அன்புடன் ஒரு நிமிடம் - 85.
கோபம், கோபம் அப்படியொரு கோபத்தில் இருந்தான் வினோத்.
பத்து மணிக்கு அந்த விசேஷம். மேலதிகாரி வீட்டு புது மனை புகு விழா. மணி ஒன்பதரை. இன்னும் யமுனா புறப்படவில்லை.
இப்ப கத்தினால் இன்னும் லேட் ஆகும். அவளை அவசரப் படுத்தி, கூடவே ஓடி, கேட்டதை எடுத்துக் கொடுத்து கிளம்ப வழி செய்தான். ’பஸ்ஸில் ஏறட்டும், அப்புறம் பார், வாங்கு வாங்குன்னு வாங்கறேன் உன்னை!’ கறுவிக் கொண்டான்.
”வா வா, ஓடி வா, சீக்கிரம்!”
பஸ் ஆடி ஆடி வந்தது. கூட்டம்.
அடித்துப் பிடித்து ஏறிக் கொண்டார்கள். எப்படியோ சீட்டும் கிடைத்தது இருவருக்கும்.
உட்கார்ந்த உடனே ஆரம்பித்தான்.
“கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு? ரெண்டு வாரம் முந்தியே சொல்லியிருக்கேன்ல அவரு கையிலதான் என் ப்ரமோஷன் முதற்கொண்டு எல்லாம் இருக்குன்னு? அடியோட மறந்துட்டு இன்னிக்கான்னு கேட்கிறியே காலையில? சீரியல்ல வர்ற சீன் ஒண்ணையாச்சும் மறக்கிறியா?
”முந்தா நாளே போய் கடைகடையா ஏறி இறங்கி அலசி அலசி கிஃப்ட் வாங்கிக் கொண்டுவந்து வெச்சேனே, ரெண்டு கண்ணாலும் பார்த்துக்கிட்டுதானே இருந்தே? அது மூளையில ரெஜிஸ்டர் ஆகாதா? பக்கத்து வீட்டில நாலு பிச்சிப்பூ கூடுதலாப் பூத்தால் ஒரு வாரத்துக்கு பேசற அளவுக்கு ரெஜிஸ்டர் ஆகிறதில்ல?
”சரி நான் வந்து சொன்னப்புறமாவது அரை மணி நேரத்தில புறப்படத் தெரியுதா? டிரஸ்லேர்ந்து ஒண்ணொண்ணா தேடி நீ எடுக்குறதுக்குள்ள விடியுது! முக்கால் மணி நேரம் முன்னாடியே போய் நின்னு கூடமாட ஒத்தாசையா இருக்கணும் நாம, இப்ப ஒண்ணரை மணி லேட்டாப் போய் நிக்கப் போறோம் திங்கிறதுக்குன்னே போன மாதிரி! போ போய் நல்ல திண்ணுட்டு வருவோம். அதுக்குத்தானே போறோம்? என்னிக்கு நீ திருந்தப் போறியோ அன்னிக்குத்தான் நாம உருப்படப் போறோம்!”
ஒரு வழியாக திட்டுவதை அவன் முடிக்கவும் அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் வரவும் சரியாக இருந்தது.
கடைசி சீட்டிலிருந்த இவன் பின் வாசல் வழியாக இறங்கினான். முன் சீட்டிலிருந்த அவள் முன்பக்கமாக இறங்கினாள்.
அத்தனை உணர்வையும் வார்த்தைகளாக்கி கொட்டித் தீர்த்ததில் மனம் லேசாகியிருந்தது.
எட்டி சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்தான்.
”அட, இது நல்ல வழியா இருக்கே?” மனதில் சொல்லிக் கொண்டான் அதையும்.
('அமுதம் ஆகஸ்ட் 2014 இதழில் வெளியானது)
><><
2 comments:
அட...! இதுவும் நல்ல வழியே...!
நல்ல வழிதான்
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!