Monday, January 18, 2016

அந்தத் திருப்தி... (நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம்... 96

ராத்திரி பதினோரு மணிக்கு லேப்டாப்பையும் திறந்து வைத்துக் கொண்டு கையில் போனையும் எடுத்துக் கொண்டு என்ன செய்கிறார் சாத்வீகன் என்று எட்டிப் பார்த்தார் மனைவி மைத்ரேயி.
கேள்வியை முகத்தில் படித்து, ”கௌதமோடுதான் பேசிக் கொண்டிருக்கேன்,” என்றவர் , ”ஆமாடா. காலையிலேர்ந்தே ட்ரை பண்றேன்.. திறக்கமாட்டேங்குது! ... ஆமா, என்னோட மடிக் கணினியேதான்.” என்றார் ஸ்பீக்கர் போனில்.
"ஓஹோ, ரீஸ்டார்ட் செஞ்சு பார்த்தீங்களா?"
"பார்த்துட்டேன். ஆகலே."
"என்ன மேக், மாடல்னு சொல்லுங்க.”
அவர் அதைப் பார்த்து சொன்னார்.
அடுத்த நிமிடமே அவனிடமிருந்து மளமளவென்று வழிமுறைகள்.  அதை க்ளிக் பண்ணுங்க, இதை அழுத்துங்க....
செய்தார்.
”இப்ப திறக்குதா பாருங்க.”
திறந்தது.
”ரொம்பத் தாங்க்ஸ்டா, பட்டுன்னு சொல்லிட்டே,  வொர்க் அவுட் ஆயிட்டுதே..சூபர்! ”
‘புது லேப்டாப் ஆச்சே, ஆடிப்போயிட்டார் உங்கப்பா!”
”ஏம்பா, அதான் நாங்கல்லாம் இருக்கோமில்லே?
”பார்த்தியா பத்து நிமிஷத்தில சால்வ் பண்ணிட்டான்...”
போனை வைத்தார். முகத்தில் பெருமிதம் பொங்க மனைவியைப் பார்த்தார். 
”சரிங்க ஆனா  ஒரு நேரம் போல இருக்குமா? இப்ப அவன் என்ன வேலையில இருந்தானோ? இப்படி திடீர் திடீர்னு அவனைக் கூப்பிட்டு வேலை கொடுத்தால்...” என்ற மனைவி மெதுவாக, ”ஆமா,  நீங்களும்  நாலு விஷயம் தெரிஞ்ச  நபர்தானே? லேப்டாப்ல ஒரு ப்ராப்ளம்னா நீங்களே முயற்சி பண்ணி தீர்க்க முடியாதாக்கும்?”
”ஏன் முடியாமல்... கூகிள்ல இதைப் போட்டுப் பார்த்து வழி என்னன்னு தெரிஞ்சுக்கிட்டும் சரி பண்ணிடலாம்...”
’ஐய, பின்னே ஏன் இப்ப பிள்ளையை மண்டையை உடைக்க வெச்சுட்டு?...   அதை செஞ்சிருக்கலாமேங்க?” 
”அதைத்தானே இப்ப அவனும் செய்து சொன்னான்?” என்றார் கூலாக.
”அப்படியா, அப்ப நீங்க ஏன் செய்யலே?”
”ஒரு காரணம் இருக்கு. ஒரு பிரசினையில  நான் ஒண்ணும்  பண்ண முடியாம அவன்கிட்ட கேட்க, அவன் அதுக்கு ஒரு வழி சொல்லி,  அதை சரிசெய்து கொடுக்கிறதில அவனுக்கு ஒரு திருப்தி எற்படுமில்லையா? அதுக்காகக்த்தான்!” 
”அழகாவே யோசிச்சிருக்கீங்க...”
(’அமுதம்’  டிசம்பர் 2014 இதழில் வெளியானது)


8 comments:

ரிஷபன் said...

உங்க எழுத்து படிச்சா எங்களுக்கு வரும் திருப்தி போல

வை.கோபாலகிருஷ்ணன் said...

இவருக்கும் திருப்தி .... அவருக்கும் திருப்தி .... இதைப்படித்த எங்களுக்கும் திருப்தியோ திருப்தி.

//(’அமுதம்’ டிசம்பர் 2014 இதழில் வெளியானது)//

பாராட்டுகள். வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமை!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அட! நல்ல கதை சகோ

Thulasidharan V Thillaiakathu said...

அழகான அருமையான கதை..

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே அருமை

ராமலக்ஷ்மி said...

அருமை :)!

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம், ஆனால் எல்லாப் பிள்ளைகளும் இப்படி உதவுவாங்களா? சந்தேகமே!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!