப்ப எப்படி அதை ஒரு சகுனமாக எடுக்காமல் இருப்பது? பைக் சரிந்து விழுந்து.. ஏதோ நீ பிடிச்சதால கீழே விழாம தப்பி...” 
”அதை ஏன் நல்ல முறையில் எடுத்துக்கக் கூடாது? ஒரு சின்ன சறுக்கல் நேர்ந்தது, ஆனா அதிலேர்ந்து தப்பினோம்னா அதை நல்லபடியா எடுக்கலாமே ஏதும் பிரசினை நேர்ந்தாலும் அதிலேர்ந்து வெற்றிகரமா மீள்வோம்னு? அப்படித்தான் எதையும் நம்பிக்கையோடு எடுத்துக்கணும். எந்த ஓர் விஷயமா போனாலும்  நாம எதிர்பார்க்கிற மாதிரியேவா எல்லாமும் நடக்கும்? சின்னதோ பெரிதோ பிரசினை வரத்தான் செய்யும். அதை சமாளிக்கிறோமாங்கிறதுதான் முக்கியம். அதுக்கு நம்மிடம் இருக்கவேண்டியது  நம் மீதான நம்பிக்கை. நடக்கிற சின்ன தடங்கல்கள் மீதல்ல.” என்றவன் சிரித்தான் 
”என்னடா சிரிக்கிறே?’
”இப்ப கூட ஒரு விஷயம் நடந்தது. போகிற வழியில உன் செல்லைத் தவற விட்டுட்டே. கடையில பேசிக்கிட்டிருக்கும்போதே உன் பாக்கட்டைக் கவனிச்சு நான் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ் ஆனேன். உன்கிட்ட சொன்னா அவ்வளவுதான், நான் அப்பவே சொன்னேன்னு ஆரம்பிச்சுடுவே. கம்முனு இருந்தேன். எனக்கு ஒரு போன் வந்ததில்லையா, செல்லை கண்டெடுத்த  நல்ல மனிதர்தான் கூப்பிட்டது,  அதில கடைசியா  நீ பேசியிருந்த என் நம்பரைப் பார்த்துட்டு! ஓசைப்படாம போய் வாங்கி வந்துட்டேன்.”
”ஓ அதைத்தான் அங்கே  டேபிளில் வெச்சுட்டேன்னு என்கையில கொடுத்தியாக்கும்?” 
”ஆமா, வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்லிக்கலாம்னு.” 
”ஆஹா, நல்ல பாயிண்ட். இதை மறக்கவே முடியாது!” 
”இனி அப்படித் தயங்கவும் முடியாது,” என்றாள் அவள்.  
(’அமுதம்’ டிச.2014 இதழில் வெளியானது) 

7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல ஜில்லென்ற கருத்துள்ள A C கதை.

//இதை மறக்கவே முடியாது!”//

உதாரண விளக்கமும் அருமை.

//(’அமுதம்’ டிச.2014 இதழில் வெளியானது) //

பாராட்டுகள் + வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் அறிவுரை....

‘தளிர்’ சுரேஷ் said...

சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!

சேட்டைக் காரன் said...

:-) good one

அப்பாவி தங்கமணி said...

Nice story :)

ராமலக்ஷ்மி said...

அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!