அன்புடன் ஒரு நிமிடம் 11.
ஒரு நிகழ்வு. ஒரு பார்வை.
“...அப்படி ஒரு
காட்சியை நான் என் கண்ணால கண்ட பிறகு வேறென்ன முடிவுக்கு வர முடியும்? அவன்
இப்படி நடந்துக்குவான்னு நான் நினைக்கவே இல்லை. ஆனா கண்ணால் கண்ட காட்சி நிஜம் ஆயிற்றே? அதை
என்னால மறக்க முடியலே. மறுக்கவும் முடியலே.”
மகன்
பரசு சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார் வாசு. தன் நண்பனுடன் அவனுக்கோர் வருத்தமான
சம்பவம்.
இவர்
பதில் எதுவும் சொல்லவில்லை. உள்ளபடியே அவனுக்கு என்ன சொல்லி எப்படி விளக்குவது
என்று இவருக்குத் தெரியவில்லை. இரவு மணி எட்டு இருக்கும். இருவரும் ஹாலில்
அமர்ந்து பேசிக்கொண்டு..
ஒரு
வினாடி அங்குமிங்கும் நடை பயின்றவர் அவனிடம், “அதிருக்கட்டும், உனக்கு
ஒரு விஷயம் காட்டணும்னு இருந்தேன். போன வருஷம் என் ஆபீஸில் ஒரு அறையில் புதுசா
டைல்ஸ் போட்டேனே, நீ
அந்த அறையை அப்புறம் பார்த்ததில்லையே? வா, வா!” என்று
அழைத்துப் போனார்.
“நானும் வர்றேனே!”
பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவும் ஒட்டிக் கொண்டார்
அந்த
அறையில் நுழைந்ததும் ஒரு லைட்டைப் போட்டார் வாசு. “எப்படி இருக்கு?”
பார்வையை
தரையெங்கும் ஓட்டினான் பரசு. “அட பாலிஷா நல்ல நல்லாயிருக்கே?”
குனிந்து பார்த்து, “டைல் டிசைன் கூட
ரம்மியமா...”
“ரொம்ப அழகாயிருக்கு இல்லை?”
“ஆமா.”
“ஒரு நிமிடம். இந்த லைட்டையும் போடறேன். இன்னும் கொஞ்சம் வெளிச்சமா
இருக்கும். இன்னும் நல்ல பார்த்து ரசிக்கலாம்.” அவர்
மற்றொரு லைட்டைப் போட ஒளி வெள்ளம் பாய்ந்தது. “இப்ப பார்.
டைல்ஸ் எப்படி இருக்கு?”
கூர்ந்து
பார்த்த இவன் முகத்தில் சலன ரேகைகள். “என்னப்பா, இப்ப இந்த
டைல்ஸ் முன் போல எடுபடலையே? ரூம் இன்னும் பிரகாசமா இருந்தும்?”
அவன்
அப்படி சொன்னதற்குக் காரணம் இருந்தது. இப்போது அந்த டைல்களிலிருந்த சின்னஞ்சிறு
கீறல்கள் பிரகாசமான ஒளியில் பளிச் பளிச்சென்று தெரிந்து உறுத்தியது .
முன்பு
கவர்ந்திழுத்த அழகு பாதிக்கு மேல் குறைந்திருந்தது
“பார்த்தியா? இதே டைல்ஸ் தான் முதல்ல நீ ரொம்ப
அழகுன்னு சொன்னது. இப்ப கூடுதல் வெளிச்சதில் கூர்ந்து பார்க்கையில் அதன் அழகு
குறைஞ்சிட்டது. முதல்ல அது அழகா இருந்ததும் நீ கண்ணால் கண்ட ஒரு உண்மை. அந்த அழகு
இப்ப இல்லை என்கிறதும் ஒரு உண்மை. சரி, இதிலிருந்து நீ என்ன தெரிஞ்சுக்கறே?”
கிஷோர்
யோசித்தான் “கண்ணுக்கு தெரிவதை வைத்து முடிவுக்கு வரக் கூடாதுங்கிறதுதான்! There is more to anything than meets the eye. நான்
பார்த்ததை வைத்து ஒரு முடிவு எடுத்தது தவறு. தக்க உதாரணம் காட்டி எனக்குத் தெளிவை
ஏற்படுத்திட்டீங்க.”
தாத்தா
எழுந்து வந்தார். அதுவரை நடந்ததைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக்
கொண்டுமிருந்தவர்.
“பரசு, அவசரப் படாதே. இது அடுத்த தவறு.. இப்ப
இங்கே பார்த்த இதே காட்சியிலிருந்து நீ இன்னொரு விஷயமும் தெரிஞ்சுக்கலாமே?. அதாவது
எதையுமே ரொம்ப நுணுக்கமா ஆராய்ந்தால் அது முன்னை விட அதிருப்தி தரலாம். சரியா?”
‘அதுவும் சரிதான்.” குழம்பினான் பரசு. “அப்படீன்னா நான் முதலில் நினைச்கதோட நின்றிருக்கணுமா தாத்தா?”
“கவனி. இப்ப நான் சொல்ல வருவதை. எந்த உதாரணத்தையும் ஒரே கண்ணோட்டத்தில்
தான் பார்க்கணும் என்றில்லை. இப்ப இங்கே நடந்த நிகழ்வை ரெண்டு விதமா ஏன் மூணு நாலு
விதமா கூட பார்க்கலாம் என்பதுதான் நான் இப்ப விளக்கியது.”
“அப்படீன்னா நாம தெரிந்து கொள்ள வேண்டியது?” ஏக
காலத்தில் அப்பா மகனிடமிருந்து கேள்வி...
“ஒண்ணே ஒண்ணுதான்!” என்றார் தாத்தா அமைதியாக. “எந்த நிகழ்வையும் நாலு விதமாப் பார்த்து பொருள் தெரிந்துகொண்டு நம்
அறிவையும் அனுபவத்தையும் வைத்து யோசித்து அதைப் புரிந்துகொள்ள வேண்டும்
என்பதுதான்!”
('அமுதம்' இதழ் - ஜூன் 2012)
<<<>>>
11 comments:
// There is more to anything than meets the eye. //
Exactly....
மகன், அப்பா, தாத்தா என்ற மூவரிடமிருந்தும் நல்ல பாடம் கற்றுக்கொண்டோம்....
“எந்த நிகழ்வையும் நாலு விதமாப் பார்த்து பொருள் தெரிந்துகொண்டு நம் அறிவையும் அனுபவத்தையும் வைத்து யோசித்து அதைப் புரிந்துகொள்ள வேண்டும்
பயனுள்ள பார்வைப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
//“எந்த நிகழ்வையும் நாலு விதமாப் பார்த்து பொருள் தெரிந்துகொண்டு நம் அறிவையும் அனுபவத்தையும் வைத்து யோசித்து அதைப் புரிந்துகொள்ள வேண்டும்//
கதையில் உள்ள நீதிக்கருத்து அழகு. தாங்கள் அதை எடுத்துச்சொன்ன விதம் அதைவிட அழகோ அழகு. பாராட்டுக்கள்.
ஃஃஃஃThere is more to anything than meets the eyeஃஃஃஃ
கதை படித்து முடித்தாலும் இந்த வசனத்தை திருடிப் போகிறேன்...
ஆமா தாத்தா சொல்வது உண்மைதான்.
நடந்த நிகழ்வை ரெண்டு விதமா ஏன் மூணு நாலு விதமா கூட பார்க்கலாம்
புத்தியை குறுக்கிக் கொள்ளக் கூடாது.. என்று தெளிவாய் சொல்லி விட்டீர்கள்.
ஒரே பொருள் ஒரே இடத்தில் வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு பொருள் தரும். நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல கருத்து.
“ஒண்ணே ஒண்ணுதான்!” என்றார் தாத்தா அமைதியாக. “எந்த நிகழ்வையும் நாலு விதமாப் பார்த்து பொருள் தெரிந்துகொண்டு நம் அறிவையும் அனுபவத்தையும் வைத்து யோசித்து அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்!
”மிகச் சரி
மிகப் பெரிய விஷயத்தை
மிக மிக எளிமையாய் சொல்லிப்போனது
மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்
tha.ma 3
சிந்தித்து செயல் பட்டால் வெற்றி நமதே என்பதை தெளிவாக விளக்குகிறது.
அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் கோணங்கள். என்பதை சுட்டிக்கட்டிருருக்கும் அற்புதமான சிறுகதை
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!