Saturday, January 9, 2016

எடையற்ற சுமை...(நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம்... 95

மாமாவையும் அழைத்துக் கொண்டு அந்த பதிவர் கூட்டத்துக்கு போகலாம் என்று வந்திருந்தான் கிஷோர். மணி ஐந்து. தெரியும் இந்த நேரத்தில் அவர் தன் சிறிய தோட்டத்தில் இருப்பார் என்று. தோட்டக் கலையில் அவருக்குள்ள ஈடுபாடு அவனறிவான்.
”இரு, இதோ செடிகளுக்குத் தண்ணீர்... இப்ப முடிஞ்சிடும்...”
அவன் ஒரு செயரைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.  பார்த்தால்...
குழாயிலிருந்து தண்ணீர் மள மளவென்று டிரம்மில் பாய்ந்து கொண்டிருந்தது. கைக்கு ஒன்றாக இரு வாளிகளை வைத்துக்கொண்டு அந்த டிரம்மிலிருந்து நீரை மொண்டு ஒவ்வொரு செடியாகச் சென்று ஊற்றிக் கொண்டிருந்தார்.
என்ன இவர் இப்படி...
அருகில் வந்ததும் கேட்டான். ”என்ன மாமா, இப்படி கஷ்டப்பட்டு வாளிகளை சுமந்துகொண்டு?  இப்பதான் விதவிதமா கிடைக்குதே... ஒரு அரை இஞ்ச் ஹோஸ் வாங்கிக்கொண்டு விட வேண்டியதுதானே? எத்தனை ஈசியா இருக்கும்? இப்படி பாரம் சுமக்க வேண்டாமில்லையா? குழாயில செருகிட்டா அது பாட்டுக்கு பாயுமே?” 
”ஒஹோ?’
”எத்தனை மீட்டர் நீளம் வேணும்னு சொல்லுங்க. நாளைக்கே ஒண்ணு வாங்கிட்டு வர்றேன்.”
"அப்படீங்கறே? சரி, ஒரு நிமிஷம்..."  அவனை உள்ளே அழைத்துப் போனார் ராகவ். முன் அறையைத் திறந்து காட்டினார்.  முப்பதடி நீளமிருக்கும் ஹோஸ் ஒன்று சுருட்டி வைக்கப் பட்டிருந்தது. “நான்தான் எடுத்து உள்ளே போட்டிருக்கேன்...”
இவன் விழித்தான். ”பின்னே ஏன்?”
”இதை செருகிட்டா அதுபாட்டுக்கு பாயும். சும்மா நின்னு செடிக்கு செடி மாத்திட்டிருந்தா போதும். ஆனால் உடம்புக்கு எக்ஸர்சைஸ் கிடைக்காதே? அதான். இந்த ரெண்டு வாளி நிறைய தண்ணீரோட இத்தனை செடிக்கும் நடந்து நடந்து ஊற்றும்போது நல்ல ஒரு உடற்பயிற்சி கிடைக்கும். செடிக்கு தண்ணீர் பாய்க்கிறபோதே நமக்குத் தேவையான ஒரு விஷயமும் கிடைக்கிறதுக்காகத்தான் இப்படி செய்ய ஆரம்பிச்சேன். அரை மணி நேரத்தில் இருநூறு கலோரி வரைக்கும் க்விக்கா பர்ன் அவுட் ஆகும். முடிஞ்சா நீயும் இப்படி செய். கொஞ்சம் குறையும்!” என்றார் அவன் இடுப்புச் சதையை பார்த்தபடியே.
”நல்ல ஐடியாதான் மாமா. ஆனா இது  நமக்கொரு எக்ஸர்சைஸ், கண்டிப்பா பண்ணணும்னு நினைச்சாலேயே செய்ய மனசு வராதே எப்படி நீங்க..”.
”அதுக்கு என்னை மோடிவேட் செய்துகொள்ள இதில ஒரு விஷயம் வெச்சிருக்கேனே?  ட்யூப் வைச்சு ஊற்றறதுக்கு எப்படியும் ஒரு மணி போல ஆகும்.  இதில அரைமணி நேரம்தான் ஆகும். மிச்சமாகிற அந்த அரை மணி!  நமக்கு டயம் முக்கியம் ஆச்சே. அது என்னை வசீகரிச்சு இதை பண்ண வெச்சிடும்.” 
('அமுதம்’ நவம்பர் 2014 இதழில் வெளியானது)

7 comments:

nnnnnnnn said...

அருமையான கருத்து

ரிஷபன் said...

உங்க எழுத்து எப்பவும் எங்களுக்கு மோட்டிவேஷன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நேரமும் மிச்சமாகிறது, அதே நேரம் கலோரியும் எரிந்து போகிறது. நல்லது.

//('அமுதம்’ நவம்பர் 2014 இதழில் வெளியானது)//

பாராட்டுகள். வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
உண்மை
நன்றி நண்பரே

”தளிர் சுரேஷ்” said...

அட! நல்ல யோசனையா இருக்கே! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

அருமை.

Mahi said...

Nice message, but one has to be careful & gentle while watering the plants with a bucket! ��

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!