Tuesday, July 31, 2012

அந்த ஓர் எழுத்து...அன்புடன் ஒரு நிமிடம் - 13


“இந்த சித்தப்பா அநியாயத்துக்கு இன்னொசென்டா இருக்கார் டாட்!!” என்றான் பரசு வந்ததும் வராததுமாக.

“என்ன பண்றார்? - வாசு.

ஒரு சட்டை தைக்கக் கொடுத்தாலோ, ஸ்பெக்ட்ஸ் ஆர்டர் பண்ணினாலோ முதல்லேயே முழுத் தொகையையும் கொடுத்திடறார். எதையாவது கடையில ஆர்டர் பண்ணினா அட்வான்ஸ் எல்லாம் கொடுக்க மாட்டார். ஃபுல் அமவுண்ட்தான்! கேட்டால் அப்பதான் அவங்க உற்சாகமா நல்ல பண்ணிக் கொடுப்பாங்கன்னு சொல்றார். ஆனா அப்புறம் டயத்துக்கு அவங்க டெலிவர் பண்ணலைன்னா இவர்தானே டென்ஷனோடு அலையணும்...?

“நிஜமாவா?

“ஆமா. எத்தனையோ முறை சொல்லியாச்சு, பழக்கத்தை மாத்திக்க மாட்டேங்கிறார்!”

“பழக்கம்?" வாசு யோசித்தார். “நீ சொல்றதிலே ஒரு எழுத்து மாறியிருக்குமோன்னு தோணுது.”

ஒரு எழுத்து? இவனுக்கு புரியவில்லை.

அவர் கேட்டார், “உனக்கு மரகதராஜை ஞாபகமிருக்கா?

“யாரு? நாம கோயம்பத்தூரில இருக்கும்போது அடிக்கடி உங்களை வந்து பார்ப்பாரே அவர்தானே? எப்பவும் ஊதாக் கலர்ல சட்டை போட்டிருப்பார்?

“அவனேதான். அவன் ஒரு ரியல் எஸ்டேட் மீடியேட்டர். பிளாட்டு, வீடுன்னு டீல் பண்ணுவான். எப்பவும் ரொம்ப பிசியா இருப்பான்.”

“ஆமாமா. நீங்ககூட, வாய்யா ஆயிரத்தி ஒண்ணுன்னு கூப்பிடுவீங்களே?

“அட,அதுவும் ஞாபகம் வெச்சிருக்கியே? அதைப்பத்தித்தான் சொல்லவந்தேன். அவனை ஏன் அப்படி கூப்பிடுவேன் தெரியுமா? அவன் ஒரு பிளாட்டைப் போய்ப் பார்க்கிறான்னு வெச்சுக்க, இடத்தை ஆராய்வான். உடனே ஒரு விலை பேசி ஆயிரத்தி ஒரு ரூபாய் அட்வான்ஸை நீட்டி முப்பது நாள்ல முடிச்சுடறேன்னு சொல்லிடுவான்.”

“ஓஹோ? அதை அப்படியே வேற ஆளுக்கு மேல் லாபம் வெச்சு வித்துடவா?

“அதான் கிடையாது. எப்படியோ ஒரு ஆளைக் கண்டு பிடிச்சு அதை அந்த விலைக்கு விற்கத்தான் அலைவான்.”

“அப்புறம் ஏன் டாட் அவர் வீணா கமிட் பண்ணனும்? அத்தனை சில நாட்களுக்குள்ளே ஒரு genuine buyer –ஐப் பிடிச்சு வாங்க வைக்கிறதுக்கு என்ன கியாரண்டி இருக்கு? பத்து நாளிலேயும் கிடைக்கலாம், ஐம்பது நாளிலேயும் கிடைக்கலாம். ஏன், கிடைக்காமலும் போகலாம். அவரோட இந்த பழக்கம் அர்த்தமில்லாதது.”

“அப்படித்தான் நானும் நினைச்சேன், நீ இப்ப சொன்னதைத்தான் நானும் அவன்கிட்டே கேட்டேன். ஆனா அவன் சொன்ன பதில்? என்னங்க, இத்தனை பெரிய பிசினஸ்ல இறங்கியிருக்கேன், நீங்க சொல்றது எனக்குத் தெரியாதா என்னன்னு சிரித்தான். தெரிஞ்சேதான் இதைப் பண்றேனாக்கும் என்றான். ஏன்னும் அவனே சொன்னான். கமிட்மெண்ட்! அது இருந்தாத்தான் வேலை நடக்கும். அதான் முதல்ல துணிஞ்சு கமிட் பண்ணிடறேன். அட்வான்ஸ் பணத்தை இழந்துடுவோம்கிற பயம் நம்மை உசுப்பிவிடும். அப்புறம் எங்கிருந்தோ எப்படியோ சக்தி, ஐடியா எல்லாம் தோன்றி... விஷயம் நடந்துடும். 100க்கு 100 நடக்காட்டியும் 90 நடந்துடும். அப்படி பத்திலே ஒண்ணு மிஸ்ஸாகிறதும் அடுத்த முறை வேகம் இன்னும் கூடுவதற்கு ஓர் உந்து சக்தியா இருக்கும். அதான் இப்படி ஒரு வழக்கம் வெச்சிருக்கேன்னு சொன்னான்."

"ஓ?"

"கவனி, அவன் பழக்கம் இல்லை அது. வழக்கம்! அவனா டெலிப்ரேட்டா வெச்சுக்கிட்ட வழக்கம்!”
<<<>>>
('அமுதம்' ஜூலை 2012 இதழ்)

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஒரு எழுத்தில் எத்தனை வித்தியாசம்...

மிக நல்ல கட்டுரை.. பகிர்வுக்கு நன்றி சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான உதாரணத்துடன் கூடிய நீதிக் கதை.

//அட்வான்ஸ் பணத்தை இழந்துடுவோம்கிற பயம் நம்மை உசுப்பிவிடும். அப்புறம் எங்கிருந்தோ எப்படியோ சக்தி, ஐடியா எல்லாம் தோன்றி... விஷயம் நடந்துடும். 100க்கு 100 நடக்காட்டியும் 90 நடந்துடும். அப்படி பத்திலே ஒண்ணு மிஸ்ஸாகிறதும் அடுத்த முறை வேகம் இன்னும் கூடுவதற்கு ஓர் உந்து சக்தியா இருக்கும். //

சூப்பர்!

நல்ல பழக்கமும் வழக்கமும் ஒரே முழக்கமாக இங்கே! பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

அமுதத்தில் வந்த அமுதத்திற்கும் வாழ்த்துகள். vgk

ரேகா ராகவன் said...

ஓரெழுத்து மந்திரம் அபாரம்.

Ramani said...

"கவனி, அவன் பழக்கம் இல்லை அது. வழக்கம்! அவனா டெலிப்ரேட்டா வெச்சுக்கிட்ட வழக்கம்!”//

ஒரு எழுத்து வித்தியாசத்தில்தான்
எத்தனை வித்தியாசமிருக்கிறது
அருமையான பய்னுள்ள பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 2

தி.தமிழ் இளங்கோ said...

பழக்கம் வழக்கமாக மாறுவதும், வழக்கம் பழக்கமாக மாறுவதும் எப்போதும் நடப்பதுதான். உரையாடல் பாணி கதையும் படிக்க நன்றாக இருக்கிறது.

“ஆமாமா. நீங்ககூட, வாய்யா ஆயிரத்தி ஒண்ணுன்னு கூப்பிடுவீங்களே?”

நல்ல நகைச்சுவை.

தி.தமிழ் இளங்கோ said...

திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்
“SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

"கவனி, அவன் பழக்கம் இல்லை அது. வழக்கம்! அவனா டெலிப்ரேட்டா வெச்சுக்கிட்ட வழக்கம்!”//

பழக்கமே வழக்கமாய் போய்விட்டது.
கதை அருமையான கருத்தைச் சொல்கிறது.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

பழக்கம் அருமையாய் நடைமுறைக்கு வந்த வழக்கம் !

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!