Wednesday, July 15, 2015

உடனுக்குடன்...

அன்புடன் ஒரு நிமிடம் - 84
 இளங்குளிரை அள்ளித் தெளித்த திவலைகளும் அதில் தெரிந்த வானவில்லுமாக அருவியில் குளிக்க அட்டகாசமாகத்தான் இருந்தது.
”எத்தனை நாளாச்சு இப்படி குளிரக் குளிரக் குளித்து! இல்லையா மாமா?”
”உன் டென்ஷன் எல்லாம் இறங்கிடுச்சா கிஷோர்?”
”ரொம்பவே!”
”அதனாலதான் இங்கே அழைச்சிட்டு வந்தேன். எனக்கும் ஒரு சேஞ்ச்.”
கம்பெனியில் ஒரே குடைச்சல் என்று அவரிடம் வந்தான் நேற்று. யாரிடமும் வேலை ஆகவில்லை. என்று குறைப்பட்டுக் கொண்டான். ”டீம் லீடர்!.ஆனா என் வார்த்தைக்கு மதிப்பே இல்லை. சே!”
அவர் பாட்டுக்கு இங்கே அழைத்து வந்துவிட்டார்.
குளித்துவிட்டு அறைக்கு வந்ததும் அவர் தன் பனியன், கைலியைத் துவைக்க பாத்ரூமுக்குள் நுழைந்துவிட்டார்.
அவனுக்கும் தன் துணிகளைத் துவைத்து விடலாமே பேசிக்கொண்டே என்று தோன்றிற்று.
”அட, ரெண்டு பேரும் ஒரே டிசைன் கைலிதான் கொண்டாந்திருக்கோம்.”
”மறந்திட்டியாக்கும்? போன தீபாவளிக்கு ஒரே கடையிலதானே வாங்கினோம்?”
கிட்ட கிட்ட வைத்து அலசும்போதுதான் கவனித்தான். அவனுடையது ரொம்பவே பழசாகக் காட்சியளித்தது. ஒப்பிட்டால் கொஞ்சம் அழுக்காக. அவர் கைலியோ இப்போது பார்த்தாலும் புதிதாக… எப்படி? எப்படி?
இத்தனைக்கும் அவரை விட அவன் கைலி அணியும் நேரம் மிகக் குறைவு.
அனேகமாய் பேண்ட்ஸ்தான். அவரோ வீட்டிலிருக்கிற நேரமெல்லாம் கைலிதான்.
அவரிடமே கேட்டான். ”என்ன மாமா இது, புதுசா அப்படியே இருக்கே, உபயோகிக்கிறதே இல்லையா?”
”நீ எத்தனை நாளைக்கு ஒருமுறை அலசுவே இதை?” என்றார்.
”ரெண்டு அல்லது மூணு நாளைக்கு.”
”அதான் அந்த வித்தியாசம்.  நான் தினமும் இதைத் துவைக்கப் போட்டுடுவேனாக்கும். ஸோ இதில எட்டிப் பார்க்கிற அழுக்கு, இதில் தங்க அவகாசமே இருக்காது. அந்த சமயத்திலேயே துவைக்கிறதால இது எப்பவும் வெள்ளையா புதுசா இருக்கும். அவ்வளவுதான்! சிம்பிள்.”
”அட, இது தெரிஞ்சா நானும் உடனுக்குடன் வாஷ் பண்ணி எடுத்திருப்பேனே? இப்ப இந்த வித்தியாசமே தெரிஞ்சிருக்காதே?”
”ஆமா. இனி அதை செய்தாலும் இதை பழைய கலருக்கு கொண்டு வர முடியாது.  ஆரம்பத்திலிருந்தே பண்ணணுமாக்கும். சரி, இதிலேர்ந்து உனக்கு இன்னொரு விஷயமும்…?”

”ஆமா. புரியுது. நான் டீம் லீடர் ஆன முதல் நாளிலிருந்தே என் டீம் ஆட்களிடம் சரியான கண்ணோட்டத்தோடு நடந்து கொண்டிருந்தால், ஒவ்வொரு நிலையிலும்/ஸ்டேஜிலும் எக்ஸாட் ஆக என்ன ரிசல்ட் வேண்டும்கிறதை தெளிவா சொல்லியிருந்தால், அவர்கள் ஒத்துழைப்பு எனக்கு சரியாகக் கிடைத்திருக்கும்னு நினைக்கிறேன்.” என்றான். 
(’அமுதம்’ ஆகஸ்ட் 2014 இதழில் வெளியானது.)
><><><
(படம் - நன்றி: கூகிள்)

4 comments:

கோமதி அரசு said...

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! சொன்னவிதம் எத்தனை சிம்பிள்...!

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான அறிவுரை! வாழ்த்துக்கள்!

கீதமஞ்சரி said...

எளிமையாய் அதே சமயம் ஆழமாய்... கதை வழி மனம் புகும் செய்தி. நன்றி ஜனா சார்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!